செய்திகள்

23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது வங்கதேச அணி

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
நேற்றுடன் 4 லீக் ஆட்டம் முடிந்து விட்டன. இந்தியா 4 புள்ளியுடன் முதல் இடத்திலும், இலங்கை, வங்காளதேசம் தலா 2 புள்ளியுடன் அதற்கு அடுத்த நிலையிலும் உள்ளன. பாகிஸ்தான்– ஐக்கிய அரபு எமிரேட் புள்ளி எதுவும் பெறவில்லை.
இலங்கை– வங்காளதேசம் அணிகள் மோதிய 5–வது லீக் ஆட்டம்  நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து. இலங்கை அணியில் காயம் காரணமாக மலிங்கா விளையாடவில்லை.
வாங்காளதேசத்தின் தொடக்க ஆட்டகாரர்கள் முகமது மிதுனும், சவுமிய சர்க்காரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மூன்றாவதாக களமிறங்கிய சப்பீர் ரகுமானும், ஆல்ரவுண்டர் அல் ஹசனும் அந்த அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய சப்பீர் 80 ரன்கள் குவித்தார். அல் ஹசன் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 7 விக்கெட்களை இழந்து 147 ரன்களை குவித்தது.
பின்னர், 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணியில் சண்டிமல் மற்றும் தில்ஷான் களமிறங்கினர். 3.1 ஓவர்களில் 20 ரன்கள் எடுத்திருந்த போது, தில்ஷான் 9 பந்துகளில் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சண்டிமால் 37 ரன்களிலும் அவரை தொடர்ந்து ஜெயசூர்யா 26 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும் அந்த அணியில் வீக்கெட் வீழ்ச்சி தொடர்ந்தது. இதனால் இலங்கை அணி 20 ஓவர்களில் 124 ரன்கள் மட்டும் தான் எடுத்தது.
வங்கதேசம் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அற்புதமாக பந்துவீசிய அல்-அமீன் ஹாசன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஷகிப் அல் ஹாசன் 2 விக்கெட்டுக்கள் எடுத்தார்.
அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 80 ரன்கள் விளாசிய சப்பீர் ரகுமான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.