செய்திகள்

23 வருடங்களின் பின்னர் சவுதியிலிருந்து சடலமாக திருப்பியனுப்பப்பட்ட இலங்கை பணிப்பெண்

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார் என தெரிவித்து, அந்நாட்டில் தொழில் புரிந்த இலங்கை பெண் ஒருவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆணமடுவ நவகத்தேகம மக உஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த மேரி பெட்ரீசியா பெர்ணாண்டோவே இவ்வாறு உயிரிழந்த பணிப்பெண் ஆவார்.

1988-1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவரின் கணவர் காணாமற்போயுள்ளார்.

ஒரு பிள்ளையின் தாயான அவர் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வௌிநாட்டிற்கு சென்றுள்ளார்.

தொழில்நிமித்தம் அவர் வௌிநாட்டிற்கு சென்ற பின்னர் 1993 ஆம் ஆண்டு இரு தடவைகள் தனது மகளுக்கு அவர் இரண்டு கடிதங்களை அனுப்பியிருந்த போதிலும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை.

1992 ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு சென்ற இவரின் பெயரில் இரு கடவுச்சீட்டுகள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்று 2004 ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்டிருந்ததுடன், குறித்த பெண் உயிரிழந்ததாக மரண பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 7 தினங்களுக்கு முன்னர் மற்றுமொரு கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இக்கடவுச்சீட்டுகளை அவதானிக்கும் போது அதில் ஒன்றில் குறித்த பெண்ணிண் கையொப்பமானது ஒட்டப்பட்ட தாளொன்றின் மீது வைக்கப்பட்டுள்ளமையையும்
அத்துடன் மற்றையதில் புகைப்படம் அதில் ஒட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஜனவாரி 25 ம் திகதி இடம்பெற்ற வாகண விபத்தொன்றில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபியாவில் வழங்கப்பட்ட மரண அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

n10