செய்திகள்

29 இல் பாராளுமன்றம் கலைப்பு? அரச சார்பு பத்திரிகை தகவல்!

எதிர்வரும் 29 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என கொழும்பிலிருந்து வெளிவரும் அரச தரப்பு வார இதழ் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

19வது திருத்தச் சட்டம் நாளை 27 ஆம் திகதி வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாளை மறுதினம் 28ம் திகதி சட்டமூலம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படும். அப்போது அது தோற்கடிக்கப்பட்டால் அன்றைய தினமே பாராளுமன்றத்தை கலைத்துவிடும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான சிலர் பாராளுமன்றத்தில் இருந்து வருவதனால் தேர்தலை நடத்தி மக்கள் மூலமாக அவர்களை விரட்ட வேண்டும் எனும் கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையிலேயே அரசாங்கம் இந்தத் தீர்மானத்திற்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் 19வது திருத்தச் சட்டம் தோற்கடிக்கப்பட்டால் 29 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக கடந்த வாரம் நடைபெற்ற தேசிய நிறைவேற்று சபையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தேசிய நிறைவேற்றுச் சபையின் உறுப்பினரான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். ஆனாலும் 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாமல் பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தை கலைக்கக்கூடிய வகையில் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் பத்திரம் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தினம் குறிப்பிடப்படாது அது தயாரிக்கப்பட்டுள்ளதுடன் கலைக்க வேண்டிய தறுவாயில் தினத்தை அதில் குறிப்பிட்டு கையொப்பத்தையிட்டு எந்தவொரு நேரத்திலும் ஜனாதிபதியினால் அது வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் நாட்களில் எந்தவொரு நேரத்திலும் அரசாங்கம் கலைக்கப்பட்டு பாராளு மன்றம் கலைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.