செய்திகள்

3 கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம்

மூன்று முக்கிய கோரிக்கைகளை மைத்திரிபால அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனக்கோரி மன்னாரில் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டிருந்தார்கள்.

பல ஆண்டுகளாக காணாமல் போயுள்ளவர்களை கண்டுபிடிக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதேபோல் விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யக் கோரியும், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் துரித விசாரணை நடத்தி, அந்தப் பகுதியில் காணாமல் போயுள்ளவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும் திங்களன்று இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.

இதற்கான அழைப்பை மன்னார் பிரஜைகள் குழு விடுத்திருந்தது. மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து மன்னார் பேருந்து நிலையத்திற்குப் பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், தமது வாய்களைக் கறுப்பு துணியினால் கட்டியவாறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி வீதியோரத்தில் நின்றிருந்தனர்.