செய்திகள்

30 வருட போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்த முடியாது: சிவசக்தி ஆனந்தன் எம்.பி காட்டம்

30 வருட ஆயுதப் போராட்டத்தால் நாம் எவற்றை அடைந்தோம் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இன்று இந்த பதவிகள் கிடைத்தமைக்கும், எமது பிரச்சனை ஐ.நா வரை சென்றமைக்கும் அந்த போராட்ட தியாகங்களே காரணம். அதனை எவரும் கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விவசாயிகளுடனான சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இருபத்தொரு நாட்களாக போராட்டம் நடத்தும் கேப்பாபுலவு மக்களுக்கு தென்பகுதியில் இருக்கின்ற முஸ்லீம்கள், சிங்கள மக்கள் பலரும் போய் தமது ஆதரவை தெரிவிக்கின்றனர். ஒமந்தை பிரதேசத்தில் இருந்தும் உங்களது அமைப்பின் ஊடாக போய் ஒரு நாள் ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலம் தெருவோரத்தில் இருக்கின்ற அந்த மக்களிற்கு ஆதரவு தெரிவிப்பது நல்ல விடயமாக இருக்கும். இன்றைய தினம் வடமாகாணத்தில் இருக்கின்ற சகல பாடசாலைகளும் ஒரு மணிநேரம் மாணவர்கள் அந்த போராட்ட களத்தில் உள்ள 54 மாணவர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஒருவருக்கொருவர் எங்களுக்கு இருக்கின்ற தேவைகளையும் எங்களுக்கு இருக்கின்ற பிரச்சனைகளையும் நாங்கள் எதிர்காலத்தில் சேர்ந்துதான் செய்ய வேண்டியுள்ளது. இன்றைய நிலைமை அப்படிதான் இருக்கின்றது. இன்றைய நிலைமைகளை மறந்து எங்களுடன் இருக்கின்ற சில பேர் முரண்பட்ட கருத்துக்களுடன் இருக்கின்றனர்.

சில பேர் சொல்கின்றார்கள் 30 வருட ஆயுத போராட்டத்தால் எதையும் நாங்கள் சாதிக்கவில்லையாம். இந்த பிரதேசத்தில் இருந்து போன ஒரு போராளி என்ற வகையில், இந்த 30 வருட ஆயுத போராட்டமும் அந்த போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள், போராட்ட களத்தில் மடிந்த உறவுகள், பொது மக்களுடைய தியாகம் தான் இன்று உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஐ.நாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 30 வருட ஆயுதப் போராட்ட தியாகங்களை நாம் மறந்து விடமுடியாது. சிலர் அந்த போராட்டத்தால் எதனை நாம் அடைந்தோம் என்று கூட இன்று கேட்கிறார்கள். ஆனால் இன்று ஐ.நா வரை எமது பிரச்சனை வந்தமைக்கும், இந்த பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட பதவிகளைப் பெறுவதற்கும், மாகாண சபை வந்தமைக்கும் அந்த போராட்டங்களும் தியாகங்களும் தான் காரணம் என்பதை மறந்து விடக்கூடாது.

அமெரிக்காவும், இந்தியாவும் யுத்தம் முடிந்த பின் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என்று எங்களுடைய காலடியை நோக்கி வந்தது கூட இந்த தியாகங்களால் தான். ஆகவே எங்களது போராட்டங்கள், அதன் தியாகங்கள் வீண் போய்விட்டது. அதனால் ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்வது ஒரு அப்பட்டமான பொய்யான விடயம். அந்த தியாகங்கள் தான் இன்றும் எங்களை எங்களது நிலங்களில் வாழவைத்திருக்கிறது என்பதை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த தியாகங்களை யாரும் கொச்சைப்படுத்திக்கொண்டு போவதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

அரசாங்கம் திரும்பவும் ஐ.நா சபையில் இன்னுமொரு இரண்டு வருட காலத்தை நீடித்து தர கேட்கின்றார்கள். இந்த காலத்தை நீடித்தால் மிச்ச பிரச்சனை எல்லாவற்றையும் தீர்த்துவிடுவோம் என்கிறார்கள். உங்களுக்கு தெரியும் 18 மாதமாகிவிட்டது. ஏற்கனவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையும், இலங்கை அரசாங்கமும் சேர்ந்து எடுத்த தீர்மானங்கள் பல நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது. அவ்வாறன நிலையில் எவ்வாறு கால நீடிப்புக்களை வழங்க முடியும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காக எங்களிடம் வந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது. எங்களது கட்சி அவ்வாறு வழங்க வேண்டாம் எனக் கோரிய போதும் கூட்டமைப்பு தலைமை அதனை ஏற்கவில்லை. அதன் விளைவாக இன்று வரை நாம் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாமல், எதையும் பேரம்பேசி செய்யமுடியாமல் இருக்கின்றது. எனவே, இன்று எமது மக்கள் தமது உரிமைக்காக தாமாகவே வீதியில் இறங்கியுள்ளார்கள். அவர்களது போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி அவர்கள் தமது சொந்த நிலங்களில் வாழ நாம் உதவவேண்டும் எனத் தெரிவித்தார்.

N5