செய்திகள்

டோனி விலக சரியான நேரம் என்கிறார் அசாருதீன்

 

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காள தேசத்திடம் மோசமான தோல்வியை சந்தித்து ஒருநாள் தொடரை இழந்ததால் அணித்தலைவர் டோனி கடும் விரக்தி அடைந்தார். தோல்விக்கு நானே பொறுப்பு என்றால் கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்,. அணித்தலைவர் பதவி என்பது பெரிய விஷயம் இல்லை என்றும் கூறினார்.

வழக்கமாக அமைதியுடன் காணப்படும் டோனி இந்தப் பேட்டியின்போது ஆக்ரோஷத்துடன் தனது கருத்தை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதற்கிடையே டோனிக்கு முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், கங்குலி, துலிப் வெங்சர்க்கார், சந்து போர்டே, கிரண்மோரே, சேட்டன் சவுகான், பிஷன்சிங், அஜித் வடேகர் ஆகியோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

கேப்டன் பதவியில் இருந்து டோனி விலக தேவையில்லை என்றும், அணித்தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க கூடாது என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர்.ஆனால் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் முகமது அசாருதீன் மட்டும் டோனி பதவி விலக இதுவே சரியான நேரம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

அணித்தலைவர் பதவியில் இருந்து டோனி விலகும் நேரம் வந்துவிட்டது. இதுபற்றி அவரே முடிவு செய்ய வேண்டும். அல்லது பதவி விலகுமாறு அவரிடம் கேட்டாலும் முடிவு செய்ய வேண்டும். இந்திய அணிக்கு புதிய ரத்தம் தேவை.இதனால் இந்திய அணிக்கு புதிய அணித்தலைவரை நியமிக்க வேண்டும். அதற்கான நேரம் தற்போது அமைந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.வங்காளதேசத்திடம் தொடரை இழந்ததால் இந்திய அணியின் ஜிம்பாப்வே பயணத்தை கிரிக்கெட் சபை அதிரடியாக ரத்து செய்துள்ளது.