செய்திகள்

4 அமைச்சர்களின் திடீர் இராஜினாமா: அரசியல் நலன் கருதியது என குற்றச்சாட்டு

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான காலம் நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில் அரசியல் இலாபம் தேடும் தந்திரோபாயமாகவே நான்கு அமைச்சர்கள் நேற்று தமது பதவியை இராஜினாமா செய்திருப்பதாக பிரதி வெளிவிவகார மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிற்கு முன்னதாக அரசியலில் தமக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் நடத்தப்படும் நாடகமே இதுவாகுமெனவும் பிரதியமைச்சர் கூறினார்.

இதேவேளை இந்த நால்வரின் இராஜினாமா, சிறுபான்மை அரசாங்கத்தின் ஸ்திர நிலைமையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்குப் பின்னர் அரசாங்கத்துடன் வந்து சேர்ந்த இந்த அமைச்சர்கள் நால்வரும் ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் உண்மையான ஆர்வமும் அக்கறையும் கொண்டிருக்க வாய்ப்பில்லையென்றும் அவர் கூறினார்.

தொலைத்தொடர்பு அமைச்சில் நேற்றுக்காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர், நான்கு அமைச்சர்களினதும் திடீர் இராஜினாமா குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளிக்குகையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அமைச்சர்களான டிலான் பெரேரா, பவித்ரா வன்னியாரச்சி, மஹிந்த யாப்பா அபேவர்தன, சி.பி. ரத்நாயக்க ஆகிய நால்வரும் நேற்று தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தனர்.

இது தொடர்பில் பிரதியமைச்சர் மேலும் கூறியதாவது,

பாராளுமன்றம் கலைக்கப்படுவது உறுதியாகியுள்ளது. நாட்களின் எண்ணிக்கை மாத்திரமே இன்னமும் தீர்மானிக்க ப்படாமல் உள்ளது. பாராளுமன்றம் கலைந்தால் இயல்பாகவே அமைச்சுப் பதவிகள் அற்று போய்விடும். அதற்கு முன்னர் இந்த நான்கு அமைச்சர்களும் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்களென்றால் நிச்சயம் அது அரசியல் இலாபம் கருதியதாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் இருப்பதால் கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானத்திற்கமையவே அவர்களது விருப்பத்துடன் ஜனாதிபதியினால் இந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் அவர்கள் திடீர் இராஜினாமா செய்துள்ளமையானது தாங்கள் அரசாங்கத்தின் பங்காளர்கள் இல்லையென்றோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர் இல்லையென்றோ அல்லது கட்சி மத்திய குழுவின் தீர்மானத்தை புறக்கணிப்பதாகவோ அல்லது கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்ப்பதாகவோ மக்களுக்கு அவர்கள் வெளிக்காட்ட நினைப்பதனையே சுட்டி காட்டுகின்றது.

இருப்பினும், பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அரசாங்கத்தின் கொள்கையுடன் இணங்கக்கூடிய பிற கட்சியினரை ஒன்று சேர்த்து தேசிய அரசாங்கத்தினை உருவாக்க தொடர்ந்தும் நாம் தயாராகவிருப்பதாகவும் அவர் கூறினார்.