செய்திகள்

4 நாடுகள் தலையிட்டதால்தான் எனது பாதுகாப்பை மகிந்த மீண்டும் வழங்கினார்: சந்திரிகாவின் உணர்வு பூர்வமான பேட்டி

“விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருந்த போதிலும், எனக்குத் தரப்பட வேண்டிய பாதுகாப்பை மகிந்த ராஜபக்‌ஷ நீக்கினார். எனது அலுவலகத்தை மூடினார். இது தொடர்பாக நான்கு நாடுகளிடம் நான் முறைப்பாடு செய்தேன். அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளிடமே இதனையிட்டு நான் முறைப்பாடு செய்தேன்” எனத் தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இந்த நான்கு நாடுகளும் அழுத்தம் கொடுத்தமையால்தான் தன்னுடைய பாதுகாப்பை மகிந்த ராஜபக்‌ஷ மீண்டும் வழங்கியதாகவும் கூறியுள்ளார்.

“மகிந்த ராஜபக்‌ஷவினால் நான் மோசமாக துன்புறுத்தப்பட்டேன். என்னுடன் பேச வேண்டாம் என அவர் எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால் பகிரங்கமாக என்னுடன் பேசுவதற்கு அவர்கள் தயங்கினார்கள். ஆனால், ஏதாவது தேவையிருந்தால் இரகசியமாகத் தகவல் அனுப்புவார்கள்” எனவும் ‘சிரச’ சிங்களத் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் சந்திரிகா தெரிவித்திருக்கின்றார்.

இந்தப் பேட்டியில் சந்திரிகா மேலும் தெரிவித்திருப்பதாவது:

“மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு பலர் என்னை அழைத்தார்கள். மூன்றாவது தடவையாகவும் போட்டியிடுவது நல்லதல்ல என்பதால் நான் போட்டியிடவிரும்பவில்லை. மகிந்த ராஜபக்‌ஷவை தலைமைப் பதவிக்கு நான்தான் கொண்டுவந்தேன். அதனையிட்டு இன்று வருத்தப்படுகின்றேன். எனது கட்சியின் செயற்குழுவில் உள்ள 59 பேரில் 56 பேர் அதனை எதிர்த்தார்கள். அதனையும் மீறி நான் அவரைக்கொண்டவந்தேன். அது ஒரு முட்டாள் தனமான முடிவு.

கட்சியைப் பிளவுபடுத்தும் முயற்சிகளில் மகிந்த சம்பந்தப்பட்டிருந்தார். இதனைத் தெரிந்துகொண்டவர்கள் தலைமைப் பதவியை அவருக்குக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், அதனைக் கொடுத்தேன். நான் வைத்த நம்பிக்கையை அவர் பாதுகாக்கவில்லை. அவரை நான்தான் எதிர்க்கட்சித் தலைவராக்கினேன். பிரதமதராக்கினேன். ஜனாதிபதி வேட்பாளராகவும் நானே பிரேரித்தேன்.

அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன் அவரை வாழ்த்துவதற்காக தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அவர் 19 நிமிடங்களுக்கு தகாத வார்த்தைகளால் என்னைத் திட்டினார். நான் மூன்று வார்த்தைகளை மட்டும் சொல்லிட்டு தொலைபேசியை வைத்துவிட்டேன். அந்த வார்த்தைகள் என்ன என்பது எனக்கும் எனது சகோதரருக்கும் மட்டும்தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது” எனவும் சந்திரிகா தெரிவித்தார்.