செய்திகள்

4 வருடங்களின் பின் நாடு திரும்பியவர் கைது! கொலைச் சம்பவத்தில் தொடர்பு

வெளிநாட்டுக்கு சென்று நான்கு வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய ஒருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரை, தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கட்டுகஸ்தோட்டை ஹமன்கொடை எனுமிடத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது இந்திக்க சதுரங்க என்பவர் உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவத்தின் சந்தேக நபர்களில் ஒருவரான இவர், வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளார். இவர் இல்லாமல் வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட் போதும் இவரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியும் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து சனிக்கிழமை, இலங்கைக்கு திரும்பிய சந்தேக நபர், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்த போது அவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, குற்றப்புலனாய்வு பிரிவினரால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை, கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நாளை 5ஆம் திகதி ஆஜர் செய்ய உள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.