செய்திகள்

40,000 பொது மக்களை அல்ல, 23,000 புலிகளையே கொன்றோம்

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக  சர்வதேச அமைப்புகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும்  பொய்யாகுமெனத் தெரிவித்த பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவத்தினர் சிலர் போர்க்குற்றச்சாட்டுகளை முன்னெடுத்திருந்தால் அதற்கான ஆதாரமும் இருந்தால் அதுதொடர்பில் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது நியாயமானதெனத் தெரிவித்தார்
கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
யுத்தகாலப்பகுயில் இராணுவத்திலிருந்த சிலர் எனது கட்டளைக்கு புறம்பாக செயற்பட்டார்களாயின் அதற்கான பிரதிபலன்களுக்கு அவர்கள் முகம்கொடுத்தாக வேண்டும். அத்துடன் சர்வதேச தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தனிநபருடன் தொடர்புபட்ட விடயமாகும். இராணுவத்தில் ஓரிருவர் செய்யும் தவறுக்கு முழு இராணுவமும் பொறுப்பேற்க வேண்டியதில்லை.
இராணுவத்தினர் சிலர் போர்க் குற்றச்சாட்டுகளை முன்னெடுத்திருந்தால் அதற்கான ஆதாரமும் இருந்தால் அதுதொடர்பில் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது நியாயமானதாகும்.
அதுமட்டுமல்லாது இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக  சர்வதேச அமைப்புகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும்  பொய்யாகும்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அப்பகுதியில் பொதுமக்களுக்கான வைத்திய உதவிகளை முன்னெடுத்து வந்தது. கடைசி இருமாத காலப்பகுதியில் சுமார் 300 சிவிலியன்கள் மட்டுமே காயமடைந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவர்களில் அனைவருக்குமான வைத்திய உதவிகூட இராணுவத்தால் புல்மோட்டை பகுதியில் வழங்கப்பட்டது. அதில் அனைவரும் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்கள் என கூறிவிட முடியாது.
சர்வதேச தரப்பு கூறும் வகையில் அப்பகுதியில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டார்களாயின் அவர்கள் அப்பகுதியிலிருந்து காணாமல் போவதற்கு வாய்ப்பில்லை அவர்களின் சடலங்கள் அங்கேயே இருந்திருக்க வேண்டும். புதுமாத்தளன் பகுதியிலேயே இந்தச் சடலங்கள் அடங்கிய புதைகுழியொன்று இனங்காணப்பட்டது. அதுவும் உயிரிழந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்கள் அடங்கிய புதைகுழியாகும். அந்தச்சடலங்கள் கூட விடுதலை புலிகள் அமைப்பின் கொடியினால் மூடப்பட்டிருந்தன.
அத்துடன் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வைத்தியசாலையொன்றின் மீது மோட்டார் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்கள் ஆனால் சம்பவதினத்துக்கு இருவாரங்களுக்கு முன்னர் செஞ்சிலுவை சங்கத்தினரை அழைத்து, புதுக்குடியிருப்பை இராணுவம் நெருங்கி வருவதால் அப்பகுதியிலிருந்து விலகிச்செல்லுமாறு நாம் கேட்டுக்கொண்டோம்.
ஆனால் பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து விலகிச் செல்லவில்லை. சட்டரீதியாக எமது கடமையினை முன்னெடுத்த போதும் அவ்வாறானதொரு சம்பவம் நடைபெற்றது. அத்துடன் வைத்தியசாலை மீதான தாக்குதல் தவறுதலாக இடம்பெற்ற சம்பவமாகும். காலநிலை சீரற்ற தன்மை மற்றும் மனிதத் தவறுகளால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இயல்பாகும்.
இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதை ஆதாரபூர்வமாக சர்வதேசம் முன்வைக்கவேண்டும் அவ்வாறு, குறிப்பாக அப்பகுதியில் சனத்தொகை கணக்கெடுப்பொன்றினை முன்னெடுக்க முடியும். அப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 2 இலட்சத்து 15ஆயிரம் மக்களை இராணுவம் காப்பாற்றியது. ஏப்ரல் மாதம் 19ம் திகதி நாங்கள் 1 இலட்சத்து 20 ஆயிரம் மக்களை மீட்டோம். மே 14 ஆம் திகதி 90 ஆயிரம் மக்களை மீட்டோம்.
நாம் மீட்டெடுத்த மக்களின் தரவுகள் பாதுகாப்பு தரப்பிடம் உள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு கணக்கெடுப்பொன்றினை முன்னெடுத்தால் சர்வதேச அமைப்புகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலொன்று கிடைக்குமென எதிர்ப்பார்க்கிறேன்.
நாம் 23ஆயிரம் புலிகளையே சுட்டுக்கொன்றதுடன் 12 ஆயிரம் பேரை உயிருடன் கைதுசெய்தோம். அந்த கூட்டத்துக்குள் சிவிலியன்கள் என அடையாளப்படுத்த முயற்சிக்கும் சிலரும் இருக்கக்கூடுமெனத் தெரிவித்தார்.
n10