செய்திகள்

5 ஆண்டுகளுக்கு இந்த அரசை அசைக்க முடியாது;அம்பாறையில் ஜனாதிபதி சூளுரை

எவ்வாறான கோஷங்களை முன்வைத்தாலும் அடுத்து வரும்  5 ஆண்டுகள்  வரை இந்த அரசை மாற்றுவதற்கு எவராலும் முடியாது. தோல்வியடைந்த அரசியல் சக்திகள் மேலும் தோல்விகளைத் தழுவி அரசியலில் இருந்து ஒதுங்கும் விதமாக எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் இந்நாட்டுக்குத் தேவையான சமூக, பொருளாதார மாற்றத்தை மேற்கொள்வதற்குப் பாடுபடுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அம்பாறை- பாலமுனை பொதுமைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாட்டில் பிரதம அதிதியாக  கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்;

நாட்டில் உறுதிசெய்யப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பன காரணமாக கூட்டங்கள் நடாத்துவதற்கும் ஊர்வலங்களை மேற்கொள்வதற்கும் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. அதனை வழிநடாத்தும் தலைவர்கள் வெள்ளை வான்களை அனுப்பி ஆட்களை காணாமல் செய்ததைப் போன்று செய்வது தற்போதைய அரசின் கொள்கையல்ல.

அப்போதிருந்த ஆட்சியை மாற்றியமைப்பதற்காக இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இருந்த தேவைக்காக 2015 ஜனவரி 8ஆம் திகதி பேரலையாக இந்நாட்டு மக்கள் தன்னைச் சுற்றி ஒன்று திரண்டதாக நினைவுகூர்ந்த ஜனாதிபதி, புதியதோர் அரசு புதியதொரு வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி அலைபாயும் மக்கள் கூட்டத்தை எவராலும் பின்னோக்கி நகர்த்துவதற்கு முடியாது.

புதியதோர் அரசை அமைப்பதற்கு தன்னிடம் அரசை ஒப்படைக்குமாறு இன்று ஒருசிலர் தனது நெஞ்சில் அடித்துக்கொண்டு மேடைகளில் கூக்குரலிட்டபோதும் அவர்களின் செயற்பாடுகள் பற்றி இந்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.நெஞ்சில் அடித்துக்கொள்பவர்களுக்குத் தான் பயப்படாததன் காரணமாகவே அப்போதிருந்த அரசிலிருந்து வெளியேறி புதியதோர் அரசை அமைத்தேன்.

மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் ஒருசிலர் அரசை குறை கூறினாலும் இவை இவ்வாறு இடம்பெறுவதற்கு காரணம் 10, 15 வருடங்களாக அவை திருத்தங்களுக்கு உட்படுத்தப்படாமை என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும்போது சர்வதேசத்திற்கு அடிபணிவதாகவும், அந்நாடுகளுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகவும் அரசின் மீது குற்றம் சுமத்தியபோதும் எச்சந்தர்ப்பத்திலும் எவருக்கும் இந்நாட்டை அடிபணியச் செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என்பதுடன் ஒருபோதும் தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்கமாட்டேன் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

n10