செய்திகள்

5 மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை: எதிர்த்து தமிழக 13 மாவட்ட மீனவர்கள் போராட்டம்

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளதைக் கண்டித்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 13 கடற்கரை மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கினர். இதனால் 3 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

சென்னையில் மீனவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். மீனவர் மக்கள் முன்னணியின் தலைவர் கோசுமணி, சென்னை விசைப்படகு மீனவர் நலச்சங்க தலைவர் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசியவர்கள் கூறியதாவது:

இலங்கையில் கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இந்நிலையில், 2011 நவம்பர் 28-ம் தேதி தமிழக மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டஸ், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகிய 5 பேரும் போதைப் பொருள் கடத்தியதாக ஒரு பொய்யான வழக்கை இலங்கை அரசு புனைந்து, அவர்களை கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைத்து, வழக்கு நடத்தி இப்போது அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. இது நமது தேசத்தின் ஆன்மாவை அசைத்துப் பார்க்கக்கூடிய பேரிடியாக அமைந்துள்ளது.

2009-க்குப் பிறகு கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க பயந்து பயந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், யாராவது போதைப் பொருள் கடத்த முடியுமா? இலங்கை அரசு தமிழக மீனவர்களை எப்படியும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது என்ற நோக்கில், இப்படி ஒரு பொய்யான வழக்கைப் போட்டு நம்முடைய பாரம்பரிய மீன்பிடி உரிமையை பறிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், இலங்கை உயர் நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு அளித்திருக்கும் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் கடந்த 5 மாதங்களில் கைப்பற்றப்பட்ட 82 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும். யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 24 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். இந்திய, இலங்கை இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு காணவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடி மீனவர் பிரச்சினை குறித்து தமது நிலைப்பாட்டை அறிவித்து, மீனவர் களின் தூக்கு தண்டனையை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுக்கத் தவறினால், நவம்பர் 7-ம் தேதி தமிழக மீனவப் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டத்தை ராமேசு வரத்தில் கூட்டி, நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் அறிவிக் கப்படும் என ராமேசுவரத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்யக்கோரி 13 மாவட்டங்களில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளதால், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. அதேபோல், கடற்கரை மாவட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

நாகையில்..

நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நாகப்பட்டினம் தலைமை அஞ்சல் நிலையம் எதிரே நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அதேபோல் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 2 ஆயிரம் பேரும், தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்களும் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவ மக்கள் முன்னணி சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடுத்தபடம்: ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோர்