செய்திகள்

50 முன்னாள் போராளுகளே புனர்வாழ்வு முகாமில்! புனர்வாழ்வு அதிகாரி பெர்ணான்டோ

விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கத்துவம் வகித்த மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் என கைது செய்யப்பட்டவர்களில் 50 பேரே தற்போது பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வருவதாக  புனர்வாழ்வு அதிகாரி லெப் கேணல் பீ.பீ.எச்.பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த மற்றும் அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த பலர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சி கொடுத்து சமூகமயமாக்கல் வேலைத் திட்டத்தை மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் ஆரம்பித்தது. அவ்வாறு புனர்வாழ்வு பெற்று 12,000 பேர் வரையில் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு பெற்ற பயிற்சிகளைக் கொண்டு பலர் சுயதொழில் மற்றும் மேசன், வயறிங் என தொழில் செய்து நல்ல வருமானத்தைப் பெறுகிறார்கள். ஓரு சிலர் பயிற்சி பெற்றும் அதனைப் பயன்படுத்தாது கூலி வேலை செய்து வருகிறார்கள். இங்கு பல்வேறு தொழிற் பயிற்சிகளும், சப்பாத்து செய்தல் போன்ற சுயதொழில் பயிற்சியும் மொழிக் கற்கைகளும் வழங்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களில் ஒரு 10 பேர் வரையிலானோரே மீண்டும் சிறைக்கு வந்தனர். ஏனையோர் சமூகத்தில் வாழ்கிறார்கள். அந்த வகையில் இந்த புனர்வாழ்வு பயிற்சி வெற்றியளித்துள்ளது.

தற்போது ஒரு பெண் உட்பட 50 பேர் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். அவர்களின் புனர்வாழ்வு காலமான ஒரு வருடம் முடிவடையும் போது அவர்கள் ஒவ்வொருவரும் சமூகத்துடன் இணைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சியைச் சேர்ந்த 6 கிராம அலுவலர்கள் புலிகளுடன் தொடர்புகளை முன்னர் பேணியவர்கள் எனக் கூறப்பட்டு புதிதாக புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.