செய்திகள்

6 உடல்கள் மறுபிரேத பரிசோதனை: ஆந்திர மருத்துவக் குழு தமிழகம் வருகை

ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 6 உடல்களுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு இன்று தமிழகம் வந்தது.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 7ஆம் தேதி திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 தொழிலாளர்கள் ஆந்திர காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.

இதில், முனியம்மாள் தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், உடலில் பல இடங்களில் மர்ம காயங்கள் இருப்பதால் மறு பிரேத பரிசோதனை செய்ய நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், சசிகுமாரின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம் வேட்டகிரிபாளையத்தை சேர்ந்த முருகன், பெருமாள், காந்தி நகரை சேர்ந்த மகேந்திரன் மற்றும் முருகபாடியை சேர்ந்த முனுசாமி, மூர்த்தி ஆகிய 5 பேரின் உறவினர்களும் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக்கோரினர்.

தனை விசாரித்த நீதிமன்றம், முருகன், பெருமாள், மகேந்திரன், முனுசாமி மற்றும் மூர்த்தி ஆகிய 5 பேரின் சடலங்களை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவ வல்லுநர்கள் குழு தமிழகம் வந்துள்ளது. உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் 4 பேர் உள்பட 13 பேர் கொண்ட குழு திருவண்ணாமலை வந்துள்ளது.

இவர்களில் 3 பேர், சென்னைக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து திருவண்ணாமலை சென்றனர். எஞ்சியோர் திருவண்ணாமலை வந்தபின் மறுபிரேத பரிசோதனை தொடங்கும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மருத்துவக்குழுவின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், 6 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.