செய்திகள்

600 பொலிஸார் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை: பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு

கிழக்கு மாகாணத்தில் 1990ஆம் ஆண்டு 600 பொலிஸார் கொல்லப்பட்டமை தொடர்பில், விசாரணைக்கு வருமாறு பொலிஸ்மா அதிபரை காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை இந்த விசாரணை இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன. காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தற்போது 5 பேர் கொண்ட புதிய குழுவொன்றை நியமித்துள்ளது.

முன்னாள் ஆயுதக்குழுக்களால் வடக்கு, கிழக்கில் கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவங்கள் தொடர்பில் தனித்து விசாரிப்பது குறித்த குழுவின் பணியாகும். வடக்கு, கிழக்கில் ஆணைக்குழுவின் சாட்சியங்கள் பதிவுசெய்யப்படும்போது, முன்னாள் ஆயுதக்குழுக்களின் கடத்தல்கள் தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதற்காக நியமிக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட குழு, இன்றைய தினம் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஆணைக்குழுவினரை அவர்களது அலுவலகத்தில் நேரில் சந்திக்கவுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, முன்னாள் ஆயுதக்குழுக்களுக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளது.

அதனை அடிப்படையாக வைத்து, முன்னாள் ஆயுதக்குழுக்களின் தலைவர்களாகச் செயற்பட்ட முன்னாள் அமைச்சர்களை விசாரணைக்கு அழைக்கவுள்ளது. இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்ற பொலிஸ் சங்கத்தினர், ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றைக் கையளித்திருந்தனர். அதில் 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணையைத் துரிதப்படுத்துமாறு வேண்டியிருந்தனர்.

இதற்கமைய, 5 பேர் கொண்ட குழு குறித்த விசாரணையை முதலாவதாக ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் இது தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டது எனவும், அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்கும் மற்றும் மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு எவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டன என்பன தொடர்பில் அறிவதற்குமே, பொலிஸ்மா அதிபர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.

பொலிஸார் கொல்லப்பட்ட குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) மீது, நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவின்போது குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது. அதனை அவர் மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.