செய்திகள்

8 பில்லியன் அரச நிதி கோத்தாவின் வங்கிக் கணக்குக்கு சென்றது எப்படி? நெருக்கடிக்குள் ராஜபக்‌ஷ குடும்பம்

அரச பொது நிதிக்குச் சேரவேண்டிய சுமார் 8 பில்லியன் பணத்தை முன்னாள் பாதுகாப்புச்  செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது சொந்தப் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் வைத்திருந்த விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்ததியுள்ளது.

குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த விவகாரம் ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு பெரும் நெருக்கடியைக் கொடுப்பதாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. .

புதிய இராணுவத் தலைமையகத்தை அமைப்பதற்காக இந்தப் பணத்தை தனது பெயரில் உள்ள கணக்கில் வைத்திருந்ததாக கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். இராணுவத் தலைமையகத்துக்கு சொந்தமான காணியை விற்றதில் கிடைத்த இந்தப் பணத்தை தனது பெயரில் இருந்த கணக்கில் வைத்திருப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருந்ததாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

எனினும் அரசுக்கு சேரவேண்டிய பணத்தை தனியான கணக்கில் வைத்திருந்தது அரசியலமைப்பை மீறும் செயல் என்று சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அரசியலமைப்பின் படி, நாட்டின் நிதியை கையாள்கின்ற முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்துக்கு மட்டுமே இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

“அரசியலமைப்பின் 149-(1)- இன் படி, அரசுக்கு வருகின்ற எந்தவொரு வருமானமும் கருவூலத்தின்- அதாவது திறைசேரியின் பொது நிதியத்தில் சேரவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தால் வழங்கப்படுகின்ற சிறப்பு அனுமதியின் பிரகாரம் மட்டுமே வேறு கணக்குகளில் அரச நிதியை வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறாமல் அரசாங்க நிதியை தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைத்திருப்பது அரசியலமைப்பை மீறும் செயற்பாடு எனச் சுட்டிக்காட்டியிருக்கும் சட்டத்துறை வட்டாரங்கள், இங்கு கோதாபாய செயற்பட்டிருப்பது அரசியலமைப்பை மீறும் செயற்பாடு எனவும் குறிப்பிடுகின்றார்கள். இது தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோதாபால நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.