செய்திகள்

சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறையினூடாக மட்டுமே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டமுடியும்! 

சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையினூடாக மட்டுமே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்ட முடியும் என ஐ.நாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையின் 34ஆம் அமர்வில் கலந்து கொண்டு நேற்றைய தினம் (15.03) உரையாற்றியிருந்தார். அதன் விபரம் வருமாறு,

ஐநா. மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-1 இலக்க தீர்மானமானது நிறைவேற்றப்பட்டவேளை, அத்தீர்மானமானது குற்றவியல் விசாரணையொன்றை கோரியிருந்த போதிலும் இலங்கை மீதான ஐநா அலுவலக விசாரணை அறிக்கையில் (இலங்கை தொடர்பில்) குறிப்பிடப்பட்டிருந்த முக்கியமான குறைபாடுகள் குறித்து ஆழமான கவனத்தை அந்த தீர்மானம் செலுத்தியிருக்கவில்லை என நாம் அது நிறைவேற்றப்பட்டபோதே எச்சரித்திருந்தோம்.

நடைமுறை அர்த்தத்தில் வெறுமனே ஒரு உள்ளகப்பொறிமுறையாகவே இருக்கப்போகின்ற செயன்முறை, நம்பகத்தன்மையானது எனும் வெளித்தோற்றப்பாட்டைக்காட்டுவதற்காக மட்டும் வெளிநாட்டு ஈடுபாட்டை அந்த 30-1 தீர்மானம் கோரி நின்றது என்பதையும் நாம் அப்போதே வெளிப்படுத்தியிருந்தோம்.

அத்தோடு நீதியை வழங்குவதற்கான அரசியல் விருப்பானது சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறவே இல்லை என்பதையும் நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிவந்துள்ளோம்.

இந்நிலையில், 2015 மனித உரிமைப்பேரவை தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த ஆகக்குறைந்த கடப்பாடுகளிலிருந்தும்கூட சிறிலங்கா அரசாங்கமானது உத்தியோகபூர்வமாகவே விலகிநிற்கின்றது.

இவ்வாறு ஐநா மனித உரிமை பேரவைத்தீர்மானத்தின் கடப்பாடுகளிலிருந்து சிறிலங்காவை விலகியிருக்கச்செய்யும் முயற்சிகள், சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரப்படிநிலையில் உச்சத்தில் இருக்கின்ற ஜனாதிபதியினதும் பிரதமமந்திரியினதும் தலைமையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐநா தீர்மானத்தின் கடப்பாடுகளை வாய்மொழிமூலமாக நிராகரிப்பது மாத்திரமன்றி அவற்றில சொல்லப்பட்ட ஒன்றைத்தானும் இதுவரை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதே இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

இவ்வாறாக, ஐநா தீர்மானத்தை மிகத்தெளிவாக நிராகரித்து அது தம்மை கட்டுப்படுத்தவே மாட்டாது என ஒரு அரசாங்கம் கூறும்போது அந்த அரசாங்கத்துக்கு மேலதிக கால அவகாசம் கொடுப்பதென்பது பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையில் ஐநா மனித உரிமை பேரவையின் மீதான நம்பகத்தன்மையை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும்.

இந்நிலையில் சிறிலங்காவை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது அல்லது ஒரு விசேட தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து விசாரிப்பது போன்ற பக்கசார்பற்ற சர்வதேச நீதிவிசாரணைப்பொறிமுறை ஒன்றினூடாக மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டமுடியும் என நாம் மீளவும் வலியுறுத்திக்கூற விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

N5