செய்திகள்

பயங்கரவாதத்தை ஒழித்தது போர் குற்றமாகுமா? : முன்னாள் இராணுவ தளபதி கேள்வி

இலங்கை இராணுவத்தினர் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டனர் இதனை போர்க்குற்றமாக பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி லெப். ஜெனரல் தயாரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளிக்கும் வகையில் முன்னாள் இராணுவ அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியிடும் நிகழ்வு அண்மையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்த முன்னாள் இராணுவ தலைவரான தயராட்னாநயக்க அங்கு சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்க்காணலொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேர்காணலில் பத்திரிகையாளர் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தயாரட்நாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது,
மேற்குலக நாடுகளின் எண்ணங்களை நிறைவேற்றாது நாம் எமது நாட்டில் இருந்த பயங்கரவாதிகளை ஒழித்துள்ளோம். இதனால் தற்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து எம்மை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். தற்போது உலக நாடுகள் பயங்கரவாதிகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நாம் எமது நாட்டில் இருந்த உலகிலேயே மிகவும் பயங்கரமான இயக்கத்தை ஒழித்துள்ளோம். எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தினர் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே இருந்தது. இவ்வாறாக தடை விதிக்கப்பட்டிருந்த இயக்கத்தை ஒழித்தது குற்றமாகவே இப்போ இவர்கள் காட்ட முயற்சிக்கின்றனர்.
பயங்கரவாதத்தை ஒழிப்பது போர்க்குற்றமாக அமையாது என்பதனை விசேட சட்ட நிபுணர்களுக்கு தெரியும். மனித உரிமைகள் பேரவையில் இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்கான அறிக்கையில் எமது பக்க நியாயங்களை தெளிவுபடுத்தியுள்ளோம். குறிப்பாக யுத்த காலத்தில் இருந்த இராணுவ அதிகாரி என்ற ரீதியில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் நியாயமற்றது. என்றே கூற வேண்டும். சர்வதேச சட்டத்திற்கு அமைய இவ்வாறான குற்றச்சாட்டுகள் நியாயமற்றதே. என அவர் தெரிவித்துள்ளார். -(3)