செய்திகள்

இலங்கை விடயத்தை பாதுகாப்புச்சபைக்கு கொண்டுசெல்ல வேண்டும்; கஜேந்திரகுமார்

போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நீதி விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பை இடம்பெறச் செய்வதற்கு வழங்கிய உறுதிமொழியை இலங்கை மீறிவரும் நிலையில், அதன் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற மேலும் கால அவகாசம் வழங்குவது அர்த்தமற்றது என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கை விவகாரமானது ஐ.நா. பாதுகாப்பு சபை உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகள் நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா வந்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இங்கு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றின் போதே  இந்த  விடயங்களை குறிப்பிட்டார். 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியிருந்தது.

இலங்கையின் நீதி விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுனர்கள், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களது பங்கேற்பின் முக்கியத்துவம் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.  எவ்வாறிருப்பினும், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அதற்கான ஏற்பாடு எதுவும் இலங்கை அரசியலமைப்பில் கிடையாது என்றும் ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் விக்கிரமசிங்க மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சமரவீர உள்ளிட்ட அரசின் முக்கிய பிரமுகர்கள் பலரும் தொடர்ந்தும் கூறிவரும் நிலையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனீவாவில் மேற்படி கருத்தை வெளியிட்டார்.

2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலுள்ள விடயங்களை ஏற்பதற்கு இலங்கை மறுத்து வருகிறது. வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் எதிரான கருத்துகளை இலங்கை வெளியிட்டு வருகிறது. ஆகவே, தாம் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலுள்ள விடயங்களுக்கே இலங்கை மறுப்பு தெரிவித்துவரும் நிலையில், அதற்கு மேலும் கால அவகாசம் வழங்குவது என்பது அர்த்தமற்றதாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.  அத்துடன், இலங்கை விவகாரமானது ஐ.நா. பாதுகாப்பு சபை உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகள் நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் தொடர்ந்தும் தனது மறுப்பை வெளியிட்டுவரும் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவது அர்த்தமற்றது என்ற நிலையில், இலங்கை விவகாரம் ஐ.நா. பாதுகாப்பு சபை உள்ளிட்ட மாற்று வழிகள் நோக்கி நகர்த்தப்பட வேண்டும். அதன்மூலம் தான் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அதைவிடுத்து, தீர்மானத்திற்கு அனுசரணையும் வழங்கிக் கொண்டு அதன் உள்ளடக்கத்தை அமுல்படுத்த மறுப்பது அர்த்தமற்றது. இவ்வாறான நிலையில், மேலும் கால அவகாசம் வழங்குவது அரசாங்கம் காலத்தை கடத்துவதற்கே ஏதுவாக அமையும்.  ஆகவே, இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் தீவிரமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் இதன்போது வலியுறுத்தினார்.

Related News