ஐ.நாவுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: இனியும் காலஅவகாசம் வேண்டாம் என வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டம்
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனிதவுரிமை பேரவைக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால் இனியும் காலஅவகாசம் வழங்கக் கூடாது எனக் கோரி வவுனியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்விணாரதப் போராட்டத்திற்கு முன்பாகவே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டவர்கள், ஐ.நாவே இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்காதே, சர்வதேசமே எங்களுக்கு தீர்வைத் தா, வழங்காதே வழங்காதே காலநீடிப்பை வழங்காதே, சர்வதேசமே நீதியை புதைக்காதே என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
யாழ்ப்பாணம் உட்பட வதக்கி கிழக்கின் பல பகுதிகளிலும் ஐ நா கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ். பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், ஐ.நா வே பாதிப்புற்ற மக்கள் நாங்கள், சர்வதேச விசாரணையே வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிப்புற்ற தமிழ் மக்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு விடுக்கும் வேண்டுகோள் எனத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில்,
இலங்கை படையினரால் எங்கள் சொந்தங்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, 30 இன் கீழ் 1 இன் தீர்மானத்தின்படி ஸ்ரீலங்கா அரசாங்கம் தன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான கால அவகாசத்தை கொஞ்சம் கூட நீடிக்காதீர்கள் என்றும் வலியுறுத்தப்பட்டது.
கடந்த 18 மாதங்களாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இதனால் இன்னும் கால அவகாசத்தை வழங்கி பாதிக்கப்பட்ட எமக்கு நீதி மறுக்கப்படுவதை ஏற்க முடியாது. எனவே பாதிக்கப்பட்ட எமது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஐ.நா காலஅவகாசம் வழங்கக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
N5









