செய்திகள்

மக்களின் எழுச்சியும் அரசாங்கத்தின் கண்டுகொள்ளாத் தன்மையும்

நரேன்

ஜெனீவா திருவிழா முடிந்து விட்டது. அங்கு முகாமிட்ட பலரும் தற்போது தமது இடங்களை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் நினைத்தது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் ஆதரவுடன் இரண்டு வருட காலஅவகாசத்தை பெற்றிருக்கின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஐப்பசி முதலாம் திகதி இலங்கை அரசாங்கம் இணைஅனுசரணை வழங்கி எடுக்கப்பட்ட எச்.ஆர்.சி 30- 1இன் கீழான தீர்மானங்கள் எவையும் 18 மாதங்கள் கடந்தும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் மீண்டும் ஒரு காலஅவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த காலஅவகாசம் முடியும் போது இலங்கை மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கோ அல்லது பொதுத்தேர்தலுக்கோ முகங்கொடுக்கக் கூடிய நிலை உள்ளது. இதனால் ஐ.நா தீர்மானங்கள் மீண்டும் ஒரு புதிய அரசாங்கம் அல்லது தேர்தல் நெருங்குகின்றது என்ற சாட்டுப்போக்கின் அடிப்படையில் வலுவிழந்து செல்வது அல்லது மீண்டும் கால நீடிப்புக்களை வழங்கி நீர்த்துப் போகச் செய்வது, அல்லது இவை எதுவும் நடைபெறாமல் கூட மழுங்கடிக்கப்படும் நிலையுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணையின் கீழ் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமா என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கேள்வியாகவும் அங்கலாய்ப்பாகவும் உள்ளது.

இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அதாவது சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக ஓடுங்கப்பட்ட தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காக போராடி வருகின்றது. அந்த மக்களுக்கான நிரந்தரமான, நியாயபூர்வமான அரசியல் தீர்வை வழங்குவதற்கு சுதந்திரம் பெற்ற காலம் முதல் தென்னிலைகயில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசியல் கட்சிகள் தயாராக இருந்திருக்கவில்லை. குறைந்த பட்சம் தமிழ் தேசிய இனத்தின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் கூட பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் முன்னுள்ள சிறிய சிறிய பிரச்சனைகளைக் தீர்க்க தயங்குகின்ற நிலையே காணப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டு வரை இந்த நாட்டில் நிலவிய குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து வீட்டுக்கு அனுப்பி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதில் தமிழ் தேசிய இனத்தின் பங்களிப்பு முக்கியமானது. அப்படியான நிலையிலும் இந்த அரசாங்கம் கூட ஓடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை தக்க வைக்க முயன்றதாக தெரியவில்லை.

நல்லாட்சி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் முடிவடைந்த பின் தமிழ் தேசிய இனம் தமது நிலங்களை விடுவிக்குமாறும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பில் பதில் அளிக்கக் கோரியும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களில் மக்கள் கோருகின்ற விடயங்கள் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு ஐ.நாவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை செய்வதாக வாக்குறுதி வழங்கிய விடயங்களே. அதை நிறைவேற்றாமையால் தான் தற்போதைய மக்கள் போராட்டங்கள் உருவெடுத்தன. தமது பிரச்சனைகள் தொடர்பில் அரசாங்கத்தை கவனம் செலுத்த வைப்பதற்காகவும், அரசாங்கத்திடம் இருந்து ஒரு நியாயமான தீர்வினைப் பெறுவதற்காகவுமே இத்தகைய மக்கள் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அரசாங்கம் அந்தப் போராட்டங்கள் குறித்து கவனம் செலுத்துவதை விடுத்து முன்னைய ஆட்சியில் இவ்வாறு வீதியில் இறங்கிப் போராட முடியாது. வெள்ளை வான் வந்திருக்கும். ஆனால் தற்போது மக்கள் சுதந்திரமாக போராடக் கூடிய நிலை உருவாகியிருக்கிறது என்று கூறுகின்றது. வீதியில் இறங்கிப் போராடுவதற்காக பாதிக்கப்பட்ட இம் மக்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவில்லை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அதேநேரம் மஹிந்த ஆட்சியில் வெள்ளைவான் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்த போதும் மக்கள் போராட்டங்கள் நடந்திருந்ததினை மறுத்துவிடவும் முடியாது. குடும்பம், குடும்பமாக வீதி ஓரங்களிலும், தற்காலிக தகரக் கொட்டகைக்குள்ளும் மழை, வெயில் எனப் பாராதும், நுளம்புத் தொல்லை, புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல், மனஉளைச்சல் என்பவற்றோடு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஜனநாயக ரீதியாக போராடுகிறார்கள். இங்கு போராட்டம் என்பது மக்கள் விரும்பிச் செய்வதொன்றல்ல.. பாதிக்கப்பட்ட மக்களது பிரச்சனைகள் தீர்க்கப்படாதவிடத்து அதை தீர்க்குமாறு கோர வேண்டியேற்பட்டுள்ளது. அந்த நிலையை அரசாங்கமே ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குரிய தீர்வை அல்லது அது தொடர்பில் நல்லெண்ண செயற்பாடுகளை முன்னெடுப்பதை விடுத்து போராட சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என கூறுவது இந்த அரசாங்கத்தின் ஒரு பொறுப்பற்ற தன்மையே என்று பலரும் கூறுகிறார்கள்.

மக்களது தன்னெழுச்சியான போராட்டங்கள் இன்று ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. முல்லைத்தீவு புலக்குடியிருப்பு, கிளிநொச்சி பரவிப்பாஞ்சான், புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் ஜனநாயக ரீதியாக நீலமீட்புப் போரில் ஈடுபட்ட மக்கள் அதில் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். மக்களது காணிகள் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. மக்களின் துணிச்சலான தன்னெழுச்சி மிக்க தொடர் போராட்டமும், ஜெனீவா விவகாரமும் அந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு இரு தினங்களில் தீர்வு கிடைத்துவிடும் என அறிவித்த மத்திய மீள் குடியேற்ற அமைச்சர்இ ஜெனீவா விவகாரம் முடியும் நிலையில் மீண்டும் இரு வாரத்திற்குள் கேப்பாபுலவு மக்களின் பிரச்சனை தீர்ந்து விடும் என சொல்லியிருக்கிறார். ஜெனீவாவை திருப்திப்படுத்துவதற்கான ஒரு காய் நகர்தலை இந்த அரசாங்கம் தொடர்ந்தும் நேரடியாகவும், சூட்சுமமாகவும் முன்னெடுத்து வருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்தும் ஏமாற்றியே வருகின்றது.

இதற்கு அப்பால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டம் இன்று கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ் வடமாராட்சி, திருகோணமலை, மட்டக்களப்பு என 6 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டம் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ஆனால் அது தொடர்பில் அரசாங்கம் கரிசனை செலுத்துவதாக தெரியவில்லை. கடந்த ஜனவரி மாதம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 14 பேர் தொடர்ச்சியாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இப் போராட்டத்தின் நான்காம் நாள் மாலை வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பெப்ரவரி 9 திகதி அலரிமாளிகையில் உயர்மட்ட பேச்சுக்கு ஒழுங்கு செய்வதாக வழங்கிய வாக்குறுதியை அடுத்து, இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறியிருந்த அந்த போராட்டம் கடந்தகால படிப்பினைகளுக்கு மத்தியிலும் இந்த அரசாங்கத்தையும், அதன் கீழ் உள்ள ஒரு அமைச்சரது வாக்குறுதியையும் நம்பி கைவிடப்பட்டிருந்தது. அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்புக்கு பின் கூட எந்தவித நல்லெண்ண செயற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை. இதனால் விரக்தியடையந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீண்டும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு மேலதிகமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன…? என நீதி கோரி அரசாங்கத்திற்கு 10 ரூபாய் வருமானத்தை முத்திரைக் கட்டணமாக வழங்கி கடிதம் அனுப்பி வருகின்றனர். இதுவரை 70 ஆயிரம் ரூபாய் வருமானத்தைக் கொடுத்து 7 ஆயிரம் கடிதங்கள் அலரி மாளிகைக்குச் சென்ற போதும் அதற்கான எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. ஐ.நாவுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அலுவலகம் அமைப்பதாக பாராளுமன்றத்தின் ஊடாக பிரேரணை கொண்டு வரப்பட்டும் அது இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட அந்த தீர்மானத்தில் கூட மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என ஜேவிபி போன்ற கட்சிகள் தற்போது கோரியிருக்கின்றது. ஆக, கண்துடைப்புக்காக கொண்டு வரப்போகின்ற அலுவலகத்தைக் கூட உடனடியாக அமைக்க தயாரில்லாத நிலையிலேயே அரசாங்கம் இருக்கின்றது.

அடுத்து தமிழ் அரசியல் கைதிகளைப் பொறுத்தவரை அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக எந்த வித வழக்கு விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவாக அவர்களது உறவினர்கள் மேற்கொண்ட போராட்டங்களும், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டங்களும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்து நிறுத்தப்பட்டன. தம்மீதான வழக்கினை பதிவு செய்யுமாறு கோரி, குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டு, நீண்டகாலமாக சிறையில் இருப்போர் போராட்டத்தை நடத்துகின்ற ஒரு வினோத நாடாக இலங்கை மாறியிருகிறது. அவர்களது போராட்டதின் வெற்றியாக பலருக்கும் தற்போது வழக்குகள் பதியப்பட்டு நீதிமன்றத்தின் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவை ஆரோக்கியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை. கடந்த 15, 20 வருடமாக சிறையில் உள்ள இவர்களை பிணையில் விடுவித்து அவர்கள் மீதான வழக்கு விசாரணைகளை தொடர முடியும். அவர்கள் தப்பிச் செல்லாமல் தடுப்பதற்கும், பிணை நிபந்தனைகளை போடுவதற்கும் நீதித்துறையிடம் பல வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அவ்வாறு எதுவும் செய்யப்படாது அவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது என்பது ஒரு நல்லிணக்க முயற்சியாக அமையாது. பாரிய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்களை பிணையில் விடுவித்து வழக்கு நடத்துமாறு அரசாங்கம் கூறலாம் எனில், 20 வருடமாக எந்தவித வழக்கும் இன்றி சிறையில் இருந்தவர்களை பிணையில் விடுவித்து அவர் மீதான வழக்கை ஏன் முன்னகர்த்த முடியாது என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.

ஆக, தற்போது வடக்கு, கிழக்கு உளட்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற மக்கள் போராட்டங்களை இந்த அரசாங்கம், இந்த நாட்டில் வாழுகின்ற ஒரு தேசிய இனத்தின் பிரச்சனையாக கருதி தீர்க்க முன்வர வேண்டும். அதற்காக குறைந்தபட்சம் அந்த மக்களின் தவிப்புக்களையும், ஏக்கங்களையும், அழுகைகளையும் ஒரு மனிதாபிமான ரீதியாகவாவது முதல்கட்டமாக அணுக முன்வரவேண்டும். அதன் மூலமே நீடித்து நிற்கக் கூடிய ஒரு நல்லிணக்கம் பற்றி சிந்திக்க முடியும். இந்த அரசாங்கம் அதனை செய்ய தவறுகின்ற நிலையில், அரசாங்கத்தை வழிக்கு வரவைக்க வேண்டிய பெரும் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் தலைமைக்கும் உள்ளது. ஐ.நாவில் இலங்கை அரசாங்கம் இணை அணுசரணை வழங்கி அந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும், தொடர்ந்தும் இழுதடிப்புக்களை செய்வதற்கும் துணை போகும் கூட்டமைப்பின் தலைமை இந்த விடயத்தில் காத்திரமான ஒரு நடவடிக்கையை செய்ய வேண்டும். அதன் மூலமே மக்கள் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரமுடியும். அதை கூட்டமைப்பின் தலைமை செய்யாத நிலையில் மக்கள் போராட்டங்கள் தலைமைகளுக்கு எதிராக மாறும் நிலை உருவாகுவதை தடுத்துவிடவும் முடியாது என்பதே தற்போதைய கள ஜதார்த்தம்.

N5