திரிசங்கு நிலையில் தமிழர்கள்
வீரகத்தி தனபாலசிங்கம்
ஜெனீவாவில் 10 தினங்களுக்கு முன்னர் முடிவடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 2015 அக்டோபர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு இருவருட கால அவகாசத்தை வழங்கியிருப்பதையடுத்து எதிர்வரும் நாட்களில் அரசாங்கம் இது தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும் அல்லது எடுக்கக்கூடியதாக இருக்கும் என்பதே அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களின் முக்கிய அவதானிப்புக்குரிய விடயமாக இருக்கிறது. முன்னைய தடவையைப் போன்றே இத்தடவையும் அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணையை வழங்கிய அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் முழுமையான ஆதரவுடன் கால அவகாசத்தை பெறக்கூடியதாக இருந்ததை பெரியதொரு இராஜதந்திர வெற்றியென்று பெருமைப்படுகிறது. அதேவேளை, தென்னிலங்கை எதிரணியினர் குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான. அரசியல் சக்திகள் 2015 அக்டோபர் தீர்மானத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு முயற்சிக்காமல் அதே தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசத்தை வழங்கும் புதிய தீர்மானத்துக்கும் இணை அனுசரணையை வழங்கியதன் மூலமாக அரசாங்கம் மேற்குலக நாடுகளின் பொறியில் சிக்கிவிட்டதாக விமர்சனம் செய்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மறுபுறத்தில், இலங்கைத் தமிழர்களின் பிரதான அரசியல் பிரதிநிதிகளாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2017 மார்ச் தீர்மானத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்த போதிலும் கடந்த 18 மாதங்களாக ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உருப்படியான எந்தக் காரியத்தையும் முன்னெடுக்காத அரசாங்கத்துக்கு மேலும் இருவருட கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது குறித்து பொதுவில் தமிழர்கள் மத்தியில் ஏமாற்றமும் கடுமையான விசனமுமே காணப்படுகிறது.
2015 அக்டோபர் தீர்மானத்தின் பிரகாரம் அமைப்பதாக அரசாங்கம் உறுதியளித்த நான்கு நல்லிணக்கப் பொறிமுறைகளில் எந்தவொன்றுமே செயற்படுத்தப்படவில்லை. அவற்றில் ஒன்றான காணாமல் போனோர் விவகார அலுவலகத்துக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துவிட்டபோதிலும் இன்னமும் அது வெறுமனே ஒரு சட்டமாக காகிதத்திலேயே இருக்கிறது. அந்தச் சட்டத்துக்கு மேலும் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் குறித்து அரசாங்கம் பேசிக்கொண்டிருக்கிறது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு அமைக்கப்படவேண்டிய நீதி விசாரணைப் பொறிமுறையேயாகும். வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களையும் உள்ளடக்கியதாக கலப்பு முறையிலான (Hybrid Court) நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும் என்று ஜெனீவா தீர்மானத்தில் கூறப்பட்ட போதிலும், அதற்கு இணை அனுசரணை வழங்கியதையும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் உள்நாட்டு நீதி விசாரணைப் பொறிமுறையைப்பற்றியே தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டு வந்திருக்கிறது.
வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்ற அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டுக்கு மத்தியிலும் கடந்த மாத ஜெனீவா கூட்டத் தொடரிலும் கூட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் செய்த் ராட் அல் – ஹுசெய்ன் கலப்பு முறையிலான நீதிமன்றத்தின் அவசியத்தை வலியுறுத்தத் தவறவில்லை. இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இறுதியாக நிகழ்த்திய உரையில் இளவரசர் ஹுசெய்ன் கலப்பு முறையிலான நீதி விசாரணைப் பொறிமுறையின் தேவையை நாம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருப்போம் என்று குறிப்பிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. ஆனால், கூட்டத் தொடரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய பிரதி வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா சர்வதேச உதவியுடனும் ஆதரவுடனும் கூடிய உள்நாட்டு பொறிமுறையொன்றை அமைப்பதிலேயே தாங்கள் நாட்டம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். கடந்த வாரம் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர 2017 ஜெனீவா தீர்மானம் தொடர்பிலான இறுதி முடிவுகள் சுயாதிபத்தியம் கொண்ட அரசு என்ற வகையில் இலங்கையைப் பொறுத்தவையே என்று குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது. உண்மை ஆணைக்குழுவின் (Truth seeking commission) வடிவம் குறித்து பல்வேறு நிபுணர்களுடன் அரசாங்கம் கலந்தாலோசனை நடத்தி வருவதாகவும் அடுத்த ஒரு சில மாதங்களில் உண்மை ஆணைக்குழுவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது தங்களது முன்னுரிமைக்குரிய விவகாரங்களில் ஒன்று என்றும் சமரவீர கூறியிருந்தார்.
ஜெனீவா கூட்டத்தொடர் முடிவடைந்த கையோடு அரசாங்கத் தரப்பில் இருந்து இத்தகைய கருத்துகள் வந்தாலும் உள்நாட்டில் ஏற்படக்கூடிய அரசியல் நிலவர மாற்றங்களைப் பொறுத்தே ஜெனீவா தீர்மானம் தொடர்பிலான நடவடிக்கைகள் அமையும் என்பதில் சந்தேகமில்லை. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அவதானித்து மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் (2018 மார்ச்) ஒரு எழுத்துமூல அறிக்கையையும் 40ஆவது கூட்டத் தொடரில் (2019 மார்ச்) விரிவான அறிக்கையொன்றையும் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. இதுவே இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களுடன் தொடர்புடைய ஜெனீவா செயன்முறைகளின் இறுதியான நிலவரமாகும். இது இவ்வாறிருக்க, ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதேதினம் பாராளுமன்றத்தில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ நிகழ்த்திய உரையில் இந்த விவகாரங்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. போர்க்குற்ற விசாரணைகளுக்காக நீதிமன்றத்தை அமைக்குமாறு இலங்கையை நிர்ப்பந்திப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கண்டனம் தெரிவித்த அவர், ஆயுதப் படைகளின் உறுப்பினர்களை அத்தகைய நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான திட்டங்கள் பெரும் அனர்த்தத்துக்கு வழிவகுக்கும் என்றும் அவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்கச் செயன்முறைகளைப் பாதிக்கும் என்பதுடன் இனங்களுக்கிடையில் அமைதியின்மையையும் தோற்றுவிக்கும் என்றும் கூறினார். ‘போர்க்காலத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய குற்றங்கள் தொடர்பில் விசாரணையையும் நல்லிணக்கச் செயன்முறைகளையும் ஒரேநேரத்தில் முன்னெடுப்பதென்பது எந்த வகையிலும் யதார்த்த பூர்வமான அணுகுமுறையாக இருக்கப் போவதில்லை. போர்க்குற்ற விசாரணையும் நல்லிணக்கமும் தண்டவாளங்களைப் போன்றவை. அவை ஒருபோதும் ஒன்றுடன் ஒன்று சந்திக்காது. ஒரு புறத்தில், அவர்கள் பொறிமுறையொன்றை அமைத்து விசாரணை நடத்தி குற்றவாளிகளாகக் காணப்படக்கூடியவர்களைத் தண்டிக்குமாறு எங்களை கேட்கின்ற அதேவேளை, மறுபுறத்தில் நல்லிணக்கத்தை நோக்கி செயற்படுமாறும் கேட்கிறார்கள். இந்த இரு நிலைப்பாடுகளுமே ஒத்திசைவாகச் செல்ல முடியாதவையாகும். கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் ஆட்கள் சாட்சியங்களைக் கூறி போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று எவரையாவது சுட்டிக்காட்டும்போது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டையும் சுயாதிபத்தியத்தையும் பாதுகாப்பதற்காக உயிரையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட முப்படைகளையும் பொலிஸாரையும் விரோதித்துக்கொள்ளவேண்டியிருக்கும். அதனால் சிங்கள சமூகத்துக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்படும். அத்தகைய நிலைமை இன்னொரு போருக்கே வழிவகுக்கும்’ என்று நீதியமைச்சர் தனதுரையில் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் இந்தக் கருத்துகள் ஊடாக தமிழர்களுக்கு ஒரு செய்தி சொல்லப்படுகிறது. தமிழர்கள் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்துவதாயின் நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்பதே அச்செய்தியாகும்.
அமைச்சர் ராஜபக் ஷ நேரடியாக தமிழர்களை நோக்கி உங்கள் தெரிவு என்னவென்று கேட்கவில்லையென்றாலும், 2015 அக்டோபர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருவருட கால அவகாசம் வழங்கி மீண்டும் ஜெனீவாவில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்ட கையோடு அவரின் உரையின் மூலமாக அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிகாட்டப்பட்டிருக்கிறதோ என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இத்தகையதொரு பின்புலத்திலேயே கடந்தவாரம் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் (National Peace Council of Sri Lanka) நிறைவேற்றுப்பணிப்பாளரான கலாநிதி ஜெகான் பெரேரா வெளிப்படுத்திய கருத்துகளும் முக்கிய கவனத்துக்குரியவையாகின்றன. கடந்த மாதத்தைய ஜெனீவா கூட்டத் தொடரில் பங்கேற்ற இலங்கைத் தூதுக்குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார். அத்தூதுக்குழுவின் உறுப்பினர்களுடனான தனது கலந்துரையாடல்கள் காரணமாக தன்னால் உணரப்படக்கூடியதாக இருந்த ஒரு நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் தான் ஜெகான் பேரேரா இக்கருத்துகளை அரசியல் மற்றும் சிவில் சமூகத்தின் மத்தியில் ஒரு விவாதத்தை தூண்டிவிடும் நோக்கில் முன்வைத்தாரோ என்று எண்ணவேண்டியிருக்கிறது.
நிலைமாறுகால நீதியைப் (Transitional justice) பொறுத்தவரை போர்க்குற்ற விசாரணைக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தால் நல்லிணக்கச் செயன்முறைகளில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருக்காது என்று ஜெகான் பெரேரா எழுதியிருக்கிறார்.
‘இலங்கையில் எதிரணியினர் தேசிய சுயாதிபத்தியம் மற்றும் தேசிய பாதுகாப்பு மீதே கவனம் செலுத்துகிறார்கள்.’ இந்த விவகாரம் தொடர்பில் பொது வெளியில் விவாதம் என்று வரும்போது சவால்களுக்கு முகங்கொடுப்பதில் அரசாங்கம் பெரும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். பெரும்பாலான மக்களின் மனதில் வேறு எந்தவொரு விவகாரத்தையும் விட தேசிய பாதுகாப்பே கூடுதல் அக்கறையையும் முன்னுரிமையையும் பெறுகிறது. இந்த யதார்த்த நிலைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழான அமெரிக்கா ஒரு மிக அண்மைய உதாரணமாகும்.
இத்தகைய அனுகூலமற்ற அரசியல் சூழ்நிலையில் நிலைமாறு கால நீதிக் கோட்பாட்டின் மைய விவகாரமாக போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை முக்கியத்துவப்படுத்துகின்ற அணுகுமுறையில் இருந்து விடுபட்டால் மாத்திரமே நல்லிணக்கத்தை நோக்கி நகரக்கூடியதாக இருக்கும். போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் மீதான நாட்டத்துக்கு நிலைமாறுகால நீதிச் செயன்முறை முழுவதும் பணயமாக வைக்கப்பட்டிருப்பதே இன்றுள்ள பிரச்சினையாகும்.
நிலைமாறுகால நீதி என்பது பொறுப்புக் கூறலைப் பற்றியது மாத்திரமல்ல, அது உண்மையைக் கண்டறிதல், இழப்பீடு மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும். பொறுப்புக் கூறலை உறுதிசெய்வதென்பது பல தசாப்தங்கள் நீடிக்கின்ற ஒரு நெடிய செயன்முறையாகும் என்பதை ஏனைய நாடுகளின் அனுபவங்கள் வெளிக்காட்டுகின்றன. போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்படுகிறவர்கள் அரசியல் எதிரணியிலும், இராணுவத்திலும் இன்னமும் பலம்பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். நாட்டைப் பிரிவினையில் இருந்து காப்பாற்றியவர்கள் என்பதற்காக அவர்கள் சனத்தொகையின் பரந்தளவு பிரிவினரின் ஆதரவைக்கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் விளைவாக அரசாங்கத்தின் முக்கியமான கடப்பாடுகள் சகல மட்டங்களிலும் தடங்கலுக்குள்ளாகியிருக்கின்றன. போர்க்குற்றங்களை மையமாகக்கொண்ட நிலைமாறுகால நீதிச் செயன்முறை முன்னோக்கி நகரப் போவதில்லை என்பது இப்போது தெளிவாக விளங்கிக்கொள்ளப்படவேண்டும். பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச விசாரணை மன்றம் அல்லது கலப்பு முறையிலான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலைமாறுகால நீதிக்கு எதிரானவர்களின் கரங்களையே வலுப்படுத்துகிறது. சர்வதேச சமூகத்தினதும் தமிழ் அரசியல் சமுதாயத்தினதும் சில பிரிவினரால் வலியுறுத்தப்படுவது போன்று நிலைமாறுகால நீதியின் மைய விவகாரமாக போர்க்குற்றங்கள் மீதான விசாரணையைக் கருதினால் நிலைமாறுகால நீதிக்கு மக்களின் ஆதரவைப் பெறுவதென்பது மேலும் கஷ்டமானதாகிவிடும் என்று ஜெகான் பெரேரா கூறியிருக்கிறார். (கொழும்பு ரெலிகிராவ் 27 மார்ச் 2017)
எமது பிரச்சினை உலகில் முன்னுதாரணம் இல்லாதது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். போரில் தோல்வி கண்டவர்களுக்கு எதிராகவே இதுவரையில் போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் போரில் வெற்றியடைந்தவர்களுக்கு எதிராக அவர்களாகவே விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப்படுகிறது. இந்த ‘வித்தியாசமான கோலம்’ எமது தேசிய இனப்பிரச்சினையையும் அதற்கான தீர்வு முயற்சிகளையும் மேலும் சிக்கலாக்குகிறது. இந்தச் சிக்கலின் பிரதிபலிப்பே இன்றைய அரசியல் கருத்தாடல்களும் விவாதங்களும் ஏன் விதண்டாவாதங்களும்தான்.
நீதியமைச்சர் ராஜபக் ஷவும் கலாநிதி ஜெகான் பெரேராவும் முன்வைத்திருக்கும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தமிழர்கள் ஒன்றில் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்த வேண்டும் அல்லது நல்லிணக்கத்தை எதிர்பார்க்க வேண்டும். இரண்டையும் ஏக காலத்தில் எதிர்பார்ப்பது ஏற்புடையதோ நடைமுறைச் சாத்தியமானதோ அல்ல என்றே அவர்கள் கூற முன்வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. தமிழர் தரப்பில் அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் இதற்கு தெளிவான பதிலொன்றை முன்வைக்கவேண்டும்.
போர்க்குற்ற விசாரணையைக் கைவிட தமிழர்கள் முன்வந்தால் அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய பயனுறுதியுடையதும் நிலைபேறானதாக அமையக்கூடியதுமான அரசியல் தீர்வொன்றைத் தருவதற்கு சிங்கள மக்களைத் தயார்படுத்துவதற்கான அரசியல் துணிவாற்றலும் தூரநோக்கும் அரசாங்கத்துக்கும் எஞ்சிய சிங்கள அரசியல் சமுதாயத்துக்கும் இருக்கிறதா? நல்லிணக்கச் செயன்முறையை விட போர்க்குற்ற விசாரணையே தங்களுக்கு இப்போது முக்கியமானது என்று சொல்வதற்கு தமிழர்கள் தயாராயிருக்கிறார்களா? அரசியல் தீர்வு விவகாரத்தைப் பொறுத்தவரை, கடந்த வருடம் ஏப்ரலில் புதிய அரசியலமைப்பு வரைவுக்கான செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்ட நாளில் இருந்து தென்னிலங்கை அரசியலில் இடம்பெற்றுவருகின்ற வாதப் பிரதிவாதங்களை நோக்கும் போது தமிழர்கள் நம்பிக்கை வைப்பதற்கு எதுவுமேயில்லை என்பதே யதார்த்த நிலையாகும்.
விடுதலை புலிகளைத் தோற்கடித்த போரில் சம்பந்தப்பட்ட எந்தவொரு படைவீரருக்கு எதிராகவும் போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கின்ற சிங்கள அரசியல் சமுதாயத்திடமே பொறுப்புக்கூறல் கடப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் எதிர்பார்க்க வேண்டிய திரிசங்கு நிலையில் தமிழர்கள் இன்று விடப்பட்டிருக்கிறார்கள்.







