செய்திகள்

காற்று வெளியிடை பட நடிகை அதிதிராவ் தமிழ் கற்ற அனுபவம்

மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ள அதிதிராவ், ஐதராபாத்தை சேர்ந்தவர்.மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்து இருக்கிறார். அவருடனான சந்திப்பு:
* சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்?
நான் 11 வயதில் பிரஜாபதி என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். அதன்பிறகு இந்தியில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்து மும்பைக்கு சென்றேன். அங்கு சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ படத்தில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறேன். மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை தமிழ் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறேன். எனக்கு சினிமாவில் எந்த பின்புலமும் இல்லை. உதவிக்கும் ஆட்கள் இல்லை. சொந்த முயற்சியில் கஷ்டப்பட்டு உயர்ந்தேன். சினிமாவில் எனக்கு திருப்புமுனை படம் எதுவும் அமையவில்லை என்று தோழிகள் சொல்லி வருத்தப்படுவது உண்டு. மணிரத்னம் படம் மூலம் அந்த குறை நீங்கி இருக்கிறது.
* மணிரத்னத்திடம் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
மணிரத்னம் இயக்கத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்பு தொடங்கும் முன்பே எங்களுக்கு தினமும் டியூசன் எடுத்து நடிப்பு பயிற்சிகள் அளித்தார். தமிழ் உச்சரிப்பு எப்படி இருக்க வேண்டும். ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் பயிற்சிகள் அளித்தார். எனக்குள் இருந்த முழு நடிப்பு திறமையையும் வெளிக்கொண்டு வருவதற்கு அது உதவியாக இருந்தது.மணிரத்னம், சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் எனக்கு பிடித்த டைரக்டர்கள். அவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது லட்சிய கனவாக இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. மணிரத்னம் படங்கள் பார்த்து வளர்ந்தேன், அவர் இயக்கிய பம்பாய் படம் மறக்க முடியாதது. அதில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா எனக்கு பிடித்த நடிகை. மணிரத்னம் படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.
* கதைகள் தேர்வில் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பது உண்டா?
யாரிடமும் ஆலோசிப்பது இல்லை. நானே சுதந்திரமாக கதைகள் கேட்கிறேன். பிடித்தமானதை தேர்வு செய்கிறேன். ஆரம்பத்தில் நான் நடித்த பல படங்கள் தோல்வி அடைந்து ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறேன். அதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு எனக்குள் இருக்கிறது.சினிமா துறையில் அப்பா, அம்மா, பாட்டி என்று உறவினர்களை வைத்துக்கொண்டு அவர்கள் உதவியோடு பலர் நடிக்க வருகிறார்கள். அவர்களுக்கு சினிமாவில் எளிதாக அறிமுகமாவதற்கு குடும்பத்தினர் உதவலாம். ஆனால் சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் திறமை வேண்டும். திறமை, தகுதி இல்லாத நடிகர்-நடிகைகளை திரையுலகம் ஓரங்கட்டி விடும். ஆரம்ப காலங்களில் சினிமாவில் என்னை தூக்கி விட குடும்பத்தினர் யாரும் இல்லையே என்று ஐந்து வயது குழந்தை மாதிரி தேம்பி தேம்பி அழுத சம்பவங்கள் உண்டு. ஆனால் சீக்கிரமே அந்த சோகத்தில் இருந்து வெளியே வந்து விடுவேன்.
* வாழ்க்கையில் உங்களை வேதனைப்படுத்திய சம்பவங்கள்…?
படங்கள் தோல்வி அடையும்போது வேதனைப்பட்டு இருக்கிறேன். அதுபோல் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவமும் என்னை மிகவும் பாதித்தது. எனது சிறு வயதிலேயே அம்மாவும் அப்பாவும் பிரிந்து விட்டனர். அம்மாவிடம்தான் நான் வளர்ந்தேன். அப்பாவுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கும். ஆனால் அப்பாவுக்கு ஏனோ எங்களுடன் சேர விருப்பம் இல்லை. என்றாவது ஒருநாள் அப்பா என்னை தேடி வருவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அவர் இறந்து விட்டார். அப்பாவை நினைத்து ரொம்ப அழுதேன்.
* பர்கான் அக்தரை நீங்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்துள்ளதே?
பர்கான் அக்தரும் நானும் நெருங்கிய நண்பர்கள். வாசிர் என்ற படத்தில் சேர்ந்து நடித்து இருக்கிறோம். அதை வைத்து காதல் என்று கதை கட்டி விட்டனர். ஒரு கட்டத்தில் பர்கான் அக்தர் திருமண வாழ்க்கை முறிந்து போனதற்கு நான்தான் காரணம் என்று பேசினார்கள். இது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. அவரது திருமண முறிவுக்கு என்னை பலிகடா ஆக்கிவிட்டார்களே என்று அழுது இருக்கிறேன். நல்லநாளில் இந்த சோகத்தை பற்றி பேச விரும்பவில்லை. எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.”201704141548161385_Actress-atitirav-Tamil-learning-experience_SECVPF