செய்திகள்

மோடியின் வருகையும் தமிழ் தலைவர்களின் சந்திப்பும்

-நரேன்-

சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு அதனை தொடக்கி வைக்கும் முகமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு வந்து திரும்பியுள்ளார். இவருடைய பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த போதிலும் உலகம் முழுவதிலும் ஒரு யுத்த அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் நிகழ்ந்துள்ளமை கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னரே இப்படியான ஒரு யுத்த சூழல் ஏற்படப் போகிறது என்று உலகத் தலைவர்களுக்கு தெரிந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் மோடியின் வருகையானது ஒரு விழாவில் கலந்து கொள்வதாக மட்டுமே என்று இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மோடியின் உடைய 2015 ஆம் ஆண்டின் வருகைக்கும் 2017 ஆம் ஆண்டின் வருகைக்கும் இடையில் ஒரு பாரிய வேறுபாட்டை காணக் கூடியதாகவிருந்தது. 2015 இல் அவர் வரும் போது இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லை. யுத்தம் இடம்பெற்ற வடமாகாணத்திற்கான அவரது பயணமும் கூட மிகவும் எளிமையானதாகவும், ஒரு சகஜ நிலையிலும் அமைந்திருந்தது. 2017 ஆம் ஆண்டு விஜயத்தைப் பொறுத்தவரையில் அவர் தனது சிறப்பு கறுப்பு பூனைப் படையுடனும், நான்கு ஹெலிகெப்டர்களுடனும், ஆறாயிரம் இலங்கைப் பொலிசாரின் பாதுகாப்பின் மத்தியிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் வந்திருந்தார்.

இந்த விஜயத்தின் சிறப்பம்சம் இந்தியப் பிரதமர் தனது நாட்டின் பூர்வீக குடிகளான மலையக மக்களை சந்தித்திருப்பதாகும். இதற்கு முன்னர் 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி இந்தியாவின் அஹிம்சாவதி மகாத்மா காந்தி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இது அரசியல் ரீதியான பயணமல்ல. மூன்று வாரங்கள் இலங்கையில் தங்கியிருந்த காந்தி கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தளை, பதுளை, காலி, சிலாபம், ஹற்றன் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றிருந்தார். 1931ஆம் ஆண்டு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு வந்திருந்த இந்திய முன்னாள் பிரதமர் நேரு நுவரெலியாவில் ஒரு நாள் தங்கியிருந்தார். பின்னர் 1939 ஆம் ஆண்டு காந்தியின் கோரிக்கையின் பிரகாரம் மலையகத்துக்கு நேரு வந்திருந்தார். அக்காலப் பகுதியில் இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. இதனைச் சமாளிப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் பலமானதொரு கட்டமைப்பு அவசியமாகியிருந்தது. அதனை அமைக்கும் நோக்கிலேயே நேரு வந்திருந்தார். ஆனால் இவை அனைத்தும் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன் இடம்பெற்றவை. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மலையகத்திற்கு வந்த முதல் இந்திய பிரதமராக மோடி இடம்பிடித்துள்ளார்.

இதனால் இந்தச் சந்திப்பானது மலையக மக்களின் வாழ்வில் எத்தகைய திருப்பத்தைக் கொண்டு வரப் போகிறது என்ற கேள்வியே பலமாக எழுப்புகிறது. மோடியின் மலையக விஜயத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டனியினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசும் மாறி மாறி உரிமை கோரி வந்த நிலையில் மலையக புத்திஜீவிகள், நாளாந்த வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கே துன்பப்படும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், அரசியல் விழிபுணர்வு பெற்ற இளைஞர்கள்- யுவதிகள் ஆகியோர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இரண்டு தரப்பினரும் ஒரே மேடையில் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பியும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் திகாம்பரமும் இவர்களுடன் அமைச்சர் மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், முத்துசிவலிங்கம் எம்.பி ஆகியோரும் மலையக மக்கள் சார்பாக ஒரே மேடைக்கு வந்த அதேவேளை, மோடியுடன் பேச்சுக்களிலும் ஈடுபட்டுள்ளனர். மலையக மக்களின் கல்வி மற்றும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்குள் குறித்து மலையகத் தலைவர்கள் இந்திய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். மலையகத் தமிழர்களுக்கும், இந்திய தமிழர்களுக்கும் இடையில் நெருக்கமான இரத்த உறவுகள் இருக்கின்றது. இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் தமிழகத் தமிழர்கள் இடையில் உள்ள மொழி மற்றும் கலாசார ரீதியான உறவுகள் காணப்படுகின்ற போதிலும் மலையகத் மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் இரத்த உறவும் காணப்படுகின்றது. ஆகவே மலையக மக்களின் உடைய விடயத்தில் இந்தியா அதிகம் கரிசனை கொள்ள வேண்டிய கடப்பாடும் இருக்கிறது. இவைகளை உள்ளடக்கியவாறே மோடியின் உடைய உரையும் அமைந்திருந்தது. மலையகத் தலைவர்கள் மத்தியில் ஒற்றுமை இருந்தால் தான் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பது எளிதாக இருக்கும் என்பதை இரண்டு தலைவர்களுனான சந்திப்பின் போது மோடி தெரிவித்திருந்தார்.

மலையக மக்களுக்கும், அம் மக்களின் தலைவர்களுக்கும் இந்திய பிரதமரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தியாவில் தாம் மீண்டும் மீண்டும் சந்தித்து வாக்கைப் பெற வேண்டிய மக்களுக்கு இந்திய பிரதமர் வழங்கிய வாக்குறுதிகளில் பல இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அப்படியான ஒரு நிலையில் தமக்கு வாக்கு ரீதியான அவசியமற்ற மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் உரிய காலத்தில் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி இயல்பானதே. அதனால் அத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மலையகத் தலைவர்கள் கூட்டாக அழுத்தம் கொடுக்க வேண்டும். வெறும் மோடியின் வருகைக்கான ஒற்றுமையாக மட்டும் இது இருந்து விடக்கூடாது.

மலையக அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை அவர்கள் தொழிற்சங்கமாக இருந்து அத் தொழிற்சங்கங்களையே அரசியல் கட்சிகளாக தோற்றம் பெறச் செய்தவர்கள். அவர்களிடம் மலையக மக்களின் அரசியல் உரிமை சார்ந்த விடயங்களை எதிர்பார்ப்பது கடினம். அவர்களது தேர்தல் கால வாக்குறுதிகள் கூட தொழிற்சங்கங்களால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் போன்றே அமைந்து விடுகின்றது. இந்த நாடு பிரித்தானியரின் காலனித்துவதத்திற்கு உட்பட்ட காலத்தில் இருந்து மலையக மக்கள் இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வருகிறார்கள். அவர்கள் தமக்கான அரசியல் உரிமை, அரசியல் அதிகாரங்கள் தொடர்பில் காலம் காலமாக பிரச்சனைகளை முகம் கொடுத்து வருகிறார்கள். ஒரு பேர்ச் நிலம் கூட இல்லாது இன்றும் பெரும்பாலானவர்கள் லயன்களில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த மக்களுக்கான அரசியல் உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டிய அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகள் வெறும் தொழிற்சங்ககங்களாக செயற்படுகின்றார்கள். உள்நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய உதவிகளையே இந்திய பிரதமரிடம் கேட்கும் நிலையில் இருக்கிறார்கள். ஆக, வெறும் ஒற்றுமை என்பதற்கு அப்பால் அரசியல் ரீதியாக கொள்கை வகுத்து மலையக மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்படுப்பதற்கான ஒரு ஜனநாயகக் கட்சி ஆக மாறி மலையகத் தலைமைகள் கட்சி அரசியலுக்குள் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.

மறுபுறம், ஒற்றுமை என்ற பெயரால் வடக்கு, கிழக்கு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நான்கு கட்சிகளின் கூட்டாகவுள்ளது. கட்சிக்கான கொள்கைகள் இருப்பினும் அவை வெறும் உதட்டளவில் பேசப்பட தொழிற்சங்கங்கள் போன்று சந்திப்புக்கு முன்னரான முடிவுகளை எடுக்கும் வெறும் அமைப்பாக அது செயற்பட்டிருக்கிறது. இந்திய பிரதமரின் வருகை ஏற்கனவே திட்மிட்ட ஒன்று. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களாகிக் கட்சிகள், தலைமைகள் இந்திய பிரதமரை சந்திப்பதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னதாகவே இந்திய பிரதமரை சந்தித்து என்ன பேசுவது என்று முடிவெடுத்துள்ளனர். ஆக, இவர்களிடமும் தமது நகர்வு குறித்தோ அல்லது தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு குறித்தோ சரியான ஒரு திட்டவட்டமான கொள்கை இருப்பதாக தெரியவில்லை.இவர்கள் கட்சியாக செயற்படுவதைவிடுத்து தொழிற்சங்க நிலைக்கு தரம் தாழ்ந்திருக்கிறார்கள். மலையகம் தன்னை அரசியல் ரீதியில் நிலைநிறுத்தப் போராடிக் கொண்டிருக்கின்றது. ஒட்டுமொத்தில் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை புறக்கணித்தவர்கள் அனைவரும் ஒரணியில் திரண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மோடியிக் வருகை யாருக்கு லாபம்…?

உலகம் ஒரு யுத்த அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. இதில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் உலக நாடுகளின் பாதுகாப்பிலும் தாக்கத்தை செலுத்தும். இந்த பின்னனியிலேயே தற்போது இலங்கைக்கு வருகின்ற இராஜதந்திரிகளையும், இலங்கை சார்பாக வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய இராஜதந்திரிகளையும் அவதானிக்க வேண்டியுமுள்ளது.

N5