செய்திகள்

சகவாழ்வு அமைச்சருடன் ஞானசார தேரர் நல்லிணக்கம் பேசிய இலட்சணம்

வீரகத்தி தனபாலசிங்கம் 

ராஜபக் ஷ ஆட்சிக் காலத்தில் இனக் குரோதப் பிரசாரங்களில் சுதந்திரமாக ஈடுபட்டு வன்முறைகளைத் தூண்டிவிட்ட தீவிரவாத பிக்குகள் தலைமையிலான சிங்கள, பௌத்த அமைப்புகள் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து சொற்பகாலம் உறங்கு நிலைக்கு சென்றிருந்தன. ஆனால், சில மாதங்களுக்கு முன்பிருந்து அந்த அமைப்புக்களின் அடாவடித்தனமான செயற்பாடுகள் மீண்டும் தொடங்கியிருந்ததையும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இச்செயற்பாடுகளின் தொடர்ச்சியில் பிந்திய சம்பவம் கடந்த புதன்கிழமை கொழும்புக்கு வெளியே இராஜகிரியவில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழிகள் அமைச்சில் இடம் பெற்றிருந்தது.

உண்மையான ஒரு பௌத்த பிக்குவின் சுபாவத்துக்கு எந்த வகையிலும் பொருந்திவராத வகையில் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் அமைச்சர் மனோ கணேசனுடன் நடத்திய சந்திப்பின் போது நடந்து கொண்ட முறையை இன்று உலகம் சமூக ஊடகங்களின் மூலமாக தெளிவாகப் பார்த்திருக்கும். சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சராக இருப்பதற்குப் பொருத்தமில்லாதவர் மனோ கணேசன் என்றும், அந்த அமைச்சை ஒரு  சிங்களவரிடமே கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்த ஞானசாரதேரர் அவரைச் சந்திப்பதற்காக வேறு சில பிக்குமார் சகிதம் கடந்த புதன்கிழமை காலை 10 மணியளவில் அமைச்சு அலுவலகத்துக்கு சென்றிருந்தார். அந்த வேளையில் அமைச்சர் மனோகணேசன் அங்கு இருக்கவில்லை. பொதுபலசேனா தூதுக்குழுவைச் சந்திப்பதற்கு முதலில் நேரத்தை ஒதுக்கியிருந்த அமைச்சர், தன் மீது தேரர் முன்வைத்த விமர்சனத்தினால் விசனமடைந்து சந்திப்பை ரத்துச் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதியும் பிரதமரும் கூட தங்களைச் சந்திப்பதற்குத் தயங்குவதில்லை. மனோகணேசன் யார் எங்களை அலட்சியம் செய்வதற்கு என்று ஆக்ரோஷமாகப் பேசிய ஞானசார தேரர் அமைச்சரை உடனடியாக வரச் சொல்லுங்கள். அவர் வராவிட்டால் இங்கிருந்து அகல மாட்டோம். அமைச்சை முற்றுகையிடுவோம் என்று அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரிடம் கூறினார். இறுதியாக அமைச்சர் வந்து ஞானசார தேரர் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதே மனோகணேசனிடம் ஞானசார தேரர் கேட்ட முதல் கேள்வி. இலங்கைக்கு சிங்களவர்களே சொந்தக்காரர்கள், ஏனையோர் வெளியாட்கள். அவர்கள் சிங்களவர்களின் நல்லெண்ணத்தில்தான் இங்கு வாழ்கிறார்கள். இந்த நாட்டின் மொழி சிங்களமே. எல்லோரும் சிங்களம் படிக்க வேண்டும் என்று தொடங்கிய தேரர் தனக்கேயுரித்தான அட்டகாசமான பாணியில் பேரினவாத அரசியல் பிரசங்கமொன்றைச் செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது. ஆரம்பத்தில் அதட்டுகின்ற தொனியில் அகந்தையுடன் பேசிய தேரர், அமைச்சர் கடைப்பிடித்த நிதானமான அணுகுமுறைக்கு முன்னால், தனது வாக்குவாதத் தொனியை மாற்றி, சற்று இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. இலங்கை சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஏனைய சமூகத்தவர்களும் வாழ்கின்ற நாடு. சிங்களவர்களும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்றே மகாவம்சம் கூறுகின்றது. சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகள் என்று அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. அதை எவரும் மறுக்க முடியாது என்று மனோகணேசனும் தேரருக்கு தனது நிலைப்பாடுகளை விளக்கிக் கூறினார். இந்த அமைச்சுப் பொறுப்பை வகிப்பதற்கு தான் பொருத்தமானவரா இல்லையா என்பதை ஜனாதிபதியைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் தேரர் குழுவினரிடம் கூறினார். மகாவம்சத்தை மேற்கோள் காட்டி மனோகணேசன் தெரிவித்த சில கருத்துக்களுக்கு பிரதிபலிப்பை வெளிக்காட்டிய ஞானசார தேரர் மகாவம்சத்தில் பொய்களும் உள்ளன என்று கூறியதையும் காணக்கூடியதாக இருந்தது.  ஞானசார தேரர் குழுவினருடனான சந்திப்பின் போது தன்னால் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறை குறித்து சில தரப்புகளிடமிருந்து வந்திருக்கக்கூடிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மனோகணேசன் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.

1

‘எனது அமைச்சுக்கு வந்த ஞானசார தேரருடன் நான் கட்டிப்பிடித்து உருண்டு மல்யுத்தம் செய்திருக்க வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். அப்படியல்ல. அவர் சொல்வதைச் சொல்ல, அவை எவ்வளவு முட்டாள் தனமானவையாக இருந்தாலும் கூட அவருக்கு நான் இடமளித்தேன். பின்னர் எனது கருத்துக்களை சிங்கள மொழியிலேயே அவர்களுக்கு நான் சொன்னேன். இந்த அமைச்சு எனக்குத் தரப்பட்டிருக்கக்கூடாது என்று முதலில் சொன்னவர், பிறகு திரும்பிப் போகும் போது தன்னால் அடையாளம் காணப்பட்டுள்ள சகவாழ்வுப் பிரச்சினைகள் பற்றிய மனுவொன்றை சில தினங்களில் கொண்டுவந்து தருவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.’

சிங்கள பௌத்தர்களும் தமிழ் இந்துக்களும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைப் பட்டியலிட்டு அமைச்சர் மனோகணேசனிடம் தருவதாகக் கூறிவிட்டு ஞானசார தேரர் கிளம்பியதாக ஒரு செய்தியைப் பார்க்கக் கிடைத்தது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான தனது வெறுப்புணர்வுப் பிரசார இயக்கத்துக்கு தமிழ் இந்துக்களை ஒரு நேச சக்தியாக்கும் சூழ்ச்சித்தனமான திட்டமன்றி இது வேறு என்னவாக இருக்க முடியும்?

மனோகணேசனுடனான ஞானசார தேரரின் சந்திப்பு குறித்து மறுநாள் செய்தி வெளியிட்ட கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்று ‘மனோ கணேசனுடன் பொதுபலசேனா இனநல்லிணக்கம் குறித்து ஆராய்வு’ (BBS Discusses Communal Reconciliation with Mano Ganeshan) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட விசித்திரத்தையும் காணக்கூடியதாக இருந்தது. இலங்கை பல இன, பல மத மக்கள் வாழ்கின்ற நாடு என்ற உண்மையை மறந்து அதை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று ஒத்துக்கொள்ளுமாறு அமைச்சரை அடாத்தாகக் கேட்ட வண்ணமே ஞானசார தேரரின் நல்லிணக்க பேச்சு ஆரம்பித்த இலட்சணத்தைக் கண்டோம்.

ஞானசார தேரரும் அவரது குழுவினரும் அமைச்சு அலுவலகம் ஒன்றுக்குள் பிரவேசித்து அட்டகாசமான முறையில் நடந்து கொண்டது இது முதற்தடைவையல்ல. ராஜபக் ஷ ஆட்சியில் ரிஷாத் பதியுதீனின் பொறுப்பில் இருந்த வர்த்தக, கைத்தொழில் அமைச்சின் அலுவலகத்திற்குள் புகுந்து, அவர்கள் அமளி துமளியில் ஈடுபட்ட சம்பவத்தை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அன்பாகவும், நயமாகவும், நாகரிகமாகவும் நடந்துகொள்வதில் சமூகத்தில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டிய தார்மீகப் பொறுப்பைக் கொண்ட ஒரு பௌத்த பிக்கு தனது சகாக்களையும் அழைத்துக் கொண்டு அமைச்சர் இல்லாதவேளையில் அவரின் அலுவலகத்துக்கு வந்து அவர் எங்கிருந்தாலும் உடனே வரவேண்டும். வராவிட்டால் பிரச்சினை ஏற்படுமென்று அங்கிருந்தவர்களை அதட்டிப் பேசுவது போன்ற செயல் சிங்கள பௌத்தர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளுகின்ற அனைவரும் வெட்கப்பட வேண்டியதாகும். தங்களது நலன்களுக்காக குரல்கொடுப்பவராக இத்தகைய அநாகரிகமான ஒரு பேர்வழி காவியுடையையும் அணிந்து கொண்டு நாட்டில் நடமாடுவதை எவ்வாறு தான் சிங்கள பௌத்தர்களினால் ஏற்றுக்கொள்ள முடிகிறது? பௌத்த உயர்பீடங்கள் கூட இந்த அடாவடித்தனத்தை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? சிங்களவர் மத்தியில் நிலவும் சிந்தனைக் குழப்பம், செயல் குழப்பம் ஆகியவற்றுக்கு சிங்கள பௌத்தமத சிந்தனையில் ஒழுக்க நியாய பாரம்பரியமொன்று இல்லாதது ஒரு காரணமாகும் என்று காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் 1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு எழுதியது இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.

2

கிழக்கிலங்கையின் பல பகுதிகளில் தொல்லியல் ஆய்வுக்குரிய இடங்களை சிறுபான்மை இனத்தவர்கள் குறிப்பாக முஸ்லிம்கள் ஆக்கிரமித்திருப்பதாகக் கூறிக் கொண்டு தீவிரவாத பிக்குமார் சிலர் காடையர்களையும் கூட்டிக் கொண்டு சென்று அண்மைக்காலமாக அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர். சிறுபான்மையினத்தவர்களுக்குச் சொந்தமான காணிகளில் புத்தர் சிலைகளை நிறுவி விகாரைகளைக்கட்டும் பணிகளில் ஈடுபடுகிறார்கள்  மாகாண ஆளுநர் உட்பட அரசாங்க உயரதிகாரிகள் இந்த பிக்குமார் தலைமையிலான குழுவினருடன் அவர்கள் சட்டத்தின் ஆட்சிக்கு சவால்விடுக்கும் வகையில் செயற்படுகிறார்கள் என்பதையும் பொருட்படுத்தாமல், இணக்கப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நீதிமன்ற உத்தரவுகளைக்கூட இந்த பிக்குமார் பொருட்டாக மதிப்பதில்லை.

பௌத்த பிக்குமாரில் பலர் நாட்டின் சட்டங்களில் இருந்து விடுபட்டு உரிமை பெற்றவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டு அடாவடித்தனங்களில் ஈடுபடுவதுடன் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் மோதல்களைத் தூண்டிவிடக் கூடியதாக வெறுப்புணர்வுப் பேச்சுக்களை நிகழ்த்திக் கொண்டிருப்பது இன்று சர்வசாதாரணமான நிகழ்வுப் போக்காக மாறிவிட்டது. பிக்குமார் தங்கள் துறவற அந்தஸ்துக்கு எந்தவிதத்திலும் பொருத்தமில்லாத வகையில், நாகரிகமற்ற முறையில் வன்முறையாக நடந்து கொள்கின்ற சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றபோதிலும், அவர்களின் போக்கைச் சகித்துக் கொள்கின்ற ஆரோக்கியமற்ற தன்மை ஆட்சியாளர்களிடம் காணப்படுவதே ஒரு பெரிய பிரச்சினையாகும். நாட்டின் சட்டத்தை விடவும் தாங்கள் மேலானவர்கள் என்ற மமதையை இந்தப் பிக்குமார் வளர்த்துக் கொண்டு விட்டார்கள்.

ஞானசார தேரர் ஏற்கனவே நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்கு விசாரணையொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போதிலும், எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அவர் மீண்டும் இனங்களுக்கிடையில் பதற்ற நிலையைத் தோற்றுவிக்கக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமேயிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் அமைப்பொன்றின் முக்கியஸ்தரை தன்னால் விதிக்கப்பட்டிருக்கும் 24 மணிநேர காலக் கெடுவுக்குள் பொலிஸார் கைது செய்யாவிட்டால் கொழும்பில் முஸ்லிம்கள் பெருமளவில் வாழும் பகுதியொன்றில் இரத்தக் களரி ஏற்படுமென்று ஞானசார தேரர் அச்சுறுத்தினார். அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பதிலாக அந்த முஸ்லிம் முக்கியஸ்தரே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். இச்சம்பவத்துக்குப் பிறகு இந்த நாட்டின் நீதியமைச்சர் ஞானசார தேரரை பாராளுமன்றத்துக்கு அழைத்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்ந்ததாக கூறிக்கொண்டதையும் கண்டோம்.

இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் வெறுப்புணர்வைத் தூண்டிவிடுகின்ற நச்சுத்தனமான சூழ்நிலையை நாட்டில் உருவாக்குவதில் முழு மூச்சாக ஈடுபடுகின்ற இத்தகைய பிக்குமார் முன்னிலையில் ஏது செய்வதென்று அறியாதவர்களாக உயர் பொலிஸ் அதிகாரிகளே நிற்கிறார்கள். அவர்களுடன் மிகவும் அடக்க ஒடுக்கமாகப் பேசுகிறார்கள். அந்தப் பிக்குமாரை இயன்றவரை சாந்தப்படுத்துகின்ற அணுகுமுறைகளையே கடைப்பிடிக்கக்கூடிய கையறு நிலையில் தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். தாங்கள் எதற்கும் எவருக்கும் கட்டுப்பட வேண்டியவர்கள் இல்லை என்று மகாசங்கத்தினரில் கணிசமான பிரிவினர் நினைக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கண்டியில் உள்ள அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்து வணங்கி ஜனாதிபதியும் பிரதமரும் உட்பட அரசியல்வாதிகள் ஆலோசனை பெறுகின்றார்கள் என்னும் அதேவேளை, ஞானசாரதேரரோ அந்த மகாநாயக்கர்களுக்கு நாட்டு நடப்புகள் எதுவும் தெரியாது என்றும் அவர்கள் குளிரூட்டிய அறைகளுக்குள் இருக்கிறார்கள் என்றும் பகிரங்கமாகவே அவமதித்துப் பேசுகிறார். கடந்தவாரம் கொழும்பில் செய்தியாளர் மகாநாட்டில் உரையாற்றிய ஞானசாரதேரர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருக்கின்ற ஐந்து வருட பதவிக்காலம் போன்று மகாநாயக்கர்களுக்கும் பதவிக்கால மட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து உண்மையான தேசபக்தர்களும்  பெளத்த பிக்குமாரும் பாமர பௌத்தர்களும் கூட்டாக தீர்மானமெடுக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். இத்தகைய தான்தோன்றித்தனமான கருத்துக்களுக்கு தென்னிலங்கை ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.

இலங்கையின் அரசியலமைப்பு பௌத்த மதத்துக்கு முதன்மையான இடத்தைக் கொடுத்திருப்பதுடன் புத்த சாசனத்தைப் பேணிக்காத்து வளர்க்க வேண்டியது அரசின் கடமையென்றும் கூறுகிறது.

அரசியலமைப்பில் உள்ள இந்த ஏற்பாட்டை இந்தப் பிக்குமார் நாட்டின் ஏனைய பிரஜைகளை விடவும் தங்களுக்கு சட்டரீதியாக விசேட அந்தஸ்தை வழங்குகின்ற ஒன்றாக அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள் போலும். சட்டத்துக்கு மேலானவர்களாக பிக்குமார் இருக்க முடியுமென்று புத்தபெருமான் ஒரு போதும் போதிக்கவில்லை.

தலையை மொட்டை அடிப்பதன் மூலமும் காவியுடையை அணிவதன் மூலமும் மாத்திரம் ஒருவர் பிக்குவாகிவிட முடியாது. பிக்கு ஒருவரின் தகுதிக்கு பொருத்தமில்லாத எந்த நடத்தையுமே பௌத்த மதத்திலோ அல்லது நாகரிக சமுதாயத்திலோ சகித்துக்கொள்ளப்படலாகாது.

கடந்த வருடம் செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையை தேரவாத பௌத்தத்தைக் கடைப்பிடித்து புத்தரின் போதனைகளை அவற்றின் தொன்மை நலம் கெடாமல் பாதுகாக்கின்ற ஒரு நாடு என்று கூறிப் பெருமைப்பட்டார். ஆனால் உண்மையில், இலங்கையில் பௌத்த மதம் ஒரு அரசியல் மதமாக்கப்பட்டுவிட்ட துரதிஷ்டவசமான நிலையையே காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டின் சுயாதிபத்தியம், இறைமை என்பன ஆட்சி நிறுவனக் கட்டமைப்பு மீதான சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்பதைத் தவிர வேறு எதுவுமாக பெரும்பான்மையான பிக்குமார் விளங்கிக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

சிங்கள அரசியல் சமுதாயம் அதன் தவறான கொள்கைகளையும் செயற்பாடுகளையும் நியாயப்படுத்துவதற்கு மகா சங்கத்தினரைக் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்திருப்பதன் தவிர்க்க முடியாத ஒரு விளைவாகவே சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுக்கின்ற வகையில் அமைந்திருக்கும் பிக்குமாரின் அடாவடித்தனமான பேச்சுக்களையும் செயற்பாடுகளையும் நோக்க வேண்டியிருக்கிறது.

சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைகளை மறுக்கின்ற இலங்கையின் இனக்குழுமப் பெரும்பான்மைவாத அரசியலின் (Ethnic Majoritarianism) முன்னரங்கக் காவலர்களாக மகாசங்கத்தினர் விளங்குகிறார்கள்.

இவர்களின் இந்த ஆரோக்கியமற்ற செல்வாக்கில் இருந்து தென்னிலங்கை அரசியல் விடுபடாத வரையில்  தேசிய இனப்பிரச்சினைக்கு இணக்கபூர்வமான ஒரு அரசியல் தீர்வையோ அல்லது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையோ ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது.

பொதுபல சேனா போன்ற இயக்கங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்தது மாத்திரமல்ல, அவற்றை ஊக்குவிக்கும் வகையிலும் நடந்துகொண்டதால் ராஜபக் ஷ ஆட்சி அதற்கான விலையை இரண்டரை வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் செலுத்த வேண்டியிருந்தது.

அந்த அரசாங்கத்தின் கீழ் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து போயிருந்தது என்று நாட்டு மக்களுக்குக் கூறிக்கொண்டு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கப் போவதாக பிரகடனம் செய்த இன்றைய அரசாங்கமும்கூட, இனங்களுக்கிடையில் குரோதத்தைத் தூண்டி விடுகின்ற வகையில் செயற்படுகின்ற தீவிரவாத பிக்குகள் தலைமையிலான அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்பில் மௌனம் சாதித்துவருவது சிறுபான்மையினச் சமூகங்கள் மத்தியில் பெரும் விரக்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜபக் ஷ ஆட்சி போன்று தீவிரவாத சிங்கள பௌத்த அமைப்புக்களின் செயற்பாடுகளை இன்றைய அரசாங்கம் ஊக்குவிக்கின்றது என்று கூறமுடியாவிட்டாலும், அண்மைக்காலமாக ஞானசார தேரர் போன்றவர்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காமல் இருப்பது மறைமுகமான ஒரு ஊக்குவிப்பு என்றே அர்த்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக இனவெறிக் கொள்கையும் இல்லை. இனவெறி எதிர்ப்புக் கொள்கையும் இல்லை என்று இலங்கையின் முன்னணி அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான திஸ்ஸரணி குணசேகர அண்மையில் எழுதியிருந்ததை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும்.

ஞானசார தேரரோ அல்லது அவரைப் போன்ற தீவிரவாத பிக்குமாரோ சிங்கள பௌத்தர்களின் ‘நியாயபூர்வமான’ பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக்கொள்வதற்கு இனிமேலும் அரசாங்கம் இடமளித்தலாகாது.

சிறுபான்மை இனத்தவர்களை நிந்தனை செய்தால் தங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்ற சிந்தனையை வளர்த்துக் கொண்டிருக்கும் தீவிரவாத சிங்கள பௌத்த அமைப்புக்களை கட்டுப்படுத்த தவறுவதால் சிறுபான்மையினத்தவர்களின் நியாயபூர்வமான எந்தவொரு அரசியல் அபிலாஷையையும் ஏற்கமறுக்கின்ற தீவிரவாத தேசியவாதத்தின்  முன்னால் இன்றைய அரசாங்கமும்  அடிபணிகிறது என்றேகருதவேண்டியிருக்கிறது.

மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இலங்கையரான கலாநிதி அமீர் அலி தீவிரவாத பிக்குமாரின் செயற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் குறித்து கடந்தவாரம் எழுதிய கட்டுரையொன்றுக்கு ‘Cowboy Monks & A Cowardly Presidency’ என்று தலைப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.