செய்திகள்
இந்திய அரசுக்கு இலங்கையின் புதிய சவால்
அசோக் கே. மேத்தா
சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பௌத்த நாடான இலங்கையில் வெசாக் தினம் அதிகளவுக்கு முக்கியமான நாளாக அமைந்திருக்கிறது. இலங்கையின் தென்பகுதியில் சீனாவின் காலடி எங்கும் நிறைந்திருக்கின்ற தருணத்திலும் இந்தியாவுக்கு எதிரான உணர்வு அதிகரித்திருக்கும் நிலையிலும் மோடியின் விஜயம் அமைந்திருந்தது. இந்த மாதம் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை பெய்ஜிங் நங்கூரமிடுவதற்கு கொழும்பு மறுத்திருந்தது. இதேபோன்ற சம்பவம் 2014 இல் புதுடில்லிக்கு விசனத்தை ஏற்படுத்தியது. ஆனால் மோடி இலங்கையை விட்டு புறப்பட்ட உடனேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவின் “ஒரே மண்டலம் ஒரே பாதை’ நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பயணமாகியிருந்தார். அந்த நிகழ்வை இந்தியா பகிஷ்கரித்திருந்தது.

தமிழ்ப் புலிகளை தோற்கடித்து எட்டு வருடங்கள் கடந்த நிலையில், இலங்கையில் பயங்கரவாதத்திற்கான எந்தவொரு உதாரணமும் காணப்படவில்லை. பதிலாக அது செழிப்படைந்து வருகின்றது.நிகர தேசிய உற்பத்தியில் பொருளாதார வளர்ச்சி 5.5 வீதமாக காணப்படுகின்றது. யுத்தத்திற்குப் பின்னர் உடனடியாகவே எட்டு சதவீதமாக பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருந்தது. பயங்கரவாதத்திலிருந்து சுற்றுலாவாக மாற்றமடைவதற்கான மோடியின் தொலைநோக்கில் கொழும்பு மூன்று பிரதான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது. அரசியல் ரீதியான ஸ்திரப்பாடு, பொருளாதாரத்திற்கு புத்துயிர்ப்பளித்தல், தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் உள்ளடங்கியுள்ள இலங்கையின் உறுதிப்பாடுகளை நிறைவேற்றுதல் என்பன மூன்று பிரதான பிரச்சினைகளாக காணப்படுகின்றன. கடந்த மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தபோது இந்த விடயங்கள் இரு வருடங்களில் பூர்த்தி செய்யப்படுமென இந்தியா தெரிவித்திருந்தது.
எளிதில் வெற்றி கொள்ள முடியாததாக தென்பட்ட ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடிப்பதற்கான பொறிமுறையானது பாரியதொன்றாக காணப்பட்டது. விடுதலைப் புலிகளை ராஜபக்ஷ இல்லாமல் செய்திருந்தார். இரு நோக்கங்களில் வெற்றியடைவதற்கு இந்தியா பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தது. தன்னை வெளியேற்றுவதற்கு இந்தியாவை ராஜபக்ஷ குற்றம் சாட்டியிருந்தார். கொழும்பில் புதுடில்லி இழந்திருந்த செல்வாக்கு மீள ஏற்படுத்தப்பட்டது. இந்திய அமைதி காக்கும் படை வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து நேரடியாக ஈடுபடாத கொள்கையை புதுடில்லி கடைப்பிடித்து வந்தது. அதேவேளை சீனாவுடனான நெருக்கத்தை ராஜபக்ஷ ஏற்படுத்தியிருந்தார். ராஜபக்ஷ வீழ்ச்சியடைந்த போதிலும் வெளியேறியிருக்கவில்லை. காலிமுகத்திடலில் நடைபெற்ற மேதின ஊர்வலம் அதனை வெளிப்படுத்தியுள்ளது. தெற்கிலுள்ள பொதுமக்கள் மத்தியில் அவர் பிரபல்யமிக்கவராக தொடர்ந்து இருந்து வருகிறார். நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், உயர்ந்த கட்டிடங்களை தெற்கில் நிர்மாணித்ததற்காக மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு அதிகளவில் காணப்படுகின்றது. ராஜபக்ஷவின் உருவப்படங்களும் வாகனங்களில் அவரின் புகைப்படங்களும் போர்க்காலங்களில் அவரின் சகோதரரான கோதாபய ராஜபக்ஷவுடனான புகைப்படங்களும் இன்னும் காணப்படுகின்றன. அதேவேளை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் இவர்களுடன் போர் வெற்றியாளராக இப்போதும் காணப்படுகின்றார். தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகள் சிறப்பாக செயற்படும் வரை ராஜபக்ஷவின் விரைவான மீள்வருகை சாத்தியமற்றதாகத் தோன்றுகிறது.

2020 லேயே ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. ஆனால் ஒருமைப்பாட்டு அரசாங்கத்திற்குள் வெடிப்புகள் தென்படுகின்றன. இரு வருடங்கள் காலாவதியான நிலையிலும் இன்னமும் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறவில்லை. ஒருமைப்பாட்டு அரசாங்கத்திற்குள் பிளவுகள் தோன்றியிருப்பதை அரசாங்க உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. தற்போதைய அரசியலமைப்பு திருத்தப்படுமெனவும் அகற்றப்படமாட்டாதெனவும் அமைச்சர் சந்திம வீரக்கொடி அண்மையில் தெரிவித்திருந்தார். அதேவேளை அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரட்ன புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படுமென அறிவித்திருக்கிறார். சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அது உறுதிப்படுத்தப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி சிறிசேன அரசியலமைப்பு தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கின்றார். (அதற்கு ராஜபக்ஷ எதிர்ப்பைக் கொண்டுள்ளார்) விக்கிரமசிங்கவுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடனும் ஜனாதிபதி பேச்சுகளை மேற்கொண்டுள்ளார். அரசாங்கத்துக்கு பாரிய சவாலாக காணப்படுவது அதன் பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிப்பதாகும். விலைவாசி அதிகரிப்பு தொடர்பாக எதிரணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அநேகமாக தினசரி இடம்பெறுகின்றன. இந்த விடயங்கள் அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.
ராஜபக்ஷ ஆட்சியில் சீனாவுக்கு பாரிய தொகை கடன் பட்டமையே இந்தப் பிரச்சினைக்கான பிரதான காரணமாகும். இந்தியாவில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலைகள் அதிகரித்தால் ஏற்படும் போராட்டங்கள் போன்றே இலங்கையில் அரிசி, தேங்காயின் விலைகள் பாரதூரமான அரசியல் பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாக காணப்படுகின்றன.அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்தாலும் கூட, மேற்குலக சார்பு விக்கிரமசிங்க தனது மந்திரக்கோலை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைப்பார் என மக்கள் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக தீர்வை சலுகைகள் மீள கிடைத்திருக்கின்றன. வருடாந்தம் 200 மில்லியன் டொலர் இதன் பெறுமதியாக காணப்படுகின்றது. இது பொருளாதாரத்திற்கு உந்துசக்தியை அளிக்குமென கருதப்படுகிறது. சீனாவிற்கு பத்து பில்லியன் டொலர் கடனாக செலுத்த வேண்டியுள்ளது. இதற்கான வட்டி எட்டு சதவீதமாகும். இந்நிலையில் அரசியல் ரீதியான பேரப்பேச்சில் இது தொடர்பாக ஈடுபட வேண்டிய நிலைமை காணப்படுகிறது. தெற்கில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டதால் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற விடயங்கள் தொடர்பாக மீளப் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80% பங்குகளை சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பனி நீண்டகால குத்தகைக்கு பெற்றுக்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது. பத்து மீற்றர் ஆழமான அம்பாந்தோட்டை துறைமுகம் ஆழ்கடல் துறைமுகம் அல்ல. அதனால் கேந்திரோபாய முக்கியத்துவத் தன்மையை கொண்டிருக்கவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவுக்கு இலங்கை முதலில் அழைப்பு விடுத்தது. 2003 2005 காலப்பகுதியில் இரு தடவை அழைப்பு விடுக்கப்பட்டன. அதேசமயம், திருகோணமலை 15 எண்ணெய்க் குதங்கள் இந்தியாவுக்கு 35 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தன.
இந்து சமுத்திரத்தில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடமானது பாரிய விமானம் தாங்கிக் கப்பல்கள் வந்து தரித்து நிற்பதற்கு ஏற்புடைய இடமாக காணப்படுகின்றன. கிழக்கு மேற்கின் ஏழு முக்கிய பாதைகள் இந்து சமுத்திரத்தில் கடந்து செல்கின்றன. முக்கியமான கப்பல் மார்க்கங்களாக அவை காணப்படுகின்றது. இலங்கையின் தெற்குக் கரையிலிருந்து 10 12 கடல் மைல் தூரத்தில் இந்தப் பாதைகள் அமைந்திருக்கின்றன. இந்து சமுத்திரத்தில் வருடாந்தம் 10 ஆயிரம் கப்பல்கள் பயணம் மேற்கொள்கின்றன. உலகின் எண்ணெய் கொள்வனவில் 2/3 தொகை இந்தக் கப்பல்களிலேயே கொண்டு செல்லப்படுகின்றது. சரக்குப் பொருட்களில் 1/3 ம் உலகக் கொள்கலன் போக்குவரத்தில் அரைவாசியும் இந்து சமுத்திரத்தினூடாகவே கொண்டு செல்லப்படுகின்றன. இந்தியாவின் கொள்கலன்களில் 70% உம் அமெரிக்காவுக்கு செல்லும் கொள்கலன்களில் 100% உம் கொழும்பு துறைமுகம் ஊடாகவே கப்பல்களில் ஏற்றி இறக்கப்படுகின்றன. கடுமையான துறைமுக பாதுகாப்பு நடவடிக்கைகள் அமெரிக்காவில் 9/11 தாக்குதலின் பின் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்த நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. பாரிய துறைமுக முன்முனைப்புகள் விசேட அணு அல்லது ஏனைய கதிர்வீச்சுப் பொருட்கள் கொள்கலன்களில் அடைக்கப்பட்ட பொருட்களுடன் இருக்கின்றனவா என்று சோதிக்கப்படுவதற்கான ஆற்றலை விரிவுபடுத்துவதற்காகவே இந்த பாரிய துறைமுக முன்முனைப்புகள் இடம்பெறுகின்றன. இந்தியாவில் பாரியளவில் சரக்குக் கொள்கலன்களை இறக்குவதற்கான ஆழ்கடல் துறைமுகங்கள் (23 மீற்றர் ) இல்லை. கேரளாவில் விளிஞ்சத்தில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை இந்தியா நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை கையாள்வதற்கு இது போதியதாக இருக்காது. கொழும்பு துறைமுகம் சீனாவினால் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்திக்காக இந்தியாவுக்கு நான்காவது பகுதியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய மூன்று தொகுதிகளும் இலங்கையினதும் சிங்கப்பூரினதும் சீனாவினதும் வசமிருக்கும். திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு அதன் பொருளாதார அபிவிருத்திக்காக வழங்க கொழும்பு முன்வந்தமை அம்பாந்தோட்டையிலும் கொழும்பிலும் பெய்ஜிங்கின் பிரசன்னத்தை சமப்படுத்தும் மூலோபாயமாக அமைந்திருக்கின்றது. இதனை இலங்கையின் தேசிய நலன்களுக்கு துரோகமிழைக்கும் நடவடிக்கைகள் என ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வில் இரு வருட காலத்தை அவகாசமாக அச்சமயம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடியிருந்தார். 2015 செப்டெம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இணை அனுசரணை வழங்கியிருந்த இலங்கையின் உறுதிப்பாடுகளை நிறைவேற்ற இந்த இரு வருடங்கள் கோரப்பட்டது. மனித உரிமைகள் துஷ்பிரயோக குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கு, நம்பகரமான நீதி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுப்பதாக ஐ.நா.வின் தீர்மானம் அமைந்திருந்தது. நான்கு விடயங்களை அடிப்படையாகக் கொண்டதாக கொழும்பின் நிலைமாற்று நீதி நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. பதிலளிக்கும் கடப்பாடு, இழப்பீடு, உண்மையை தேடுதல் மற்றும் புதிய அரசியலமைப்பு என்பவையே இந்த நான்கு தூண்களாகும். வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பான பிரச்சினை சர்வதேச அவதானிகளை நியமிப்பதன் மூலம் சில சமயங்களில் தீர்வு காணப்படும். இங்கு அடிப்படை விடயமாக அமைந்திருப்பது மனித உரிமை மீறல்களுக்காக எந்தவொரு இராணுவ அதிகாரியையும் விசாரணை செய்வதற்கான சாத்தியப்பாட்டை கொண்டிராத தன்மையேயாகும். தனது இராணுவத்திற்கு எதிராக செயற்படுவது பற்றி கொழும்பு அக்கறையின்றி இருப்பது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியிருந்தார்.
யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் சீனாவிடம் இழந்திருந்த தனது மூலோபாய இடைவெளியை இந்தியா மீளப் பெற்றிருக்கிறது. ஆனால், இந்தியா செலுத்திய விலையில் அந்த இடத்தில் சிலவற்றை அமெரிக்கர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். மகிந்த ராஜபக்ஷவையும் சீனாவையும் அடக்கி தடுத்து வைத்திருத்தல், தமிழ் மக்களின் துன்பங்களுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்தை முன்தள்ளுதல், அரசாங்கத்தின் நீடித்த தன்மையை உறுதிப்படுத்துதல் என்பன புதுடில்லிக்கு உள்ள ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தப்பட்ட சவால்களாகும்.
அசோக் கே மேத்தா இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலும் கேந்திரோபாய விவகாரங்களுக்கான நிபுணருமாவார். த பயனியர்




