இலங்கை பௌத்த மத தலைவர்கள் முஸ்லிம்களுக்கெதிரான பதற்றத்தை தூண்டுகின்றனர்
நன்றி அல்ஜசீரா- தமிழில் சமகளம்
முஸ்லீம்களின் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து இலங்கையின் கடும்போக்கு பௌத்த மதகுருவொருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. அதிகாரிகள் குறிப்பிட்ட மதகுருவே தாக்குதல்களை ஊக்குவித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
2015 இல் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லீம்களிற்கு எதிரான தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதாக உறுதியளித்திருந்தார். எனினும் கடந்த இரு வாரங்களில் முஸ்லீம் மக்களிற்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
கஹாவத்தையில் முஸ்லீம்களின் கடையொன்று தீக்கிரையாக்கப்பட்டது.
2014 யூன் அளுத்கம கலவரத்திற்கு பின்னர் மீண்டும் முஸ்லீம்களிற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறு பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தனது ஆதரவாளர்களை தூண்டியுள்ளார்.
.
வன்முறையை பின்பற்றும் பௌத்ததேசியவாதம் மீள்எழுச்சி பெற்றுள்ளமை கவலையளிக்கின்றது என இஸ்லாமிய ஆய்வாளர் அம்ஜட் முகமத் சலீம் அல்ஜசீராவிற்கு தெரிவித்தார்.
அரசாங்கம் இந்த விடயத்திற்கு தீர்வு காணவிட்டால் அது தொடர்விளைவுகளை ஏற்படுத்தும் இவ்வாறான கட்டுப்படுத்தப்படாத பதட்டங்கள் எவ்வாறான விளைவுகளை உருவாக்கும் என்பதை கடந்த காலங்களில் நாங்கள் சந்தித்திருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதை நிருப்பிப்பதற்கு அரசாங்கம் சட்டத்தின் ஆட்சி மற்றும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.
இலங்கையின் காவல்துறையினருடன் தனக்குள்ள பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காகவே பொதுபல சேனாவின் ஞானசார தேரர் மீண்டும் வன்முறைகளை கையில் எடுத்துள்ளார் என இலங்கை முஸ்லீம் பேரவையின் தலைவர் ஹில்மி அகமட் குறிப்பிட்டார்.
இலங்கையில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்துவதற்காகவே ஞானசார தேரர் வன்முறையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் எனவும் ஹில்மி முகமட் குறிப்பிட்டார்.
முஸ்லீம்களின் முறைப்பாடு காரணமாக தான் நிரந்தரமாக சிறையில் அடைக்கப்படலாம் என பௌத்த மதகுருமாரிற்கும் சமூகத்திற்கும் தெரிவிப்பதற்கு ஞானசாரர் முயல்கின்றார் எனவும் ஹில்மி அகமட் தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் உறுப்பினர்கள் முஸ்லீம் சமூகத்தை அச்சுறுத்தி வருகின்றனர் அவர்களின் மசூதிகள் மற்றும் சொத்துக்கள் வாழ்வாதரங்களை தாக்கி வருகின்றனர் அரசாங்கம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே பிரச்சினை எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னைய நிர்வாகத்தின் கீழ் பௌத்த கடும்போக்குவாதிகள் வளர்ச்சியடை அனுமதிக்கப்பட்டனர் என முஸ்லீம் அரசியல்வாதியான ஆசாத்சாலி குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கத்தின் கீழ் பொதுபல சேனா தீவிரமாக செயற்பட்டது அவர்கள் நாட்டின் ஐக்கியத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தினர் இலங்கையின் முஸ்லீம் சமூகத்திற்கு அவர்கள் நெருக்கடிகளை உருவாக்கினர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை 48 வயது பௌத்தபெண்மணியான அமந்தி ரட்நாயக்க நாட்டின் பெரும்பான்மையான பௌத்தர்களை பொதுபலசேனா பிரதிநிதித்துவம் செய்யவில்லை என குறிப்பிட்டார்.
நாங்கள் நிம்மதியாக வாழ விரும்புகின்றோம் முஸ்லீம்களிற்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கவில்லை என்கிறார் அவர்.




