முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்: பின்னனி என்ன…?
-நரேன்-
பிரித்தானிய காலனித்துவ காலப்பகுதியில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முதலாவது கலவரம் உருவானது. ஆகவே இந்த நாட்டில் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையில் இப்பொழுது தான் பிரச்சனை தோன்றியிருக்கின்றது என்று எண்ணிவிட முடியாது. பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளைப் பொறுத்தவரையில் இலங்கை என்பது சிங்கள தேசியத்தை குறிக்கும் எனக் கருதுகிறார்கள். ஏனையவர்களுக்கு சம அந்தஸ்து கொடுத்தால் தங்களுடைய இருப்பு கேள்விக் குறியாகிவிடும் என்ற தவறான எண்ணம் இன்னமும் அவர்களிடம் இருந்து களையப்படவில்லை. இதனைக் களைவதற்கு இந்த நாட்டை இன்று வரை ஆட்சி செய்து வருகின்ற எந்தவொரு ஆட்சியாளருக்கும் முடியாமல் போயிருப்பது வேதனையிலும் வேதனை. இந்தப் பின்னனியிலேயே சமீபத்திய முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த சிங்கள மத அடிப்படைவாதிகளின் செயல்களை நோக்க முடிகிறது.
கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் இன்னமும் முடிந்தபாடில்லை. இந்த நிலையைப் பார்க்கின்ற போது முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறைகள் மெல்ல மெல்ல மீண்டும் தமிழ் சமூகத்தின் மீதும் பரவுமோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாடு விடுதலை அடையும் நேரத்தில் நாட்டின் உயர் பதவிகளில் கணிசமான இடத்தை தமிழர்கள் நிரப்பியிருந்தனர். இந்த விடயமும் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுடன் இங்குள்ள தமிழர்களையும் இணைத்து தங்களுடைய இனம் அழிந்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக மாற்ற வேண்டும் என்று பௌத்த சிங்கள அடிப்படைவாதிகள் முடிவெடுத்திருந்தனர். இதுவே அவ்வப்போது தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்து ஆடுவதற்கும், அதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக தற்காப்பு நோக்கில் தமிழ் தரப்பு ஆயுதம் ஏந்துவதற்கும் காரணமாகவிருந்தது. பின்னர் பயங்கரவாதம் என்ற போர்வையில் அந்த தற்காப்பு யுத்தம் முடிவுக்கு வந்ததும் ஒரு வரலாறு. 1980 வரையில் முஸ்லிம் சமூகம் இரண்டு பிரதான தேசியக் கட்சிகளுடனும் தமிழ் கட்சிகளுடனும் இணைந்து தத்தமது பிரதேசங்களில் தமக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொண்டிருந்தன.
இந்த நிலை ஜே.ஆர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மாற்றமடைந்தது. தமிழர்களை அடக்கி ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டு தங்களுடன் இணைந்து பழகி தங்கள் மொழி தெரிந்த முஸ்லிம் சமூகத்தை ஜே.ஆர் நேர்த்தியாக கையாண்டார். அன்றைய முஸ்லிம் தலைமை அரசாங்கத்துடன் இணக்க அரசியலை மேற்கொண்டு தங்களுக்கான சலுகைகளைப் பெற்றுக் கொண்டு தமது சமூகத்தை அனைத்து வழிகளிலும் முன்னேற்றுவதில் ஈடுபட்டிருந்தது. அதில் வெற்றியும் கண்டது. தமது உரிமைக்காக போராடிய சமூகம் ஆயுதப் போராட்டத்தின் காரணமாக அரசாங்க உத்தியோகம், கல்வி போன்ற வாய்ப்புக்ளை இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது. அந்த வெற்றிடங்களை முஸ்லிம் சமூகமே நிரப்பியது.
உரிமைக்காக போராடிய தமிழ் தேசிய இனம் ஆயுத ரீதியாக அடக்கப்பட்ட பின்னர் இன்று மீள எழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்ற போது தமிழ் மக்கள் எவ்வாறு பதவிகளிலும், கல்வியிலும் உயர் நிலை பெற்றிருந்தார்களோ அதே நிலையில் இன்று முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பதவி நிலையாலும், பொருளாதார நிலையாலும் உயர்வடைந்துள்ளார்கள். எண்ணைவள நாடுகளின் பெரும்பாலான நாடுகள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்ததாக இருப்பதால் இங்குள்ள முஸ்லிம் சமூகத்திற்கு அவர்கள் நேரடியாக உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இந்த உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு அந்த சமூகத்தின் அமைச்சுப் பதவி அவர்களுக்கு பெருமளவில் துணைபுரிகின்றது. இலங்கையியைப் பொறுத்தவரை வர்த்தகத்திலும் முஸ்லிம்களின் ஆதிக்கமே அதிகமாகவும் உள்ளது. இதனை பௌத்த சிங்கள அடிப்படைவாதிகள் பிரச்சனையாக கருதுகிறார்கள். ஒட்டுமொத்தத்தில் பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளின் தாழ்வுச் சிக்கலே தமிழ் தேசிய இனத்தின் மீதும், ஏனைய சிறுபான்மை மதங்களின் மீதும் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான காரணமாகும். இதனை தொடர்ந்து ஆட்சி செய்து வரும் ஆட்சியாளர்களும்இ இந்த நாட்டிற்கு தொடர்ந்தும் உதவிகளையும்இ கொடைகளையும் வழங்கி வரும் நாடுகளும் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.
கடந்த மஹிந்தா அரசாங்கம் இந்த நாட்டில் தமிழ், இஸ்லாமிய சமூகத்தை அடக்கி ஆள்வதில் முனைப்பு காட்டியது. அவர்களது ஆதரவுடனேயே பொதுபலசேனா, சிஹலே போன்ற இனவாத அமைப்புக்கள் துளிர்விட்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடத் தொடங்கின. இதன்விளைவாகவே முஸ்லிம்கள் உள்டங்கிய தமிழ் பேசும் மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக பெரும்பான்மையாக வாக்களித்து நல்லாட்சி என்று கூறப்படும் இந்த அரசாங்கத்தை கொண்டு வந்திருந்தனர். ஆனால் இந்த நல்லாட்சி அரசு கூட பௌத்த சிங்கள அடிப்படை வாதிகளை கண்டு அஞ்சுகின்ற நிலையே தொடர்ந்தும் நிலவுகிறது.
பௌத்த சிங்கள அடிப்படைவாதிகள் இந்த ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம்களின் மீது தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் தேசிய இனத்திற்கும், முஸ்லிம்ளுக்கும் இடையிலான உறவை சிங்கள மேலாதிக்க ஆளும்வர்க்கம் திட்டமிட்ட வகையில் தாமரை இலைத் தண்ணீராக மாற்றி ஒரு தேசிய இனத்தின் உரிமைக் குரலை மௌனிக்கச் செய்து விட்டு, தனக்கு ஆதரவுக் கரம் நீடடிய முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தனது அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதனுடன் தொடர்ந்ததாக பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தமிழர்களின் காலாசார மையமான யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் திட்மிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்டளப்பட்டு வருகிறது. தமிழ் தலைவர்கள் கடந்த ஆட்சியில் தெரிவித்திருந்த எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குடியேற்றம் தமிழ் தேசிய இனத்தின் ஆதரவைப் பெற்றுள்ள இந்த அரசாங்கம், தமிழ் தேசிய இனத்திற்கு எதிரான இந்தச் செயற்பாட்டை கடந்த ஆட்சிகளை விட வேகமாக முன்னெடுத்திருப்பது ஈழத் தமிழ் மக்களை சலிப்படையச் செய்துள்ளது. இதனைப் போன்றே கிளிநொச்சியிலும் தமிழ், முஸ்லிம் அடையாளங்களை நீக்கிய கொடியை பறக்கவிட்டு இது தனிச்சிங்கள நாடு என்று பிரகடனப்படுத்தியுள்ளனர். இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ முடிவுகள் எதனையும் இன்று வரை அறிவிக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
இனவாதம், மதவாதத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரச உயர்மட்ட தலைவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். ஆனால் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை அமுல்படுத்த வேண்டிய அரச இயந்திரம் அதனை செயற்படுத்த மறுக்கிறது என்பதை சட்ட அமைச்ரே பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். எனவே, இந்த நாட்டில் நல்லாட்சி என்பது எதைக் குறிக்கின்றது என்ற பலமான கேள்வி எழுந்துள்ளது.
சாரம்சத்தில் ஒரு பெரும்பான்மை சமூகம் தன்னுடைய தாழ்வுச் சிக்கலை மறைப்பதற்காக ஏனைய சமூகங்களின் மீது தனது மேலாதிக்கத்தை திணிக்க முயல்கிறது. இதனை ஒருவகை மனநோயாகவே பார்க்க முடிகிறது. இந்த விடயத்தை உரிய வகையில் அணுக வேண்டிய ஆட்சியாளர்கள், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சமூகத்தை ஆற்றுப் படுத்த வேண்டிய பொறுப்புடையவர்கள் அவ்வாறு செயற்படாமல் அவர்களின் செயல்களுக்கு துணைபோவது என்பது இந்த நாடு ஒருபோதும் அபிவிருத்தி அடைவதற்கு உதவாது. ஒடுக்கு முறைக்கு எதிராக குரல்கொடுத்தவர்களையும், போராடியவர்களையும் மீண்டும் அடக்கி ஒடுக்கி அவர்களுக்கு புனர்வாழ்வளித்த அரசாங்கம் ஒடுக்குகின்றவர்களின் மனோநிலையை புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கும், ஆற்றுப்படுத்துவதற்கும் முன்வராமல், அவர்களுடைய செயல்களுக்கு அடிபணிந்து அவர்கள் மீது எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது இந்த அரசின் மீதும், ஆட்சியாளர்களின் மீதும், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்குசக்திகள் ஆகியோரின் மீதும் சந்தேகம் கொள்ள வைக்கிறது. பல்வேறு காரணங்களுக்காக அரசாங்த்திற்கு இடையிலான உறவை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த நாட்டில் ஆட்சியாளர்களுக்கு அவர்களின் மனோநிலையை புரிந்து கொள்ளாமல் உதவி வழங்கும் மற்றும் கொடைகளை வழங்கும் நாடுகள் முதலில் இந்த விடயம் குறித்து சிந்திக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் இனியாவது ஒரு நேர்மையான முடிவெடுத்து தங்களது உண்மையான நண்பர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு தங்கள் சமூகத்தின் இருப்பிற்கு தங்களது பதவிகளையும், ஆசனங்களையும் கவனத்தில் எடுக்காமல் உழைக்க முன்வரவேண்டும். தமிழ் தேசிய இனமும் தனது கடந்தகால கசப்பான சம்பவங்களை உயர்த்திப் பிடிக்காமல் உரிமைக்காக குரல் கொடுத்த ஒரு சமூகம் என்ற அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வரவேண்டும்.
ஆட்சியாளர்களின் மத்தியில் இந்த நாட்டை ஒரு மதசார்பற்ற நாடாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனை வரவேண்டும். சகல தேசிய இனங்களும் எவ்வித அச்சமுமின்றி யாரும் தாங்கள் விரும்பிய மதத்தையும், சமயத்தையும் வழிபடுவதற்கும் பின்பற்றுவதற்கும் உரித்துடையவர்கள் என்ற யதார்த்ததை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயற்பட முன்வரவேண்டும். இதனை நிரந்தரமாக்குவதற்கு தனது வாக்குவங்கிகளிலும் சிந்தனை மாற்றத்தை உருவாக்க முன்வரவேண்டும்.
N5
