செய்திகள்
தமிழ்நாடு டெல்லிக்குக் கொத்தடிமையா?
பேராசிரியர். மு. நாகநாதன்
பெருந்தலைவர் காமராசர், பக்தவச்சலம், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நேர்முகஉதவியாளராகப் பணியாற்றியவர் மறைந்த பெரியவர் சாமிநாதன்- “மூன்று முதல்வர்களுடன்” என்ற அரிய நூலை எழுதியுள்ளார். மறைந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன் அமைச்சராகயிருந்தபோது எனக்கு நண்பரானார். நெருக்கடி நிலையின் போது அடிக்கடி சந்திப்போம்.
அறிஞர் அண்ணாவைப்பற்றிப் பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். முதல்வராக அண்ணா பொறுப்பேற்றவுடன் முதன்முதலாக டெல்லிச் சென்றபோது, புதுடெல்லியில் நடைப்பெற்ற நிகழ்வினை அடிக்கடி சாமிநாதன் நினைவுகூர்ந்து நெகிழ்வார்.
காலை 7 மணி அளவில் அண்ணாவிற்கு பிரதமர் இந்திரா காந்தி இல்லத்திலிருந்து தொலைப்பேசி ஒலிக்கிறது. அண்ணாவிடம் பேசவேண்டும் என்று அலுவலக நேர்முக உதவியாளர் சொல்கிறார். அண்ணாவிடம் ஓடோடித் தெரிவிக்கிறார் சாமிநாதன். செய்தி ஏடுகளைப் படித்துக் கொண்டிருந்த அண்ணா நீயே பேசு என்கிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு, பிரதமரின் தனிச்செயலாளர் பேசுகிறார் என்று சாமிநாதன் அண்ணாவிடம் கூறுகிறார். குளிக்கப் போகிறேன். எனது தனிச்செயலாளர் சொக்கலிங்கத்தைப் பேசச் சொல் என்கிறார். சில மணித்துளிகளில், பிரதமரே தொலைப்பேசியில் அண்ணாவை அழைக்கிறார். அண்ணா பிரதமர் இந்திராவிடம் பேசுகிறார். காலை உணவிற்கு பிரதமர் அழைத்ததன் பேரில் அண்ணாவுடன் நாங்கள் செல்கிறோம்.
தமிழக முதல்வர் அண்ணாவை இல்ல வாசலில் வரவேற்கிறார் பிரதமர். சிற்றுண்டி முடிந்தவுடன் அண்ணாவை வாசலுக்கு வந்து வழி அனுப்புகிறார் பிரதமர். அண்ணாவின் நுண்ணறிவு, தமிழனின் தகைமையை விட்டுக் கொடுக்காத உயரிய சால்பு, இந்திரா காந்தி கொடுத்த மரியாதை , மாண்பு இவற்றை எல்லாம் இன்று எண்ணி, எண்ணி வெட்கப்பட வேண்டியுள்ளது.
இந்நிகழ்விற்குப் பின்தான், சேலம் உருக்காலையைப் பெறுவதற்கு, ஆளும் கட்சியான தி. மு. க எழுச்சி நாள் பேராட்டத்தை நடத்தியது. சட்டமன்றத்தில், மாநில உரிமைகளை வலியுத்திப் பேசிய அண்ணா, பிரிவினைக் கோரிக்கையை விட்டுவிட்டேன். ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே உள்ளன என்று முழக்கமிட்டார்.

சந்திப்பொன்றின்போது இந்திரா காந்தியுடன் அண்ணாவும், காமராஜும்
இன்று நடப்பது என்ன? பன்னீர் செல்வம் முதல்வராகயிருந்த போது, புதுடெல்லி ஆட்சியின் கட்டளைக்கு ஏற்ப, மெரினா புரட்சியில் ஈடுபட்ட இளைஞர்களையும், துணை நின்ற எளிய மக்களையும் குண்டாந்தடியால் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்கியது.
தற்போது எடப்பாடி சாமி டெல்லி எஜமானர்களை மகிழ்விக்க திருமுருகன் காந்தி, அவரது தோழர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவியுள்ளார். குண்டாந்தடியும், குண்டர் சட்டமும் தமிழ் உணர்வாளர்களால் தூக்கி எறியப்படும்.

முள்ளிவாய்க்கால் படுகொலையை அமைதியாக நினைவுகூர்ந்தால் குண்டர் சட்டம் பாயும் என்றால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிரந்தரமாக அமைய நிலம் ஒழுங்கு செய்த சசிகலா நடராசன் மீதும் குண்டர் சட்டம் பாயுமா? யாருக்குத் தெரியும் உண்மை? பிரதமரைத் தனியாகச் சந்திக்கும்போது, எடப்பாடியின் சகளை அல்லவா செல்கிறார்.
அண்ணா ஒரு முறை, ஏ, தாழ்ந்த தமிழகமே என்று குறிப்பிட்டார் . கட்சிக் கொடியில் அண்ணாவைப் பாரக்கும் சிறிதளவாது மானம் உள்ள சிலருக்காவது மனம் உறுத்தாதா?




