மோடியின் முகத்திரை
பேராசிரியர்.மு.நாகநாதன்
பா, ஜ, க. வின் சங் பரிவாரங்கள் காஷ்மீர் தொடங்கித் தமிழ்நாடு வரை , முயன்று, முயன்று நாள் தோறும் இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மைகளைச் சிதைத்து வருகின்றன.
கடும் வறட்சியால் தமிழ்நாடு உட்பட விவசாயிகள் தங்களின் உயிர்களை மாய்த்து வருகின்றனர்.
இதைப் பற்றி நித்தி அயோக் கூட்டத்தில் பிரதமர் பேசியிருக்கலாம். ஒரு நாள் ஒரு நொடிப் பொழுதாகினும் பிரதமர் மோடி, போராடும் தமிழக விவசாயிகளைச் சந்தித்து கோரிக்கைகளை ஆய்ந்திருக்கலாம்.
ஆனால் பிரதமர் தமிழ் மீதுள்ள பேராசையை, அதுவும் நித்தி அயோக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். “நாம் தமிழ் மொழியைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். இந்தியாவின் வளமையைப் பறைசாற்றுவது தமிழ் மொழிதான் என்பதை மனமாரச் சொல்கிறேன். எனவே, பிற மாநில மக்களும் தமிழைக் கற்றுக்கொள்ளவேண்டும்.”
இன்னொரு முத்தான கருத்தினை இக் கூட்டத்தில் உதிர்த்துள்ளார். “பன்முகத் தன்மை கொண்ட நாடாக இந்தியாவுள்ளது.”
இப்படி மோடி கூறினால் நாம் அச்சப்பட வேண்டியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, சசிகலாவின் தலை மீது கைவைத்து ஆறுதல் கூறியதும் நம் கண் முன் விரிகிறது.
என்ன இருந்தாலும் நம் தமிழ் ஊடக செய்தியாளர்கள், வரபோகும் ஆபத்தை முன் கூட்டியே உணர்வதில் தனித்தன்மை உடையவர்கள்.

2. 5. 2017 நாளிட்ட குமுதம் ரிப்போர்ட்டரில், இரண்டாம் பக்கத்தில் “தமிழுக்குப் புகழாரம் சூட்டிய பிரதமர்” என்ற கா. ஜான்ஸிரானி வரைந்த கட்டுரையில் நாசுக்காக ஒரு கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.
பிரதமருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“தமிழரின் தொன்மை வாய்ந்த நாகரிகத்தை இந்தியா மட்டுமல்ல உலகமே தெரிந்து கொள்ளும் வண்ணம் கீழடி அகழ்வாராய்ச்சிப் பணியினை நேரில் ஒருமுறை பார்வையிடுவதோடு அதை வெளிக் கொண்டு வந்த அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் அங்கேயே பணி அமர்த்துவீர்களா? கேள்வியோடு கட்டுரை முடிகிறது.
செய்வாரா பிரதமர்? கீழடியை மீண்டும் புதைக்காமல் இருந்தால் போதும்!





