கட்சியை விடவும் நீதியே முக்கியம் என்பதில் உறுதியாக நிற்கும் முதல்வர் விக்கினேஸ்வரன்
தீலிபன்
சில தினங்களாக பரப்பரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர்கள் விவகாரத்திற்கு முதல்வர் விக்கினேஸ்வரன் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார். விசாரணை அறிக்கையில் பெயர் குறிபிடப்பட்டுள்ள விவசாய அமைச்சரான பொ.ஜங்கரநேசனும், கல்வி அமைச்சரான குருகுலராஜாவும் உடனடியாக பதவி விலக வேண்மென்று விக்கினேஸ்வரன் அறிவித்திருக்கின்றார். அதே வேளை ஏனைய இரண்டு அமைர்ச்சர்களான சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் டென்னீஸ்வரன் ஆகியோர் மீதும் பாரிய ஊழல் குற்றசாட்டுக்கள் இருக்கின்ற நிலையில் அவர்கள் இருவரும், அவர்கள் மீதான விசாரணை முடிவடையும் வரையில், தமது அமைச்சுப் பொறுப்புக்களிலிருந்து ஒய்வு நிலையில் இருக்க வேண்டுமென்றும் விக்கினேஸ்வரன் கட்டளையிட்டிருக்கின்றார். இதனை மீறினால் அவர்களும் நீக்கப்படலாம். இந்த நடவடிக்கைகள் மூலம் நீதியை நிலைநாட்டுவதில் விக்கினேஸ்வரன் எவரது தலையீடுகளையும் பொருட்படுத்தப் போவதில்லை என்பதையே மேற்படி நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.
வடக்கு மாகாண அமைச்சர்கள் ஊழல்களில் ஈடுபடுவதான குற்றசாட்டுக்கள் சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அது தொடர்பில் விசாரணை செய்வதற்கான மூவர் அடங்கிய ஆணைக் குழு ஒன்றை முதல்வர் விக்கினேஸ்வரன் நியமித்தார். அந்;தக் ஆணைக்குழுவினர் பல்வேறு சாட்சிகளை விசாரணை செய்து திட்டங்களை நேரடியாக பார்வையிட்டு தங்களது அறிக்கையை கடந்தவாரம் முதல்வரிடம் ஒப்படைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் என்ன செய்யப் போகிறார் என்னும் கேள்வியே தமிழ் அரசியலில் பிரதான விவாதமானது. உண்மையில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் நான்கு அமைச்சர்கள் மீதுமே முன்வைக்கப்பட்டிருந்தது ஆனால் இரு அமைச்சர்கள் தொடர்பான விசாரணைக்கு சாட்சிகள் சமூகமளிக்காத காரணத்தினால் இரண்டு அமைச்சர்கள் தொடர்பில் மட்டுமே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதற்கு பின்னாலும் ஒரு சதியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. தற்போது பதவி விலகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள ஜங்கரநேசன் மற்றும் குருகுலராஜா ஆகிய அமைச்சர்கள் இருவரும் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள். இவர்கள் தொடர்பான குற்றசாட்டுக்களின் போது சமூகமளித்த சாட்சிகள் ஏனைய இரண்டு அமைச்சர்கள் தொடர்பில் ஏன் சமூகமளிக்காது விட்டார்கள் என்பதிலும் சந்தேகம் எழுகிறது. இது முதல்வர் விக்கினேஸடவரனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக இருக்கலாம் என்னும் கருத்தும் நிலவுகிறது. இந்த நிலையில் தனக்கு விசுவாசமானவர்களை காப்பாற்றும் முயற்சியில் விக்கினேஸ்வரன் இறங்கலாம் அதனைக் கொண்டு அவரது நற்பெயரை களங்கப்படுத்தலாம் என்றும் சிலர் கணக்குப் போட்டது போலும் தெரிகிறது. ஆனால் அவர்கள் அனைவரையும் மண் கவ்வச் செய்யும் வகையில் விக்கினேஸ்வரன் செயற்பட்டிருக்கின்றார். நீதிக்கு முன்னால் தனக்கு எவரும் முக்கியமில்லை என்னும் முடிவை தற்போது விக்கினேஸ்வரன் எடுத்திருக்கின்றார். இதன் மூலம் சம்பந்தன் மற்றும் தமிழரசு கட்சியின் முடிவுகள் தனக்கு முக்கியமில்லை என்பதையும் விக்கினேஸ்வரன் தனது செயற்பாட்டின் ஊடாக நிரூபித்திருக்கின்றார்.
விக்கினேஸ்வரன் என்ன முடிவை எடுக்கக் கூடுமென்னும் ஊகங்கள் கடந்த ஒரு வாரமாக உலவிவந்தது. அவர் இருவரை மட்டுமன்றி நான்கு பேரையும் நீக்கக் கூடுமென்னும் கருத்தும் நிலவியது. இந்த நிலையில் சம்பந்தன் கடுப்பாகி விட்டதாகவும் மாவை சினங் கொண்டிருப்பதாகவும் தமிழரசு கட்சிக்கு சார்பான சில இணையங்களும் பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டுவந்தன. ஆனால் விக்கினேஸ்வரன் சம்பந்தனையோ அல்லது மாவையையோ ஒரு விடயமாகக் கூட பொருட்படுத்தவில்லை என்பது தற்போது வெளியாகியிருக்கிறது. இது தொடர்பில் சம்பந்தன், விக்கினேஸ்வரனை எச்சரித்ததாகவும், தன்னுடைய முடிவுகளை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றெல்லாம் செய்திகள் வெளியாகியிருந்தன. அதே போன்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அமைச்சர்களை மாற்றுவதானால் முதல்வர் விக்கினேஸ்வரனும் விலகிச் செல்ல வேண்டுமென்று கூறியதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் விக்கினேஸ்வரன் தனது உறுதியாக முடிவின் மூலம் சம்பந்தனையும் மாவையையும் செல்லாக் காசாக்கியிருக்கின்றார். நீதியை காப்பாற்றுவதற்காக எந்தவொரு விளைவையும் சந்திக்கத் தயார் என்பதை தனது செயற்பாட்டின் வாயிலாக தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கின்றார். தன்னை முதல்வராக்கிய வடக்கு மக்களை தவிர வேறு எவருக்கும் தான் பதில் சொல்லப் போவதில்லை என்பதில் தனது உறுதியான தலைமைத்துவத்தை விக்க நிருபித்திருக்கின்றார்.
உண்மையில் வடக்கு மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனம் முற்றிலுமாக சம்பந்தன்- மாவை – சுமந்திரன் ஆகிய முக்கூட்டினாலேயே தீர்மானிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தங்களது கட்சிகளுக்கு உரிய இடமளிக்கப்படவில்லை என்று ஏனைய கட்சிகள் குற்றசாட்டுக்களை முன்வைத்த போது அனைத்து பழியையும் விக்கினேஸ்வரன் மீதே போட்டனர். உண்மையில் விக்கினேஸ்வரன் அந்;த முடிவுகளை எடுக்கவில்லை. அரசியலுக்கு புதியவரான விக்கினேஸ்வரன் ஆரம்பத்தில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் பொறுப்பை சம்பந்தன் தரப்பிடமே ஒப்படைத்திருந்தார். ஆனால் விக்கினேஸ்வரனின் பெயரால் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளை தமிழரசுகட்சி திட்டமிட்டு அமைச்சுப் பொறுப்புக்களிலிருந்து ஓரம்கட்டியது. இன்று ஒரு மாகாண சபை இருப்பதற்கே காரணமான சுரேஸ் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்குக் கூட ஒரு அமைச்சுப் பொறுப்பை வழங்குவதை தமிழரசு கட்சி நிராரித்தது. கிழக்கு மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனத்தின் போதும் அவ்வாறே திட்டமிட்டு ஏனைய கட்சிகளை ஓரங்கட்டியது. உண்மையில் வடக்கு போன்று கிழக்கிலுள்ள தமிழரசு கட்சியின் அமைச்சர்கள் மீதும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் கிழக்கில் கூட்டமைப்பின் பெயரால் அனைத்தையும் தமிழரசு கட்சியின் இரண்டு அமைச்சர்களாக தண்டாயுபாணியும், துரைராஜசிங்கமுமே மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு மாகாண சபையின் விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே ஊழல் குற்றசாட்டுக்களை புறம்தள்ளி முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு நெருக்கடி கொடுப்பதிலேயே தமிழரசு கட்சி கடுமையாக உழைத்தது. கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணத்தில் அடிக்கடி வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடனும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் மந்திரலாலோசனை நடத்தியது. தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் விசாரணை அறிக்கையை தவறென்று நிரூபிப்பதற்காக கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்குபற்றி விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிராக பேசினார். அதுவும் கூட தமிழரசு கட்சியின் பிறிதொரு செயற்பாடுதான். இதற்கிடையில் இந்த விடயத்தை தங்களுக்கு சாதமாகக் கொண்டு, முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கான முயற்சியிலும் தமிழரசு கட்சி ஆலோசனை நடத்தியாகவும் தகவல்கள் கசிகின்றன. ஆனால் எதற்குமே விக்கினேஸ்வரன் வளைந்து கொடுக்கவில்லை. நீதிக்கு முன்னால் எந்த பதிவிகளோ, கட்சியோ, தலைவரோ தனக்கில்லை என்னும் அடிப்படையில் செயற்பட்டிருக்கின்றார். இதன் மூலம் இலஙங்கை அரசியலில் ஒரு முன்னுதாரணமான அரசியல் கலாசாரத்தின் ஆரம்ப கர்த்தாவாக திகழ்கின்றார். இப்போது அவர் சம்பந்தன் காண்பிக்கப் போகும் அந்த கடும் விளைவுகளுக்கா காத்திருக்கிறார். ஆனால் விக்கினேஸ்வரனின் முடிவு சரியென்பதில் வடக்கு மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். அவர்கள் விக்கினேஸ்வரனின் நேர்மையோடு பயணிக்க காத்திருக்கின்றனர். மக்களை மீறி சம்பந்தன் என்ன செய்யப் போகிறார்?



