செய்திகள்

முதல்வர் விக்கினேஸ்வரனிடம் சரணாகதியடைந்திருக்கும் இலங்கை தமிழரசு கட்சி

நந்தன் அரியரத்தினம்
முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக இலங்கை தமிழரசு கட்சி நம்பிக்கையில்லா தீர்மாணம் ஒன்றை கொண்டுவர முயற்சித்தமை வடக்கில் மட்டுமன்றி, தமிழ் மக்கள் வாழும் அiனைத்து பகுதிகளிலும் கடுமையான எதிர்ப்பலையை தோற்றுவித்திருக்கிறது. தந்தை செல்வநாயகத்தின் வழிவந்த கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் நடவடிக்கைகள், தமிழரசு கட்சியின் விசுவாசிகளில் மட்டத்தில் கூட கடும் அதிருப்திகளை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழரசு கட்சியில் அங்கம் வகிப்பது கூட ஒரு லரலாற்று துரோகமாவிடுமோ என்று அஞ்சுவதாக தமிழரசு கடட்சியின் ஒரு மூத்த உறுப்பினர் இந்த கட்டுரையாளரிடம் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதியினதும், சுமந்திரனதும் நடவடிக்கைள் இலங்கை தமிழரசு கட்சிக்கு வரலாற்று ரீதியாக இழுக்கை ஏற்படுத்திவிடுமென்றும் அவர்கள் அஞ்சுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவில் சமூக பிரதிநிதிகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், வெகுசன அமைப்புக்கள் என பலரும் தமது கண்டனங்களை தெரிவித்திருக்கின்றனர். அரசியலில் நேர்மையை கடைபிடிக்க முயற்சிக்கும் ஒருவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டியய சம்பந்தனோ, மாவை மற்றும் சுமந்திரனது செயற்பாடுகளை கண்மூடித்தனமாக ஆதரித்துக் கொண்டிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் அறிக்கைகளில் மட்டுமன்றி சம்பந்தனை தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டும் கண்டித்திருக்கின்றனர். இந்த நிலையிலேயே நிலைமைகள் திடிரென்று தமிழரசுக்கு கட்சிக்கு எதிராக மாறும் ஆபத்தை உணர்ந்த சம்பந்தன் விடயங்கள் தொடர்பில் முதலமைச்சருடன் பேசுவதற்காக இறங்கி வந்திருக்கின்றார்.

DSCN1607

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடாபில் விசாரிக்கப்பட வேண்டுமென்னும் கோரிக்கை மாகாண சபை உறுப்பினர்களால்தான் முன்வைக்கப்பட்டது. அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட விக்கினேஸ்வரன் அதற்கென மூவர் அடங்கிய விசாரணை குழுவை நியமித்தார். குறித்த ஆணைக்குழுவினர் பல்வேறு சாட்சிகளை விசாரணை செய்து, தங்களின் அறிக்கையை கடந்தவாரம் முதல்வரிடம் ஒப்படைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் என்ன செய்யப் போகிறார் என்னும் கேள்வியே தமிழ் அரசியலில் பிரதான விவாதமானது. உண்மையில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் நான்கு அமைச்சர்கள் மீதுமே முன்வைக்கப்பட்டிருந்தது ஆனால் இரு அமைச்சர்கள் தொடர்பான விசாரணைக்கு சாட்சிகள் சமூகமளிக்காத காரணத்தினால் இரண்டு அமைச்சர்கள் தொடர்பில் மட்டுமே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதற்கு பின்னாலும் ஒரு சதியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. தற்போது பதவி விலகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள ஜங்கரநேசன் மற்றும் குருகுலராஜா ஆகிய அமைச்சர்கள் இருவரும் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள். இவர்கள் தொடர்பான குற்றசாட்டுக்களின் போது சமூகமளித்த சாட்சிகள் ஏனைய இரண்டு அமைச்சர்கள் தொடர்பில் ஏன் சமூகமளிக்காது விட்டார்கள்? உண்மையில் விக்கினேஸ்வரனை அகற்ற வேண்டுமென்னும் முய்றசியை ஏற்கனவே தமிழரசு கட்சி ஆரம்பித்துவிட்டது. இதனை அங்குரார்ப்பணம் செய்வதற்கான ஒரு சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தது. அது கிடைத்த உடனேயே வேலையை ஆரம்பித்துவிட்டது. அதுதான் தற்போது மிகவும் அவசரமாக தமிழரசு கட்சியினர் முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர முயற்சித்தற்கான காரணமாகும். ஆனால் சம்பந்தன் -மாவை- சுமந்திரன் முக்கூட்டு, ஒரு விடயத்தை கவனிக்கவில்லை. மக்கள் மத்தியில் அபிமானமுள்ள ஒருவரை அகற்ற முற்பட்டால், அது மக்கள் மத்தியில் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை கவனிக்கவில்லை. இதன் காரணமாகவே தற்போது தமிழரசு கட்சியினர் அச்சமடைந்திருக்கின்றனர். வேறு வழியின்றி முதல்வரிடம் சரணாகதி அடைந்திருக்கின்றனர்.

Meeting with Reginold

விக்கினேஸ்வரன் தன்னுடைய முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னரே, கூட்டமைப்பின் மூன்று பிரதான கட்சிகளின் அபிப்பிராயங்களை கேட்டறிந்திருந்தார். அவர்கள் அனைவருமே நான்கு அமைச்சர்களையும் மாற்றுமாறு பரிந்துரைத்திருந்தனர். உண்மையில் வடக்கு மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனம் முற்றிலுமாக சம்பந்தன்- மாவை – சுமந்திரன் ஆகிய முக்கூட்டினாலேயே தீர்மானிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தங்களது கட்சிகளுக்கு உரிய இடமளிக்கப்படவில்லை என்று ஏனைய கட்சிகள் குற்றசாட்டுக்களை முன்வைத்த போது, சம்பந்தன் தரப்பினர் அனைத்து பழியையும் விக்கினேஸ்வரன் மீதே போட்டனர். இதனால் விக்கினேஸ்வரன் மீது தோவையில்லாத விமர்சனங்கள் எழுந்தன. உண்மையில் விக்கினேஸ்வரன் அந்;த முடிவுகளை எடுக்கவில்லை. அரசியலுக்கு புதியவரான விக்கினேஸ்வரன் ஆரம்பத்தில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் பொறுப்பை சம்பந்தன் தரப்பிடமே ஒப்படைத்திருந்தார். ஆனால் விக்கினேஸ்வரனின் பெயரால் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளை தமிழரசுகட்சி திட்டமிட்டு ஓரம்கட்டியது. இன்று ஒரு மாகாண சபை இருப்பதற்கே காரணமான சுரேஸ் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்குக் கூட ஒரு அமைச்சுப் பொறுப்பை வழங்குவதை தமிழரசு கட்சி நிராரித்தது. சுரேஸ் பிறேமச்சந்திரனை பலவீனப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு ஜங்கரநேசனை உடைத்தெடுக்கும் நோக்கில் அவருக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்கினர். இதற்கும் விக்கினேஸ்வரனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை ஆனால் அவர் மீதே பழிவிழுந்தது. கிழக்கு மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனத்தின் போதும் அவ்வாறே திட்டமிட்டு ஏனைய கட்சிகளை தமிழரசு கட்சி ஓரங்கட்டியது. உண்மையில் வடக்கு போன்று கிழக்கிலுள்ள தமிழரசு கட்சியின் அமைச்சர்கள் மீதும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் கிழக்கில் கூட்டமைப்பின் பெயரால் அனைத்தையும் தமிழரசு கட்சியின் இரண்டு அமைச்சர்களாக தண்டாயுபாணியும், துரைராஜசிங்கமுமே மேற்கொண்டு வருகின்றனர்.

gds

வடக்கு மாகாண சபையின் விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே ஊழல் குற்றசாட்டுக்களை புறம்தள்ளி முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு நெருக்கடி கொடுப்பதிலேயே தமிழரசு கட்சி கடுமையாக உழைத்தது. கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணத்தில் அடிக்கடி வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடனும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் மந்திராலோசனை நடத்தியது. தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் விசாரணை அறிக்கையை தவறென்று நிரூபிப்பதற்காக கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்குபற்றி விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிராக பேசினார். அதுவும் கூட தமிழரசு கட்சியின் பிறிதொரு செயற்பாடுதான். ஆனால் இன்று நிலைமைகள் தங்களுக்கு பாதகமாக வந்தமையால் தமிழரசு கட்சியினர் தடுமாற்றத்தில் இருக்கின்றனர். இந்த நிலையிலேயே விக்கினேஸ்வரனிடம் சரணாகதி அடைந்திருக்கின்றனர். இரண்டு அமைச்சர்கள் விடயமும் சரி ஆனால், ஏனைய இரண்டு அமைச்சர்களையும் விட்டுவிடுமாறு தமிழரசு கட்சியினர் முதல்வரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றர். இதற்கு வடக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பே பிரதான காரணமாகும். இந்த நிலைமை தொடர்ந்தால் தமிழரசு கட்சியின் காரியாலங்களைக் கூட மக்கள் தாக்கலாம் என்னும் அச்சத்திலேயே இவ்வாறானதொரு முடிவுக்கு சம்பந்தன் வந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விக்கினேஸ்வரனோ எவ்வித பதட்டமும் இன்றி அமைதியாக இருக்கின்றார். தனது முன்னைய முடிவில் உறுதியாக இருக்கிறார். ஏனைய இருவருக்கு எதிரான விசாரணைகள் தொடருமென்றும் அவர்கள் குற்றவாளிகளாக இனம்காணப்பட்டால் அவர்களும் வெளியேற வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லையென்று சம்பந்தனிடம் அவர் தெரிவித்திருக்கி;றார். நீதிக்கான பயணத்தில் விக்கினேஸ்வரனிடம் எந்தவொரு தடுமாற்றமும் இல்லை. ஆனால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிவிட்டதே என்னும் அச்சத்தில் தமிழரசு கட்சி முக்கியமாக மாவை சேனாதியின் அரசியல் வாழ்வும், முதலமைச்சருக்கு எதிராக ஆளுனரிடம் சென்றவர்களின் அரசியல் வாழ்வும் பெருமளவிற்கு முடிந்துவிட்டது. ஏனெனில் மக்கள் மடையர்கள் அல்ல.