16 கறுப்பு ஆடுகளின் பின்னணியில் யார்?
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணனை கொண்டு வந்ததன் மூலம் தமிழர் அரசியலில் துரோகத்தனத்தினதும் ஊழல் மோசடிகளினதும் பதவி ,பண பேராசைகளினதும் மொத்த உருவமாக இலங்கை தமிழரசுக்கட்சி தன்னை வெளிக்காட்டி ஒட்டு மொத்த தமிழ் மக்களினதும் கடும் எதிர்ப்பையும் வெறுப்பையும் தனக்குரியதாக்கி கொண்டுள்ளது.
வடக்கு மாகாண சபையில் ஊழல் ,நிதி மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வந்த இலங்கை தமிழரசுக்கட்சியினரே அந்த ஊழல்,நிதி மோசடிகளில் தமது கட்சி அமைச்சர்களும் தொடர்பு பட்டுள்ளமை அம்பலமான நிலையில் அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என முதலமைச்சர் விக்னேஸ்வரனை எச்சரித்தும் மிரட்டியும் எதுவும் அவரிடம் எடுபடாத நிலையிலேயே தற்போது இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் கடந்த புதன்கிழமை இரவு கையளித்துள்ளனர். இதன் மூலம் இதுவரை போட்டுவந்த” தமிழ் மக்களுக்கான அரசியல்” என்ற வேடத்தைக் கலைத்து பதவி, பணம், ஊழல், நிதி மோசடிகளுக்கானதே இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் என்பதை தமிழ் மக்களுக்கு உச்சந்தலையில் உறைக்கும் வகையில் உணர்த்தியுள்ளனர்
அவைத்தலைவர் என்பவர் கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டும் என்பது விதி. முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை உறுப்பினர்கள் அவைத்தலைவரிடம் கையளிக்கவேண்டும் . அவர் அதனை ஆளுநருக்கு அனுப்பிவைக்க வேண்டும் . இதுவும் விதி. ஆனால் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரான சிவஞானம் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளதுடன் அதில் கையெழுத்திட்டுள்ள ஏனைய உறுப்பினர்களை ஆளுநர் அலுவலகம் அழைத்து சென்று இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பாக தானே அந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஆளுநரிடம் கையளித்துமுள்ளார். கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டிய அவைத்தலைவர் இதில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாகவே செயற்பட்டுள்ளதன் மூலம் விதிகளை மீறியுள்ளார். அடுத்த முதலமைச்சராக சிவஞானத்தின் பெயர் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதே அவர் பதவி ஆசையில் விதிகளை மீறக் காரணமாக இருந்துள்ளது. அதாவது அவைத்தலைவருக்கு பதவி ஆசை காட்டப்பட்டுள்ளது. அதற்கு அவரும் ஆசைப்பட்டதாலேயே விதி முறைகளை மீறி செயற்பட்டுள்ளார்.

அவைத்தலைவருக்கு மட்டுமன்றி ஈ. பி. டி. பி. யை சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு அவைத்தலைவர் பதவி தருவதாகவும் புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சர் பதவி தருவதாகவும் கூட தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களினால் பேரம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்று மாற்று கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பலருக்கும் பண ,பதவி ஆசைகளும் காட்டப்பட்டுள்ளன. எனினும் தமிழ் மக்கள் மீதும் தமிழ் தேசியம் மீதும் பற்றுக்கொண்ட அவர்கள் தமிழரசுக்கட்சியின் பேரம் பேசலுக்கு சோரம் போகவில்லை.
அது மட்டுமன்றி ஊழலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றை எடுத்தமை காரணமாக முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவருவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது என்று அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையும் கவனத்தில் எடுக்காதே வடக்கு மாகாண அமைச்சர்கள் ஊழல், நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட் ட நிலையில் ஓய்வு பெற்ற இரு நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற அரச அதிபர் தலைமையில் விசேட குழு அமைத்து விசாரணை நடத்தி அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இரு அமைச்சர்களை பதவி விலக கோரியும் ஏனைய இரு அமைச்சர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பியும் உத்தரவிட்டதற்காகவே முதலமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை இலங்கை தமிழரசுக் கட்சியினர் கொண்டு வந்துள்ளனர். எனினும் இது மட்டுமே காரணமல்ல. இதன் பின்னணியில் அரசின் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் மூவரின் சதியும் உள்ளது
தமிழ் மக்களின் உரிமைக்குரலையும் தமிழ் தேசிய நிலைப்பாட்டையும் அழித்தொழிக்க சகல சதிகளையும் முன்னெடுக்கும் அரசின் அடியாளாக இலங்கை தமிழரசுக்கட்சி மாறி விட்டதையும் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்ட 16 கறுப்பு ஆடுகளின் பின்னணியில்அரசு இருப்பதையும் அரசின் கைக்கூலிகளாக தமிழரசுக்கட்சியின் மூன்று முக்கிய தலைகள் இதற்காக செயற்பட்டிருப்பதையும் தமிழ் மக்கள் நன்றாக அறிந்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கு துணிச்சலான,நேர்மையான தலைமைகள் இருக்கக்கூடாது என்பதில் இந்த நல்லாட்சி அரசு உறுதியாகவுள்ளது. அதன் முதல் இலக்கு யாழ் கல்விச் சமூகமாகவிருந்தது. அதனால்தான் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் யாழ் கல்விச் சமூகத்தால் பெரிதும் விரும்பப்பட்ட ,மாணவர்களினால் எதிர்பார்க்கப்பட்ட, மக்களினால் நேசிக்கப்பட்ட , துணைவேந்தர் தெரிவுக்கான தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா நிராகரிக்கப்பட்டு வேறு ஒருவர் துணைவேந்தராக்கப்பட்டார். இந்த சதியின் பின்னணியிலும் தமிழரசுக்கட்சியின் இதே முக்கிய தலைகள் தான் செயற்பட்டிருந்தன . இதில் வடக்கு ஆளுநரின் பங்கும் இருந்துள்ளது.

யாழ் கல்வி சமூகத்துக்கான சிறந்த தலைமையை இல்லாது செய்து விட்ட அரசு அடுத்ததாக தமிழ் சமூகத்துக்கான சிறந்த அரசியல் தலைமையை ஒழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இந்த ஒழிப்பு ஒப்பந்தத்துக்கு அதே தமிழரசுக்கட்சியும் அதே வடக்கு ஆளுநரும் பயன்படுத்தப்படுகின்றனர்.
தமக்கு சகலவழிகளிலும் தலையிடியாக இருக்கும் விக்னேஸ்வரனை எப்படி முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்குவது என மண்டையை பிய்த்துக்கொண்டிருந்த அரசுக்கு அதனை நிறைவேற்றித்தருவதாக தமிழரசுக்கட்சியின் முக்கிய புள்ளி ஒருவர் கொடுத்த வாக்குறுதிக்கமையவே காய்கள் நகர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. தற்கமையவே தமிழ் மக்கள் தமது தலைவராக போற்றும் விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிங்கள, முஸ்லிம்களின் ஆதரவும் பெறப்பட்டுள்ளது. அத்துடன் அரசுடன் பல வழிகளில் கள்ளத்தொடர்புகளை வைத்திருக்கும் ஒருவரின் ஊடக பலமும் தமிழரசுக்கட்சியின் இந்த சதிக்கு பயன்படுத்தப்படுகின்றது.
முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழரசுக்கட்சி கொண்டு வந்ததன் மூலம் ஒட்டு மொத்த தமிழினமும் கொதி நிலை அடைந்ததை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் நன்குணர்ந்திருந்தார். இதனால் தான் அவர் சில சமரச முயற்சிகளில் ஈடுபட்டார். விக்னேஸ்வரனிடம் தூதுகளையும் அனுப்பினார். ஆனால் நீதித்துறையிலேயே உரசிப்பார்க்க முடியாதவராகவிருந்த விக்னேஸ்வரனிடம் விட்டுக்கொடுப்பு,சமரசத்துக்கு இடமிருக்கவில்லை. சில அவசரக்குடுக்கை தலைவர்களினாலும் மாகாண சபை உறுப்பினர்கள் என்றால் அமைச்சரவை அமைச்சர்களென நினைத்து திரியும் அரசியல் கற்றுக்குட்டிகளின் முட்டாள்தனங்களினாலும் தமிழரசுக்கட்சி வடக்கிலிருந்து காணாமல் போகப்போகின்றது என்பதனை சம்பந்தன் நன்கு தெரிந்து கொண்டதனால் விக்னேஸ்வரனிடம் மோத அவர் விரும்ப வில்லை. அடுத்தது வடக்கு முதலமைச்சராக தகுதியுள்ள ஒருவர் அடுத்த நிலையில் இல்லை என்பதும் சம்பந்தனுக்கு தெரியும். இதனாலேயே அவர் சமரசத்தை விரும்பினார்.
விக்னேஸ்வரனுடனான சமரச முயற்சிகள் ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருக்க , விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும் தமிழரசுக்கட்சிக்கு எதிராகவும் மக்கள் வீதியில் இறங்கினர். வடக்கில் என்றுமில்லாதவாறு இளைஞர்கள் புரட்சியும் வெடித்தது. சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக களமிறங்கினர். இந்த இளைஞர்கள் யாழ் தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தை நோக்கி வருகின்றார்கள் என்று யாரோ வதந்தியை கிளப்பி விட அங்கு கூட்டம் நடத்திக்கொண்டிருந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட உறுப்பினர்கள் பலரும் பதறியடித்துக் கொண்டு துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று தப்பியோடியுள்ளனர்.
அத்துடன் மறுநாள் வெள்ளிக்கிழமை வடக்கை ஹர்த்தால் முடக்கியதும் நல்லூரில் இருந்து அன்றைய தினம் நடத்தப்பட்ட விக்னேஸ்வரனுக்கு ஆதரவான பிரமாண்டமான பேரணியும் தமிழரசுக்கட்சியினரை பீதிக்குள்ளாக்கியது. தாங்கள் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் என்பதை வடக்கில் இனி சொல்லமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டதை அவர்கள் நன்குணர்ந்து கொண்டுள்ளனர்.
விக்னேஸ்வரனின் நீதியான நடவடிக்கைக்கு ஆதரவாக வடக்கு ,கிழக்கு மட்டுமன்றி தென்னிலங்கையிலிருந்தும் வெளிப்பட்ட ஆதரவு குரல்கள் தமிழரசுக்கட்சியின் எதிர்கால அரசியலுக்கு சங்கூதுபவையாகவே இருந்தன. விக்னேஸ்வரன் விடயத்தில் ஒரு சில முட்டாள் தலைவர்கள் அவசரப்பட்டு விட்டார்கள் என்பதனை கட்சி நன்குணர்ந்து கொண்டாலும் இவர்கள் எதிர்பார்க்காதளவுக்கு நிலைமை கை மீறிச் சென்றிருந்தது. வடக்கு முதலமைச்சராக விக்னேஸ்வரன் தொடர்கிறாரோ இல்லையோ வடக்கில் தமிழரசுக்கட்சியினால் அரசியலை தொடர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
வடக்கு அமைச்சர்கள் மீதான விக்னேஸ்வரனின் நடவடிக்கை சகலராலும் வரவேற்கப்பட்ட நிலையில் தமது கட்சி அமைச்சர்களை மட்டும் தண்டிக்கக்கூடாது என தமிழரசுக்கட்சி மிரட்டியதும் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்ததும் அதன் அப்பட்டமான அரச விசுவாசம் , சுயநல, ஊழல் மோசடிகளில் திளைத்த அரசியலையே காட்டுகின்றது. விக்னேஸ்வரனுக்கு நெருக்கமான அமைச்சர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . எமது கட்சி அமைச்சர்கள் என்னதான் ஊழல் மோசடிகள் செய்தாலும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதும் அரசின் விக்னேஸ்வரனை அகற்ற வேண்டுமென்ற ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுமே தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடாகவிருந்தது. . எனினும் விக்னேஸ்வரன் விடயத்தில் தமிழரசுக்கட்சி நன்றாகப்பாடம் கற்றுள்ளது
அதே வேளை விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்ட 16 கறுப்பு ஆடுகளில் 14 தமிழ் கருப்பு ஆடுகளை அடுத்த தேர்தல் வேள்வியில் மக்கள் நேர்த்திக்கடனாக கொடுப்பார்கள். விக்னேஸ்வரனை தோற்கடிக்க வேண்டுமென்பதற்காக சிங்கள, கட்சிகளுடன் தமிழரசுக்கட்சி கூட்டு வைத்ததை தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்கவும் மாட்டார்கள் மறக்கவும் மாட்டார்கள். இந்தக்கூட்டுக்கும் விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்குமான விலையை தமிழரசுக் கட்சி கொடுத்தேயாக வேண்டும்.




