தலைகாட்ட தயங்கும் தலைவர்கள்!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி முன்னெடுத்த நம்பிக்கையில்லா பிரேரணை சதித்திட்டம் இளைஞர் புரட்சியினால் தோல்வியில் முடிந்தாலும் மழை விட்டும் தூவானம் விடாத நிலையாக முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுத்து வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை குழப்பும் அரசின் நிகழ்ச்சி நிரலின்படியான சகுனித்தன விளையாட்டுக்களை தமிழரசுக் கடசி தனது கறுப்பு ஆடுகளைக் கொண்டு ஆட ஆரம்பித்துள்ளது.
இந்த சகுனி விளையாட்டுக்கு நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்ட 15 கறுப்பு ஆடுகளில் பல ஆடுகள் மறுத்துவிட்டாலும் பண ஆசையும் எம். பி. பதவி மோகமும் கொண்டு அலையும் ஒரு சில கறுப்பு ஆடுகள் களம் இறங்கி உள்ளன. பல கறுப்பு ஆடுகள் இந்த அரசு ஆதரவு சகுனி விளையாட்டுக்கு மறுக்க அவர்களின் பிரதேசங்களில் வெடித்துக் கிளம்பும் மக்கள் எதிர்ப்பும் இளைஞர்களின் கொந்தளிப்புமே காரணமாகவுள்ளன. இந்த தமிழரசுக் கட்சி மீதான மக்களினதும் குறிப்பாக இளைஞர்களினதும் வெறுப்புணர்வுக்கு முதல் களப்பலியாகியுள்ளார் தமிழரசுக்கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான சுகிர்தன்.
அரச ஆதரவு தமிழரசுக்கட்சியின் கறுப்பு ஆடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நடவடிக்கையை வடமராட்சி இளைஞர்களே முதலில் ஆரம்பித்து வைத்துள்ளனர். இதில் முதல் கறுப்பு ஆடாக சிக்கிக் கொண்டார் சுகிர்தன். இதனையடுத்தே தமிழரசுக்கட்சியின் பல உறுப்பினர்களும் தலைமையின் அரச விசுவாச நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க தயக்கம் காட்டத்தொடங்கியுள்ளனர். வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினால் வடக்கு அரசியல் களத்திலிருந்து காணாமல் போய் விடுவோம் என்பது பல அரசியல் கற்றுக்குட்டிகளுக்கும் தற்போது நன்றாக புரியத்தொடங்கி உள்ளது.
இதே வேளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் வடமராட்சி இளைஞர்களால் வரவழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட சம்பவம் ஏனைய உறுப்பினர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. வடமராட்சி இளைஞர்கள் தொடக்கி வைத்துள்ள எச்சரிக்கை நடவடிக்கையை தமது பகுதி இளைஞர்களும் ஆரம்பித்தால் என்ன செய்வது என்ற அச்சத்தில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்ட கறுப்பு ஆடுகளில் பலவும் தமது தொகுதி மக்களிடம் அகப்படாமல் தலைமறைவாகித்திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தனுக்கு ஏற்பட்ட நிலையை பார்ப்போம்.
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தனிடம் தமக்கு விளக்கமளிக்குமாறு வடமராட்சி இளைஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைய வதிரி அரசடிப் பகுதியில் இதற்கான கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டது. இக் கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தனை நோக்கி இளைஞர்கள் கோபத்துடன் கேள்விக்கணைகளை தொடுத்தனர்.
மக்களின் நம்பிக்கையை சிதைத்து மாபெரும் தவறிழைத்து விட்டீர்கள். நாம் தெரிவுசெய்த நீங்கள் இப்படிச் செய்வீர்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை. முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்புமாறு ஏன் இரவு நேரம் ஆளுநரிடம் சென்றீர்கள்?. ஆளுநரை மாற்றுமாறு கோரிய நீங்கள் இப்போது அந்த ஆளுநரிடம் சென்றது எந்த விதத்தில் நியாயம்?அவைத்தலைவர் என்பதன் பொறுப்பு என்ன? வடமாகாண சபையில் இவ்வளவு பிரச்சினை நடைபெற பாராளுமன்றத்திலே புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டனர் என சுமந்திரன் கூறியதன் பின்னணி என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளே உருவாக்கினார்கள் என்பதை ஏன் சம்பந்தன் மறைத்தார்?. தமிழ் தேசியம் எனக் கூறித்திரிந்த நீங்கள் இப்போது தமிழரசுக் கட்சி என்று ஏன் கூறித் திரிகிறீர்கள். முதலமைச்சரை மாற்றுவதற்கு ஈ. பி. டி. பியின் உதவியை நாடினீர்களா? முதலமைச்சருக்கு எதிரான உங்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிங்கள , முஸ்லீம் கடசிகளின் ஆதரவை ஏன் கோரினீர்கள் ?எங்களால் கொண்டு வரப்படட, முதலமைச்சரை பதவி நீக்க நீங்கள் யார்? அரசின் நிகழ்ச்சி நிரலில் தானே நீங்களும் தமிழரசுக்கட்சியும் செயற்படுகின் றீர்கள்? என்பன உள்ளிட்ட பல கேள்விகளை அடுக்கடுக்காக இளைஞர்கள் தொடுக்கவே மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் வாயடைத்துப் போயிருந்துள்ளார்.
இதனால் இன்னும் கோபமடைந்த இளைஞர்கள் , நாம் மக்கள் சேவை செய்வீர்கள் என நம்பி வாக்களித்து மாகாண சபைக்கு உங்களை அனுப்பினோம் . அங்கு உங்களை அனுப்பிய எம்மால் அடுத்த தடவை உங்களை வீட்டுக்கு அனுப்பவும் முடியும் என எச்சரித்தபோது சுகிர்தனால் எதுவும் பேசமுடியவில்லை . சில மழுப்பல் பதில்களை கூறியும் தலைமை மீது பழியை போட்டுவிட்டும் அங்கிருந்து நழுவியுள்ளார். சுகிர்தனுக்கு ஏற்பட்ட நிலைமை விரைவில் தங்களுக்கும் ஏற்படலாமென்ற அச்சத்திலேயே தமிழரசுக்கட்சி யின் பல உறுப்பினர்களும் தொகுதிப்பக்கம் செல்வதையோ பொது நிகழ்வுகளில் பங்கேற்பதையோ தவிர்த்து வருகின்றனர்.
இது போல் இன்னுமொரு சம்பவம் சாவகச்சேரியில் நடந்துள்ளது. தமிழரசுக்கட்சி யின் தென்மராட்சி அமைப்பாளரான அருந்தவபாலனின் ஏற்பாட்டில் தையல் கண்காட்சி ஒன்று நடந்துள்ளது. . இதில் பிரதம விருந்தினர்களாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் நம்பிக்கையில்லா பிரேரணை சதித்திட்ட நாயகர்களில் ஒருவருமான மாவை சேனாதிராஜா . அடுத்த முதலமைச்சர் கனவில் மிதந்து கொண்டிருந்த வடக்கு மாகாண சபை அவைத்தலைவரான சிவஞானம் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அழைக்கப்பட்டமைக்கு சாவகச்சேரி இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. இதனை அறிந்து கொண்ட மாவை சேனாதிராஜா தனக்கு சுகமில்லை எனக்கூறி நிகழ்வில் பங்கேற்பதைத்தவிர்த்து தப்பிக்கொண்டார். ஆனால் அவர் நல்ல உடல் நலத்துடன் தனது கட்சி நிகழ்வில் அன்று கலந்து கொண்டதை சில இளைஞர்கள் செல் போனில் படம் பிடித்து அதனை பகிரங்கப்படுத்தினர். அதே வேளை நிகழ்வுக்கு வந்த சிவஞானம் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்டதால் வியர்க்க விறுவிறுக்க அந்த நிகழ்வில் சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பி விட்டார். பெருமெடுப்பில் நடைபெற ஏற்பாடாகியிருந்த இக் கண்காட்சி நிகழ்வில் தையல் பயிற்சி பெற்ற மாணவிகளை விட வெளியிலிருந்து 12 பேர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.
அதுவும் ஏதாவது அடிதடி நடக்கும் அதனை பார்க்கலாமென்றே தாம் வந்ததாக இவர்கள் பின்னர் இளைஞர்களிடம் கூறியுள்ளனர். அருந்தவபாலன் மீது நாம் வைத்துள்ள மரியாதைக்காகவே எதுவும் செய்யவில்லை இல்லாதுவிட்டால் பாடம் படிப்பித்திருப்போம் என இளைஞர்கள் கூறியுள்ளனர். அத்துடன் இனி வரும் எந்த தேர்தல் என்றாலும் தமிழரசுக்கட்சியில் போட்டியிடுபவர் யாராக இருந்தாலும் அவரை தோற்கடிப்பதே எமது வேலை எனவும் தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்ட பல உறுப்பினர்களுக்கும் அந்தந்த பிரதேச இளைஞர்களால் விளக்கமளிக்க வருமாறு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்களில் பலரும் வெளியே தலை காட்டாது பதுங்கியுள்ளனர். அதிலும் வேடிக்கை என்னவென்றால் தங்களுக்குள் சந்தித்துக்கொள்ளும் போது இவ்விடயத்தைப் பற்றி பேசி உங்களைக் கூப்பிட்டார்களா என ஒருவரையொருவர் கேட்டுக்கொள்கிறார்களாம். அது மட்டுமன்றி கூப்பிட்டார்கள் என்று கூறினால் தம் மரியாதை போய்விடுமென கருதும் சிலர் இல்லை. இல்லை என் இடத்தில் பிரச்சினை இல்லை . மக்கள் என்னுடன் நல்ல மாதிரி . என் நிலையை அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் எனக் கூறி நழுவுகிறார்களாம்.
அதிலும் சில உறுப்பினர்கள் தமிழரசுக்கட்சியின் தலைமையுடன் நெருக்கமான,. தலைமையின் நம்பிக்கைக்குரிய வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் பெயரைக் கூறி அவரின் வற்புறுத்தலினாலேயே தாம் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டதாகவும் அவ்வாறு கையெழுத்திடாவிட்டால் பல விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். அடுத்தமுறை தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படாது என்றும் தமக்கு கூறப்பட்டதாகவும் இவர்களின் ( தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தரான எம். பி. ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) அரசுக்கு பந்தம் பிடிக்கும் வேலையால் நாங்கள் மக்கள் முன்பாக போக முடியாதுள்ளது. எந்த நிகழ்வுக்கும் போகமுடியாதுள்ளது. அவன்கள் செய்ய சொல்லிவிட்டு கொழும்பில் இருப்பான்கள். இங்கு நாங்கள் தான் வாங்கிக்கட்ட வேண்டியுள்ளது என்றும் பல உறுப்பினர்கள் தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறிப் புலம்பினராம்.
தமிழரசுக்கட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ள நிலையிலும் மேலும் தமது கட்சிக்கு குழி தோண்டும் வகையில் அக் கட்சியை சேர்ந்த மாகாண அமைச்சர் ஒருவரும் சிரேஷ்ட தலைவர்களும் விட்டேனா பார் என்ற ரீதியில் தொடர்ந்தும் வடக்கு முதலமைச்சரையும் மக்களையும் சீண்டும் வகையில் கருத்துக்களை கூறியும் சதிகளை முன்னெடுத்தும் வருகின்றனர். இவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பின் ஊடாக அரைகுறை தீர்வினை தமிழ் மக்கள் மீது திணிக்க முயற்சிக்கும் அரசு அதற்காக மக்களின் கவனத்தை திசை திருப்பவே வடக்கு மாகாண சபையை திட்டமிட்டு குழப்புகின்றது. அரசின் இந்த சதிக்கு சில தமிழ் தரப்பு அரசியல்வாதிகளும் துணை போகின்றனர் என்ற வடக்கு முதலமைச்சரின் குற்றச்சாட்டு தமிழரசுக்கட்சி மீது மக்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. எனவே இதற்கான விலையை தமிழரசுக்கட்சியின் தலைவர்கள், எம். பி. க்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விரைவில் கொடுக்கவேண்டி வரும். அதற்கான ஆரம்பமே வடமராட்சியிலும் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.




