செய்திகள்

ஊழலின் முற்றுகையில் ‘நல்லாட்சி’

வீரகத்தி தனபாலசிங்கம் 

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி கொள்வனவு ஊழல் விவகாரத்தின் முக்கிய புள்ளியான பங்குத் தரகு நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸுடன் வெளியுறவு அமைச்சர் ரவி கருணாநாயக்க ஒளிவு மறைவான வாணிபத் தொடர்புகளைக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் வெளியிடப்பட்ட தகவல்களையடுத்து தேசிய ஐக்கிய அரசாங்கம் பெரும் நெருக்கடியை எதிர் நோக்கவேண்டியிருந்தது.இரு வருடகாலத்தில் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட மிகவும் பாரதூரமான நெருக்கடி என்றும் இதைக் கூறமுடியும்.ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருணாநாயக்க பதிலளித்த முறை அவரைக் காப்பாற்ற நினைத்திருக்கக் கூடியவர்களைச் சங்கடத்துக்குள்ளாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அவருக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினர் யைளித்திருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்திருந்தால் தங்களால் அவரைக் காப்பாற்றக் கூடியதாக இருந்திருக்குமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நம்பியிருக்கவில்லை என்பதும் நிச்சயம்.அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மாத்திரமல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் பல உறுப்பினர்களும் கூட பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருப்பார்கள்.ஊழல்காரர்களுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தன்னை யாராவது கேட்பார்களேயானால், அமைச்சர் பதவியைத் துறந்துவிட்டு ஊழலுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடப்போவதாக ஐ.தே.க.வின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த அச்சுறுத்தல் ரவி கருணாநாயக்க விவகாரத்தில் அவரது கட்சிக்குள் இருந்த குழப்ப நிலையைத் தெளிவாக வெளிக்காட்டியது. ஐ.தே.க.வினால் கூட பாதுகாக்கப்படவோ, நியாயப்படுத்தப்படவோ முடியாத அளவுக்கு அவர் பெரும் அசௌகரியத்துள் ஆகியிருந்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் இருக்கும் விவகாரம் ஒன்றுடன் சம்பந்தப்பட்டதாக நம்பிக்கையில்லாப் பிரேரணை இருந்ததால் , அதை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கமுடியுமா இல்லையா என்பதை சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கேட்டபின்னர் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவிப்பதாக இருந்த கடந்த வியாழக்கிழமை கருணாநாயக்க சபையில் விசேட அறிக்கையொன்றை விடுத்தபிறகு அமைச்சர் பதவியைத் துறந்தார். முன்னதாக கடந்த வாரத்தைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதையும் அவர் தவிர்த்துக் கொண்டார்.  பதவி துறப்பு எதுவிதத்திலும் தவிர்க்கக் கூடியதல்ல என்பதை அவருக்கு ஜனாதிபதியும் பிரதமரும் புரியவைத்திருப்பார்கள்  என்பது நிச்சயம்.

ravi

கருணாநாயக்க பதவி விலகாமல் முரண்டு பிடிக்கக்கூடிய அளவுக்கு அவரது நிலை வலுவானதாக இருக்கவில்லை. அரசியல் கோணத்தில் நோக்குகையில் மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரிக்கப்படுகின்ற அர்ஜுன் அலோசியஸுக்கும் கருணாநாயக்கவுக்கும் இடையில் சந்தேகத்துக்கிடமான வாணிகத் தொடர்புகள் இருக்கின்றன என்று தீர்மானிப்பதற்கு போதுமான சான்றுகள் இருக்கின்றன என்பது பலரின் அபிப்பிராயம்.

பாராளுமன்றத்தில் விடுத்த அறிக்கையில்  தன்னைக் குற்றமற்றவர் என்று குறிப்பிட்ட கருணாநாயக்க, ஐ.தே.க.வின் நலனையும் ஜனாதிபதி சிறிசேனவினதும் பிரதமர் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்கத்தின் நலனையும் மனதிற்கொண்டே பதவிதுறப்பதாகவும் பிணைமுறி ஊழல் விவகாரம் தொடர்பில் தனக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் கூறினார்.கவலையுடனோ அல்லது நெருக்குதல்களின் கீழோ அல்ல,பெருமையுடனேயே வெளியுறவு அமைச்சர் பதவியைத்துறப்பதாகத் தெரிவித்த அவர், முன்னைய ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் இருந்த நிலைமையைப் போலன்றி இன்றைய அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்களைக் கூட விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபர் அனுமதிக்கப்படுகிறார் என்றும் அதிகாரிகள் தங்களது விசாரணைகளைத் தொடரவேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும் குறிப்பிட்டதைக்காணக்கூடியதாக இருந்தது.ஜனநாயகத்துக்காகவும் நல்லாட்சிக்காகவும் தனது பதவியைத் தியாகம் செய்வதற்கு எடுத்த முடிவுக்காகப் பெருமைப்படுவதாகவும் காலமும் வரலாறும் தனது கதியைத் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறிமுடித்தார்.

கருணாநாயக்க என்ன தான் கூறினாலும் , ஜனாதிபதியையும் பிரதமரையும் பொறுத்தவரை, அரசாங்கத்துக்கு எதிராக ஊழல் விவகாரத்தை மையமாகக் கொண்டு ராஜபக்ஷவின் கூட்டு எதிரணி பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பியக்கத்தைத் தீவிரப்படுத்தக்கூடிய சூழ்நிலை தோன்றுவதைத் தற்போதைக்கேனும் தடுத்துவிட்ட ஆறுதல்.

கருணாநாயக்கவின் பதவி துறப்புடன் மத்திய வங்கி பிணைமுறி கொள்வனவு ஊழல் விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துக்கு இருக்கின்ற தொல்லை ஒழிந்து விடப்போவதில்லை.

ஊழல் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற காலகட்டத்தில் கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்தபோதிலும், மத்திய வங்கி அவரின் பொறுப்பின் கீழ் இருக்கவில்லை.பிரதமர் விக்கிரமசிங்க விடமிருக்கும் தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழேயே மத்தியவங்கி கொண்டுவரப்பட்டிருந்தது.இன்றும் அதே நிலைதான் தொடருகிறது. பிணைமுறி விவகாரத்தைத் தொடக்கத்தில் இருந்தே பாரதூரமானதாகக் கருதாமல் இருந்து வந்த பிரதமர் இப்போது தனது மெத்தனமான போக்கிற்கான விளைவைச் சந்திக்கவேண்டிவரப்போகிறது.கூட்டு எதிரணியும் ஜனதா விமுக்தி பெரமுனை(ஜே.வி.பி.)யும் ஏற்கெனவே பிரதமரை இதுவிடயத்தில் கண்டனம் செய்ய ஆரம்பித்துவிட்டன.

பிணைமுறி விவகாரம் தொடர்பாக ஆராய்ந்த ஜே.வி.பி. உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தலைமையிலான அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான  பாராளுமன்றக் குழு (கோப்) சமர்ப்பித்த அறிக்கையில் அடிக்குறிப்புகளை எழுதிய ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்படவேண்டும் என்று ஜே.வி.பி. கோரிக்கை விடுத்திருக்கிறது.மேலும் சந்தேகங்கள் கிளம்புவதைத் தவிர்க்குமுகமாக பிரதமர் தானாகவே முன்வந்து ஆணைக்குழு முன்னிலையில் விளக்கமளிக்கவேண்டுமென்ற கோரிக்கையும் கூட கிளம்பியிருக்கிறது.

பிணைமுறி விவகாரத்தில் தனக்கிருக்கும் பொறுப்பில் இருந்து அரசாங்கம் தப்பிச்செல்வது என்பது இனிமேலும் சாத்தியமானதல்ல.அதுவும் குறிப்பாக அரசாங்கத்தின் ஐ.தே.க. முகாமே இதுவிடயத்தில் பொறுப்புக் கூறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

சுதந்திரக் கட்சி முகாம் தொடக்கத்தில் இருந்தே பிணைமுறி விவகாரத்தில் தன்னைத் தூரவிலக்கிவந்திருக்கிறது.ராஜபக்ஷவின் கூட்டு எதிரணி இந்த விவகாரத்தில் எடுத்திருக்கின்ற நிலைப்பாட்டையே அரசாங்கத்திற்குள் இருக்கின்ற சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் எடுத்திருக்கிறார்கள்.ஜனாதிபதி சிறிசேனவைப் பொறுத்தவரையிலும் கூட பிரதமருடன் பல்வேறு விவகாரங்களில்  புரிந்துணர்வுடன் செயற்படுகின்றபோதிலும்,பிணைமுறி விவகாரத்தில் ஐ.தே.க.வை அசௌகரியத்திற்குள்ளாக்கக் கூடிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு அவர் தயங்கவில்லை.அதன் விளைவே ஆணைக்குழு நியமனமும் விசாரணையுமாகும். ஆணைக்குழுவின் அறிக்கை வெ ளிவரும் பட்சத்தில் அரசாங்கத்தின் இரு பிரதான பங்காளிக் கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் மேலும் தீவிரமடையக்கூடிய சாத்தியங்கள் தாராளமாக இருக்கும் என்று நம்பலாம்.

ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தின் ஊழல் மோசடிகள், முறைகேடுகள் குறித்து பெரும் எடுப்பில் விசாரணைகளை ஆரம்பித்த அரசாங்கம் குறுகிய இரண்டரை வருட காலத்திற்குள்ளாகவே இப்போது அதன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களினால் திணற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. வலிந்து முதலில் சென்று ஊழல்காரர்களை சட்டத்தின் முன்னிறுத்தப்போவதாக சூளுரைத்த அரசாங்கம் இப்போது அவர்களை பிடிப்பதற்கு பதிலாக தன்னை பாதுகாத்துக் கொள்ளவதற்காக ஒரு  தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

Ravi-800x445

 நவீன இலங்கையின்  அரசியல் வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத வகையிலான பிரமாண்டமான ஊழல் மோசடிகளைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராஜபக் ஷாக்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் இப்போது ஊழலுக்கு எதிரான “புனிதப் போராளிகளாக” தங்களை காட்டிக் கொள்ளக்கூடியதாக நிலைவரம் மாறிவிட்ட விசித்திரத்தைக் காண்கிறோம்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் முன்னைய ஆட்சியின் பெருவாரியான ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது.

ஊழல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடரக்கூடியதாக உறுதியான சான்றுகள் சேகரிக்கப்பட்டதாக கூறுப்பட்ட போதிலும் பிறகு அவை தொடர்பான செயற்பாடுகளில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது.

அரசியல் காரணங்களுக்காகவே விசாரணைகள் தாமதப்படுத்தப்படுவதாக சந்தேகங்கள் எழுந்தன. விசாரணைகளை மேற்கொள்ளும் அமைப்புகளை தனது பொறுப்பில் தந்தால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பேர்வழிகளை மூன்று மாத காலத்திற்குள் சட்டத்தின் முன்னிறுத்தி சிறைக்குள் அனுப்ப தன்னால் முடியும் என்று ஜனாதிபதி சிறிசேன விரக்தியின் விளிம்புக்குச் சென்று கூறுகின்ற அளவுக்கு ஊழலுக்கு எதிரான விசாரணைகள் மந்த கதியில் சென்று கொண்டிருந்தன.

முன்னைய அரசாங்கத்தில் ஊழல் செய்தவர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் ஜனாதிபதி சிறிசேனவை பொறுத்தவரையில் சுதந்திரக் கட்சியை தனது கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக கொண்டுவர முடியாமலும் இருக்கிறது.

சுதந்திரக் கட்சியில் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை பலவீனப்படுத்துகின்ற தொடர்ச்சியான செயற்பாடுகளில் கூட்டு எதிரணியினரால் சுலபமாக ஈடுபடக்கூடியதாக இருக்கிறது. கூட்டு எதிரணியில் ராஜபக் ஷாக்களுடன் நிற்கின்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மாத்திரமல்ல, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அக்கட்சியின் உறுப்பினர்களும் கூட அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அமைச்சரவையில் தாங்கள் இணக்கம் தெரிவித்த செயற்திட்டங்களைக் கூட சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வெளியில் வந்து மறுநாளே கடுமையாக கண்டனம் செய்கிறார்கள்.

இந்தப் போக்கு கடந்த சில நாட்களாக மேலும் தீவிரமடைந் திருக்கிறது. அமைச்சரவைக் கூட்டுப்பொறுப்பு என்கின்ற விடயத்தை மருந்துக்கும் கூட காண முடியவில்லை. ஒரே கட்சியில் இருப்பவர்களே ஒருவருக்கு எதிராக மற்றவர் நம்பிக்கையில்லா பிரேரணைகளைச் கொண்டு வருவது குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி வைத்திருந்தால் தனது எதிர்கால வியூகங்களுக்கு வசதியாக இருக்கும் என்ற நோக்கத்தில் பிரதமர் விக்கிரமசிங்க, ராஜ பக்   ஷ குடும் பத்தவர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை என்ற விமர்சனம் ஆரம்பத்திலிருந்தே முன்வைக்கப்பட்டு வருகின்றது. இன்று காணப்படக்கூடியதாக இருக்கின்ற கோலத்தில் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி வைத்திருந்தாலும் கூட பிரதமரினாலும் அவரது ஐ.தே.க வினாலும் எதிர்காலத்தில் அரசியல் அனுகூலத்தை பெறக்கூடியதாக தற்போதைய நிகழ்வுப் போக்குகள் இல்லை. என்று தான் சொல்ல வேண்டும்

சுதந்திரக் கட்சி பிளவுபட்டிருக்கிறது என்ற நினைப்பில் பிரதமர் செயற்பட்டுக் கொண்டிருக்க, அக்கட்சியை  நாளடைவில் மீண்டும் ராஜபக் ஷாக்களே முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விடவும் கூடும். ஐ.தே.க .விற்குள் இருக்கின்ற சில சக்திகள் கூட நாளடைவில் ராஜபக் ஷாக்கள் பக்கம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முன்னைய அரசாங்கத்தின் ஊழல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அவர்கள் வாரிச்சுருட்டிய பொதுச் சொத்துக்களையும் செல்வத்தையும் மீட்டெடுப்பதாக நாட்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காட்டப்படுகின்ற தாமதம் அல்லது மானசீகமான அக்கறையின்மை தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் மிகப் பெரிய தோல்விகளில் ஒன்று. அந்தத் தவறே இன்று அரசாங்கத் தலைவர்களை விரட்டி வெருட்ட ஆரம்பித்துள்ளது.