செய்திகள்

எழுதப்பட்ட தீர்ப்பும் வாசிக்கப்படாத அரசியல் செய்தியும்

வீரகத்தி தனபாலசிங்கம் 

இலங்கை உயர் நீதிமன்றத்தினால் ஒரு மாதத்துக்கு முன்னர் வழங்கப்பட்ட அரசியல்  முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு  ஒன்று அரசியல் அரங்கில் பெரிதும் கவனிக்கப்படாததாக இருப்பது வியப்பைத் தருகிறது. சிங்கள அரசியல் சமுதாயமும் ஊடகங்களும் அதை வேண்டுமென்றே அலட்சியப்படுத்தியிருக்கக்கூடும். அதற்கான காரணத்தைப் புரிந்து கொள்வதிலும் சிரமம் இல்லை. ஆனால், தமிழர் அரசியல் சமுதாயமும் ஊடகங்களும் அந்தத் தீர்ப்பை முக்கியமான ஒரு பேசு பொருளாக்கி அரசியல் விவாதமொன்றைத் தூண்டி விடுவதில் ஏன் அக்கறை காட்டவில்லை என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் பிரதான கோரிக்கைகளின் அடிப்படைகளாக அமைந்த கோட்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் செய்யப்பட்டிருக்கின்ற வியாக்கியானங்கள் கனதியான செய்தியை கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையும் உள்ளடக்கியதாக அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்ற இன்றைய சூழ்நிலையில், அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகளின் வீச்செல்லை குறித்து விரிவான விவாதத்திற்கு வழிவகுக்கக்கூடியதாக அமைந்திருக்கும் தீர்ப்பு இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் பழைய கட்டிறுக்கமான மரபுக் கோட்பாட்டில் இருந்து வரவேற்கத்தக்க விலகல்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

அரசியல் உரிமைப்போராட்டங்கள் மற்றும் சமூக நீதிப் போராட்டங்களில் ஈடுபடுகின்ற மக்கள் குழுமங்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு உதவக்கூடிய முறையில் நீதித்துறை தன்னுறுதியுடன்  சுறுசுறுப்பாக இயங்குகின்ற போக்கை (Judicial Activism) இன்று பல நாடுகளில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. எமது அயல் நாடான இந்தியாவில் ஆட்சியதிகார வர்க்கத்துக்கு அசௌகரியத்தைக் கொடுக்கக்கூடிய வகையில் நீதித்துறையின் சுறுசுறுப்பான செயற்பாட்டுக்கு அண்மைக்காலத்தில் பல உதாரணங்களைக் கூற முடியும். இந்தக் கட்டுரையின் மையப் பொருளாக இருக்கின்ற தீர்ப்பை வழங்கிய இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் செயற்பாட்டை அந்த வகையறாவில்  அடையாளப்படுத்த முடியாவிட்டாலும் ,அதில் இருக்கின்ற ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமான அம்சத்தை  புறந்தள்ளி விட முடியாது.

‘சமஷ்டி முறையை நியாயப்படுத்துவது நாட்டுப் பிரிவினையை நியாயப்படுத்துவதற்கு சமனானது அல்ல. சுயநிர்ணய உரிமையை நாடுவது பிரிவினைக்கான கோரிக்கைக்கு ஒப்பானதல்ல. அரசுகளை ஒற்றையாட்சி (Unitary) எனவும் சமஷ்டி (Federal) என்றும் நாமகாரணம் சூட்டுவது  தவறான எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடும். சமஷ்டி அரசொன்றின் அம்சங்களுடன் அல்லது இயற்பண்புகளுடன் ஒற்றையாட்சி அரசுகள் இருக்க முடியும். அதேவேளை , ஒற்றையாட்சி அரசுகளின் அம்சங்கள் அல்லது இயற்பண்புகளுடன் சமஷ்டி அரசுகளும் இருக்க முடியும். ஒற்றையாட்சி அரசொன்றில் பிராந்திய அலகுகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுமாக இருந்தால் அதை சமஷ்டி அரசு என்று கருத முடியும். அதேபோன்று சமஷ்டி அரசொன்றில் மத்திய ஆட்சி பலம் பொருந்தியதாகவும் மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்டதாகவும் இருக்குமேயானால் அதை ஒற்றையாட்சி அரசு என்று கருதமுடியும். எனவே சுயாதிபத்தியத்தை (Sovereignty) பகிர்தல், அதிகாரப் பரவலாக்கம் மற்றும் பன்முகப்படுத்தல் ஆகியவை ஒற்றையாட்சி அரசுகளில் சமஷ்டி முறையிலான அரசாங்கமொன்றுக்கு வழிவகுக்கும்.

TNA-456ser

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்திருக்கிறது. ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்புக்குள் மாகாணங்களுக்கு மேலும் கூடுதல் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதன் மூலமாக சமஷ்டி முறை அரசாங்கமொன்று அமைக்கப்படவேண்டுமென்றே இலங்கை தமிழரசு கட்சி கோருகின்றது.  தற்போது இருக்கின்ற அரசுக் கட்டமைப்புக்குள் சமஷ்டி முறை அரசாங்கமொன்றைக் கோருவதை பிரிவினைக் கோரிக்கை என்று கருத முடியாது. ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி அரசொன்று நிறுவப்பட வேண்டுமென்பதற்காகவே தமிழரசு கட்சி வாதாடுகிறது. இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் தனியான அரசொன்றை நிறுவவேண்டுமென்று அந்தக் கட்சி கோரவில்லை. அதை நோக்கமாகவோ இலக்காகவோ கொண்டிருக்கவுமில்லை என்பது  தெளிவாகத் தெரிகிறது. சுயநிர்ணய உரிமை என்பது உள்ளகப் பரிமாணமொன்றையும் ( Internal Dimension) கொண்டிருக்கின்றது. அதை நாட்டுக்குள் மக்கள் குழுமமொன்றின் நலன்களுக்காகப் பயன்படுத்தமுடியும். அதனால், தற்போதைய அரசின் ஆட்புல எல்லைக்குள் சுயநிர்ணய உரிமையை உள்ளகப் பரிமாணத்துடன் சில வேளைகளில் பிரயோகிக்க முடியுமென்பதால் சுயநிர்ணய உரிமையை நாடுவதென்பது தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஒப்பானதாகாது., – இதுவே உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சமாகும்.

தமிழரசுக் கட்சி இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் தனி நாடொன்றை நிறுவுவதை நோக்கமாகவும் இலக்காகவும் கொண்டுள்ளதாகப் பிரகடனப்படுத்தக் கோரி, களனியைச் சேர்ந்த எச்.கே.டொன் சந்திரசோம என்பவர் தொடுத்த வழக்கிலேயே கடந்த மாதம் 4 ஆம் திகதி இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

1983 கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையைச் சட்ட விரோதமானதாக்குவதற்கு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அரசியலமைப்புக்கான 6 ஆவது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அமைதி வழியில் கூட நாட்டுப் பிரிவினையைக் கோருவதையோ நியாயப்படுத்துவதையோ சட்டவிரோதமானதாகப் பிரகடனம் செய்த அந்தத் திருத்தம் இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் தனியரசு ஒன்றை நிறுவுவதை நோக்கமாகவோ இலக்காகவோ கொண்டு செயற்படுகின்ற எந்தவொரு அரசியல் கட்சியையும் அமைப்பையும் தடைசெய்தது. பிரிவினையைக் கோருவதோ அல்லது நியாயப்படுத்துவதோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேரடியாகவே விசாரிக்கப்படத்தக்க குற்றச் செயலாக்கப்பட்டது. அவ்வாறு குற்றவாளியாகக் காணப்படும் எவரினதும் குடியுரிமைகள் 7 வருடங்களுக்கு ரத்துச் செய்யப்படும். அத்துடன் சொத்துக்களும் பறிமுதலாகும். தேர்தல்களில் போட்டியிட்டு பதவிகளுக்கு வருகின்றவர்கள் நாட்டுப்பிரிவினையை ஆதரிப்பதில்லை என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் விசேட ஏற்பாடும் அந்தத் திருத்தச்சட்டத்தில் இருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறுபவர்கள் பதவிகளை இழப்பர். அதேவேளை, எந்தவொரு கட்சியோ , அமைப்போ பிரிவினையை அதன் நோக்கமாகவும் இலக்காகவும் கொண்டிருப்பதாக கருதுகின்ற எவரும் உயர்நீதிமன்றத்தை நாடி அவற்றை பிரிவினைக் கட்சியாக அல்லது அமைப்பாக பிரகடனம் செய்யுமாறு கோருவதற்கு வகை செய்யும் ஏற்பாடும் திருத்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. அவ்வாறு உயர்நீதிமன்றம் பிரகடனம் செய்யும் பட்சத்தில் அந்த கட்சியோ, அமைப்போ தடைசெய்யப்படும். அதன் உறுப்பினர்கள் குடியுரிமைகளை இழந்து சொத்துக்களையும் பறிகொடுக்க வேண்டிவரும். இந்த ஏற்பாடுகளின் கீழேயே தமிழரசுக் கட்சிக்கு எதிராக சந்திரசோம வழக்குத் தொடுத்திருந்தார்.

விசாரணை விபரம்

2013 செப்டெம்பரில் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட விஞ்ஞாபனத்தில் பிரிவினைவாதத்துடன் தொடர்புடைய குறிப்புகள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டி தமிழரசு கட்சிக்கு (  கூட்டமைப்புக்கு  ) எதிராக பல மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.அப்போது பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் இருந்தார்.ஒரே விதமான முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட மனுக்களை ஒன்றாகச் சேர்த்து விசாரிப்பதில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா கடைப்பிடித்த நடைமுறையைப் பின்பற்றி இந்த வழக்குகள் சகலவற்றையும் தனது தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வே விசாரிக்கவேண்டும் என்று பீரிஸ் உத்தரவு பிறப்பித்தார். 2013 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவை சிங்கள மொழியில் இருந்ததால் அவற்றை விசாரணைக்கு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் மனுக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு அரசு தரப்பிடம் கேட்கப்பட்டது.

டொன் சந்திரசோமாவின் மனு 2014 மார்ச் 27 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.ஆரம்பத்தில் அவரது மனுவும் 2013 ஆம் ஆண்டின் மனுக்களுடன் சேர்த்து மொஹான் பீரிஸினால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது . மற்றைய மனுக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013 தேர்தல் விஞ்ஞாபனத்தை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்தவை என்றும் தனது மனு நேரடியாகவே தமிழரசு கட்சியின் யாப்புடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறதென்றும் சுட்டிக்காட்டிய சந்திரசோம அதைத் தனியாக விசாரணைக்கு எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.தமிழரசு கட்சியின் யாப்பில் செய்யப்பட்ட திருத்தத்தில் சமஷ்டி

(  Federalism ) என்ற சொல் இணைப்பாட்சி   ( confedaeral ) என்று மாற்றப்பட்டதாகவும் இணைப்பாட்சி என்பது கூட்டு ஆட்சி முறை (Confederalism என்று அர்த்தப்படுவதால் சுயாதிபத்தியம் கொண்ட அரசுகளின் ஒன்றியத்தையே தமிழரசு கட்சி கோருகிறது. அது பிரிவினையைக் கோருவதற்கு நிகரானது என்றும் அவர்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.federalism federalism

யாப்பில் சமஸ்கிருதக் கலப்புடன் இருந்த சொற்களுக்கு  பதிலாக தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதற்குச் செய்யப்பட்ட பல மாற்றங்களில் ஒன்றே இந்த இணைப்பாட்சி என்ற பதப் பிரயோகம். அதன் அர்த்தம் சமஷ்டியேயாகும் என்பதே தமிழரசு கட்சியின் நிலைப்பாடாகும்.

 இந்த விவகாரங்கள் மொஹான் பீரிஸ் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டபோது பிரிவினையை நிராகரிப்பதாக தமிழரசு கட்சி சத்தியக்கடதாசி ஒன்றைச் சமர்ப்பித்தால் வழக்கைத் தீர்த்துக்கொள்ளமுடியும் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.தனது நிலைப்பாடு பிரிவினைவாதம் அல்ல என்று கூறி தமிழரசு கட்சி 2014 செப்டெம்பர் 16 ஆம் திகதி சத்தியக் கடதாசியைச் சமர்ப்பித்தபோது மனுதாரர் திருப்திப்படவில்லை.மேலதிக விசாரணை வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.எனவேமுன்னதாக 2013 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்  நிலுவையில் இருக்கத்தக்கதாக 2014 மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்ட சந்திரசோமவின் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்தக் கட்டத்தில் 2015 ஜனவரி8 ஆட்சி மாற்றம்வந்தது.மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஜனவரி 27   நீக்கப்பட்டார். ராஜபக்ஷ அரசாங்கத்தினால் குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டு சர்ச்சைக்குரிய முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்க ஜனவரி28 ஒரு நாள் மாத்திரம் மீண்டும் பிரதம நீதியரசராக பதவியில் அமர்ந்துவிட்டு ஒய்வுபெற்றுச் சென்றுவிட்டார்.

அடுத்து உயர் நீதிமன்றத்தின் அதிசிரேஷ்ட நீதிபதியாக இருந்த கனகசபாபதி ஸ்ரீபவன் ஜனவரி 30 பிரதம நீதியரசராக பதவியேற்றார்.

அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தமிழரசு கட்சிக்கு எதிரான வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட விரும்பாமல் அதிலிருந்து தன் னை விடுவித்துக்கொண்டார்.அடுத்த சிரேஷ்ட நீதிபதியாக இருந்த பிரியசாத் டெப் தலைமையில் நீதியரசர்கள் உபாலி அபேரத்ன,அனில் குணரத்ன ஆகியோரைக் கொண்ட அமர்வு அந்த வழக்கை தொடர்ந்து விசாரணை செய்தது.சட்டச் செயன்முறைகளின் வழக்கமான தாமதங்களுடன் விசாரணை அதற்கேயுரித்தான மந்தவேகத்தில் நடந்துகொண்டிருந்தது.சம்பந்தப்பட்ட ஆவணங்களை மொழிபெயர்ப்புச் செய்யவேண்டியிருந்தமை தாமதங்களுக்கான முக்கிய காரணிகளில் ஒன்று.பிரதான இறுதி வாதங்கள் 2016 பெப்ரவரி 18 முடிவடைந்தன.அந்த ஆண்டு ஏப்ரில் 18 ஆம் திகதியும் மே3ஆம் திகதியும் சமர்ப்பணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனிடையே2017 மார்ச் 2 ஸ்ரீபவன் பதவியில் இருந்து ஓய்வுபெற பிரியசாத் டெப் புதிய பிரதம நீதியரசராக பதவியேற்றார். வழக்கின் தீர்ப்பை அவரும் ஏனைய இரு நீதியரசர்களும் கடந்த மாதம் 4ஆம் திகதி வழங்கி சந்திரசோமவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர். 1983 கறுப்பு ஜூலைக்குப் பிறகு பிரிவினைக் கோரிக்கையைச் சட்டவிரோதமானதாக்குவதற்கு ஜெயவர்தன அரசாங்கம் அரசியலமைப்புக்கான 6வது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி சரியாக 34 வருடங்கள் நிறைவடைந்த தினத்திலேயே தமிழரசு கட்சி பிரிவினையை இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் முதலாவது பிரதிவாதியாக அப்போது தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் அடுத்த பிரதிவாதிகளாக தேர்தல் ஆணையாளர் மற்றும் சட்டமா அதிபரும்  குறிப்பிடப்பட்டிருந்தனர். இடைப்பட்ட காலத்தில் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் தலைவராக்கப்பட்டதையடுத்து அவரின் இடத்துக்கு பொதுச் செயலாளராக கிழக்கு மாகாண அமைச்சரும்  சட்டத்தரணியுமான கே. துரைராசசிங்கம் நியமிக்கப்பட்டார்.

TNA

இதையடுத்து அவரே முதலாவது பிரதிவாதியாகப் பதிலீடு செய்யப்பட்டார். முதலாவது பிரதிவாதிக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகள் கே. கனகஈஸ்வரனும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.யும் சட்டத்தரணிகள் விரான் கொரியா, நிரான் அங்கிரெல் ஆகியோருடன் ஆஜராகி வாதிட்டனர்.   சட்டமா அதிபருக்காக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளேயும் அரச சட்டவாதி சுரேன் ஞானராஜும் ஆஜராகினர். (வழக்கு விசாரணை தொடர்பான இந்த விபரங்கள் 2017 ஓகஸ்ட் 19 டெயிலி மிரர் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளரும் ஆய்வாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதிய கட்டுரையில் இருந்து பெறப்பட்டவையாகும்.)

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ளாரத்த மாக  நோக்கக் கூடியதாக இருக்கின்ற அரசியல் செய்தி என்ன என்பதே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

அதுவும் குறிப்பாக, அரசியலமைப்புச் சீர்திருத்த செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற வேளையில் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் உத்தேச புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து தென்னிலங்கை அரசியல் சமுதாயமும்  தமிழர் அரசியல் சமுதாயமும் முற்றிலும் எதிரெதிரான நிலைப்பாடுகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தியிருக்கின்ற நிலையில் இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி தென்னிலங்கை மக்களுக்கு ஆரோக்கியமான செய்தி எதையும் கூறும் ஆர்வம் அரசாங்கத் தலைவர்களுக்கு இருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு மாத காலத்தில் அதற்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அனுமதித்தால் நாளடைவில் நாடு பிளவுபட்டு விடக்கூடிய ஆபத்து தோன்றும் என்று சிங்கள மக்களுக்கு தென்னிலங்கையின் சில அரசியல் சக்திகள் பயம் காட்டிக் கொண்டிருக்கின்றன. சமஷ்டி அடிப்படையிலான புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும் நோக்கம் அரசாங்கத்துக்கு இருக்கிறது என்ற பிரசாரத்தையும் இந்த சக்திகள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. சமஷ்டி என்பது தீண்டத்தகாத சொல் என்ற வகையிலான மனநிலையே தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகையதொரு சூழ்நிலையில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களான பிரதம நீதியரசரும் ஏனைய இரு நீதியரசர்களும் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கில் வழங்கிய  தீர்ப்பில் சமஷ்டி குறித்தும் உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்தும் தெரிவித்திருக்கும் வியாக்கியானங்கள் தென்னிலங்கை மக்கள் மத்தியில் பிரசாரங்களின் மூலமாக வளர்த்து விடப்பட்டிருக்கின்ற தப்பபிப்பிராயங்களை ஒரு குறைந்தபட்ச மேனும் போக்குவதற்கு பயன்படுத்தக்கூடியவை என்ற புரிதல்  பிரதான அரசியல் சக்திகளுக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு சில அரசியல் ஆய்வாளர்கள் மாத்திரமே அதுவும் குறிப்பாக ஆங்கிலத்தில் இத்தீர்ப்பு குறித்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். தீர்ப்பில் இருக்கக்கூடிய ஆரோக்கியமான செய்தி சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படுவதாக இல்லை.

சமஷ்டி முறையைக் கோருவது சட்டவிரோதமானதல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதால்  சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் ரீதியில் சமஷ்டி ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒன்றாக சடுதியாக மாறிவிடும் என்று இல்லை. ஆனால், ஒற்றையாட்சி முறையை மாற்றக்கூடாது என்று சிங்கள அரசியல் சமுதாயமும் ஒன்றையாட்சி முறைக்குள் தேசிய இனப் பிரச்சினைக்கு அர்த்தபுஷ்டியான அரசியல் தீர்வொன்றை காண்பது சாத்தியமானதல்ல என்று தமிழர் அரசியல் சமுதாயமும எதிர் எதிரான நிலைப்பாடுகளில் நிற்கின்ற நிலையில் ஒற்றையாட்சி அரசு வரையறைக்குள் சமஷ்டி முறையின் அம்சங்களையும் இயற் பண்புகளையும் கொண்ட அரசாங்கமொன்றை அமைப்பது அரசியலமைப்பு ரீதியாக முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம்  பிரகடனம் செய்திருப்பது கவனிக்கத்தக்கதாகும். அதே வேளை , சமஷ்டி முறையை கோருவதன் மூலமாக தமிழரசுக் கட்சி நாட்டுப் பிரிவினையை நியாயப்படுத்தவில்லை என்று பிரகடனம் செய்திருக்கும் உயர்நீதிமன்றம் ஒற்றையாட்சி வரையறைக்குள்ளேயே அதிகாரப் பரவலாக்கலின் வீச்செல்லைகள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க  வேண்டும் என்ற தொனியில் தீர்ப்பை அளித்திருப்பதாகவும் சில அரசியல் விமர்சகர்கள் வாதாடுகிறார்கள்.

விரிவான எந்தவொரு அதிகார பரவலாக்கல் ஏற்பாடுகள் தொடர்பிலும் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் ஆழமாக வேரூன்றி இருக்கின்ற ஆரோக்கியமற்ற அபிப்பிராயங்களை சிறிதளவேனும் போக்குவதற்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் வழியான உள்ளார்ந்த அரசியல் செய்தியைப் பயன்படுத்துவதில் அக்கறை காட்டப்படவில்லை என்ற ஆதங்கத்திலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

இச்சந்தர்ப்பத்தில் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பொதுச் சட்டத்துறை விரிவுரையாளராக இருக்கும் கலாநிதி அசங்க வெலிகல கடந்த வாரம் உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் வெளிப்படுத்தியிருக்கும் முக்கியமான கருத்தொன்றை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

‘சமஷ்டி முறையைச் கோருவதோ, நியாயப்படுத்துவதோ பிரிவினை கோரிக்கைக்கு ஒப்பானதல்ல என்று இலங்கையின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

அவ்வாறு செய்ததன் மூலமாக ஒரு மக்கள் குழுமம் என்ற வகையில் தமிழ்ச் சிறுபான்மை இனத்தவர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்று முதற்தடவையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.  உயர்நீதிமன்றத்தின் இத்தீர்மானம் இதுகாலவரையில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்று கருதப்பட்ட அதிகார பரவலாக்கலுக்கான மாற்றுத் தெரிவுகளுக்கு நீதித்துறையின் அங்கீகாரத்தைக்கச் கிடைக்கச் செய்திருப்பதன்  மூலமாக தற்போதைய அரசியல மைப்புச் சீர்திருத்தங்களுக்கான வாய்ப்புகளுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கக்கூடும். ஆனால், சீர்திருத்தங்களுக்கு எதிரான சக்திகள் அதிகார பரவலாக்கலுக்கும், அதிகார பகிர்வுக்கும் எதிரான அவற்றின் நிலைப்பாடுகளை மேலும் கூடுதலான அளவுக்கு உரத்து ஒலிக்கவும் உத்வேகம் அளிக்கக்கூடும். அதேவேளை, தற்போதைய அரசியலமைப்பு ச்சீர்திருத்த செயன்முறைகளின் பின்புலத்திலே பார்க்கு போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒற்றையாட்சி அரசுகளுக்கும் சமஷ்டி முறை அரசுகளுக்கும் இடையிலான பழைய அரசியலமைப்பு ரீதியிலான வகைப்படுத்தல்களை இப்போது மங்கலாக்கி இருப்பதுடன், ஊசலாட்டமுடையதாகவும் மாற்றியிருக்கிறது.’