றொஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பில் த இந்துவில் வெளியான மனதை உருக்கும் கட்டுரையின் சாரம்
மியன்மாரில் றொஹிங்கியா முஸ்லிம்களின் அவலம் இன்று உலகின் பாரதூரமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்று.இது தொடர்பாக ‘த இந்து’ ஆங்கிலப் பத்திரிகையில் நேற்றைய தினம் பேராசிரியர் ஷிவ் விஸ்வநாதன் என்பவர் மனதை உருக்கும் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.
றொஹிங்கியாக்களின் பிரச்சினையில் இரக்கமில்லாத அணுகுமுறையொன்றை இந்தியா கடைப்பிடிப்தை அவர் கடுமையாகக் கண்டித்து எழுதியிருக்கிறார்.”இது அவலத்துக்குள்ளாகியிருக்கும் ஒரு மக்களைக் காப்பாற்றுகின்ற பிரச்சினை மாத்திரமல்ல,இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்கின்றதைப் பற்றிய பிரச்சினையுமாகும்”என்று விஸவநாதன் குறிப்பிட்டிருக்கிறார்.
மியன்மாரின் ராகின் மாநிலத்தில் வன்முறைகளில் இருந்து றொஹிங்கியாக்கள் தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்ற இந்த நேரத்திலே, இந்தியாவில் உள்ள றொஹிங்கியா அகதிகளை நாடுகடத்தும் தனது முடிவை மறுபரிசீலனைசெய்யத் தயாரில்லை என்று இந்திய அரசாங்கம் இவ்வாரம் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்திருக்கிறது.40 ஆயிரம் றொஹிங்கியாக்கள் நாடுகடத்தப்படவிருக்கிறார்கள் என்று உள்துறை இணையமைச்சர் ஆகஸட் 9 பாராளுமன்றத்தில் வெளியிட்ட நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் மீளவலியுறுத்தியிருக்கிறது.
இந்த நிலைப்பாட்டின் மூலமாக இந்தியா என்ற சிந்தனை,ஜனநாயக மற்றும் விருந்தோம்பல் பண்புகள் கொண்ட இந்தியா என்ற கோட்பாடு எல்லாம் ஒருநாளிலேயே காணாமல்போய்விட்டது. இந்தியா எனற கனவு இல்லாமல்போய்விட்டது. கடுமையான அரசு என்ற கோட்பாட்டுக்கு இந்தியா திரும்பிவிட்டது. இரக்கம்,கருணை, நயநாகரிகம் கொண்ட இந்தியா என்ற கனவு கைவிடப்பட்டுவிட்டது.இந்த அனர்த்தத்தனமான தீர்மானத்தின் பின்னணியில் இருப்பவர்கள் முக்கியமில்லாத விவகாரங்களில் மிகையான கவனம் செலுத்துகின்ற உயர்மட்ட அதிகாரவர்க்கத்தினரும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான சிந்தனைக் குழாத்தினருமேயாவர்.
பிராந்தியத்தில் வல்லாதிக்கம் கொண்ட நாடாகமாறவேண்டுமென்று பேரார்வம் கொண்டிருக்கின்ற இந்தியாவுக்கு ( An aspirational India does not need a defeated people like Rohingya ) றொஹிங்கியாக்களைப் போன்ற தோற்கடிக்கப்பட்ட மக்கள் தேவையில்லை என்று இவர்கள் நம்புகிறார்கள் என்று விஸவநாதன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
இந்த விமர்சனத்திலிருந்து இலங்கைத் தமிழர்களுக்கு குறிப்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் என்று சொல்லப்படுவோருக்கு ஒரு பாடம் இருக்கிறதாகத் தோன்றுகிறது.
மூத்த பத்திரிகையாளர்வீ ரகத்தி தனபாலசிங்கத்தின் முகநூல் கருத்தில் இருந்து எடுக்கப்பட்டது.




