செய்திகள்

20வது திருத்தச் சட்டம் – கிழக்கு மாகாண கூட்டமைப்பினரிடம் ஏன் இந்த அவசரம்?

யதீந்திரா
20வது திருத்தச் சட்டம் கிழக்கு மாகாண சபையில் விவாதமின்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அனைவர் மத்தியிலும் உள்ள கேள்வி ஏன் கூட்டமைப்பு இந்தளவிற்கு அவசம் காண்பித்தது. சற்று பொறுமை காத்திருக்கலாமே! இது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலருடன் கலந்துரையாடிய போது ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆரம்பத்தில் ஆதிரிப்பதில்லை என்னும் முடிவில்தான் இருந்தோம். ஆனால் நாங்கள் முன்வைத்த யோசனைகள் ஏற்கப்பட்டுவிட்டதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தே இதனை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம். பிறிதொரு உறுப்பினருடன் பேசியபோது அவரும் ஏறக் குறை அவ்வாறான ஒரு பதிலையே வழங்கினார் ஆனால் அவர் இது தொடர்பில் பிறிதொரு விடயத்தை குறிப்பிட்டார். நாங்கள் முன்வைத்த யோசனைகளை ஏற்றுக் கொள்வதாக பிரமதர் அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது ஆனால் அது ஒரு உத்தியோக பூர்வ ஆவணமல்ல. எனவே இதனை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்னும் குழப்பம் நிலவியது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் தனது சட்ட ஆலோகருடன் கலந்துரையாடி இறுதியில் 20வது திருத்தச் சட்டத்தின் பிரதியுடன் குறித்த கடிதத்தையும் இணைத்தே சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கே எங்களுடைய ஆதரவை வழங்கியிருந்தோம். இது தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் எமது தலைமையிடம்தான் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். கூட்டமைப்பின் தலைமையின் அறிவுறுத்தலின் பேரிலேயே நாம் இந்த முடிவை எடுத்தோம். ஒரு வேளை கூட்டமைப்பின் தலைமை இதனை ஆதரிக்க வேண்டாம் என்று கூறியிருந்தால் நாம் இதனை ஆதரித்திருக்க மாட்டோம் என்றார் அந்த மாகாண சபை உறுப்பினர்.

20வது திருத்தச்சட்டம் தொடர்பில் அண்மைக்காலமாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. இதன் முதன்மையான நோக்கம் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே திகதியில் வைப்பது என்று சொல்லப்பட்டாலும் இதன் உள்ளடக்கம் தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் கூட்டமைப்பினர் மத்தியில் இடம்பெறவில்லை. வழமைபோலவே இந்த விடயத்திலும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சி அல்லாத எவருக்கும் எதுவுமே தெரியாது. ஆனால் இலங்கையில் இயங்கிவரும் பல சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் இந்தச் திருத்தச் சடத்தை எதிர்த்திருந்தன. இது பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரத்தைக் கொடுக்கும் ஒரு யோசனை. ஏற்கனவே 19வது திருத்தச் சட்டத்தில் இருப்பவற்றையும் மீளவும் பிடுங்கி எடுக்கப் போகிறது என்றெல்லாம் விமர்சனங்ளை செய்திருந்தனர். அதே வேளை இந்தச் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் திருத்தச் சட்டம் தென் மற்றும் ஊவா மாகாண சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இது முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. அதே போன்று வடக்கு மகாண சபையாலும் 20வது திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டிருந்தது. திருத்தங்கள் இடம்பெற்ற பின்னர் இது தொடர்பில் விவாதித்து முடிவெடுக்கலாம் என்றும் வடக்கு மாகாண சபையால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு சூழலிலேயே கிழக்கு மாகாண சபையில் மேற்படி திருத்த யோசனை அவச அவசரமாக கூட்டமைப்பின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தளவிற்கு இது விமர்சிக்கப்படுகிறதே! ஏன் விமர்சிக்கப்படுகிறது? அவ்வாறியின் தொடர்பில் எங்களுக்குள் ஒரு விவாதம் அவசியம்தானே என்றெல்லாம் கிழக்கு மாகாண சபையில் இருக்கும் கூட்டமைப்பின் அமைச்சர்களோ அல்லது உறுப்பினர்களோ சிந்திக்கவில்லை. இது தொடர்பில் கிடைக்கும் தகவல்களின் படி வடக்கு நிராகரித்திருந்த நிலையில் கிழக்கில் எவ்வாறானதொரு முடிவை எடுப்பது என்று கூட்டமைப்பின் தலைமையிடம் கேட்கப்பட்டிருக்கிறது. கூட்டமைப்பு முன்வைத்துள்ள திருத்தங்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிற நிலையில் இதனை ஆதரிப்பதில் பிரச்சினையில்லை என்று பதில் வழங்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது. 20வது திருத்தச்சட்ட விவகாரத்தை பொறுத்தவரையில் அது இன்னும் திருத்தமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அது இன்று வரை ஒரு திருத்த யோசனை மட்டுமே. இந்த நிலையில் தாங்கள் முன்வைத்த யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பது தவறான ஒரு புரிதிதலாகும். அந்த வகையில் யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ உடன்பாடும் இல்லை. இவ்வாறானதொரு சூழலில் கிழக்கின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அவசரம் காண்பித்திருக்கத் தேவையில்லை.

29th amendment

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களது நடவடிக்கையானது வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் ஒரு இடைவெளி இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்துவதற்கும் காரணமாகிவிட்டது. வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான விவாதங்களின் போது இது ஒரு ஆதாரமாக முன்வைக்கப்படலாம். கிழக்கு மாகாண நிலைமைகள் முற்றிலும் வித்தியாசமானது என்பதை இப்பத்தி ஏற்றுக் கொள்கிறது. இது தொடர்பில் முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இப்பத்தியாளர் இதனைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆனால் தமிழ் உரிமைசார் அரசியிலில் வடக்கை தவிர்த்துக் கெண்டு கிழக்கு இயங்க முடியாது. எனவே வடக்கின் அணுகுமுறைகளிலிருந்து அதிகம் விலகிச் செல்லாத வகையிலேயே விடயங்கள் அணுகப்பட வேண்டும்.

20வது திருத்தச் சட்ட யோசனை வெளிவந்ததிலிருந்து அதனை கிழக்கில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்பதில் கிழக்கு மாகாண ஆளுனர் கடும் ஆலோசனைகளில் ஈடுபட்டதாகவே அறிய முடிகிறது. ஒரு வேளை கூட்டமைப்பு இதில் பின்நின்றாலும் கூட, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய தேசியக் கட்சிகளின் துணையுடன் இதனை எப்படியாவது வெற்றிகொள்ளச் செய்ய வேண்டுமென்பதில் அவர் கடும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுனர் இந்த விடயத்தில் ஏன் கடும் பிரயத்தனங்களை எடுத்திருக்கின்றார்? வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தமிழ் அரசியல் கோரிக்கைகளில் ஒன்று. அது எந்த வகையிலும் விட்டுக் கொடுப்பிற்குரிய ஒன்றல்ல என்பதே தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடு. இதனை கொழும்பு ஏற்றுக் கொள்கின்றதா அல்லது இல்லையா என்பது வேறு விடயம். கொழும்பு ஏற்றுக் கொள்ளும் ஒன்றைத்தான் தமிழர்கள் முன்வைக்க வேண்டுமென்றால் அது அமைதியாக இருப்பது ஒன்றுதான். ஏனெனில் அதனைத்தான் கொழும்பு தமிழர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் வாயிலாக கிடைக்கப்பெற்ற ஒன்று. வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தாயக பூமி என்பதை ஏற்றுக் கொண்டதன் விளைவாகவே அது ஒரு தற்காலிய ஏற்பாடாக இணைத்துக் கொள்ளப்பட்டது. அன்றிருந்த இணைந்த வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னரும் கூட, 18 வருடங்கள் நிர்வாக ரீதியாக வடக்கு கிழக்கு என்பது இணைந்தே இருந்தது. எனவே வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமற்ற ஒன்றோ அல்லது ஏனைய இனத்தவர்களுக்கோ எதிரான ஒன்றல்ல. ஆனால் அவ்வாறானதொரு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த இடத்தில்தான் கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் அதனை ஏற்றுக் கொண்டால் அதனை நடைமுறைப்படுத்துவதில் பெரிய தடைகள் ஒன்றும் இல்லை என்னும் வாதம் மேலெழுந்தது. இதற்காகவே கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் விட்டுக் கொடுப்புக்களை செய்து கிழக்கின் ஆட்சியில் நீடித்துவருகிறது. ஆனால் முஸ்லிம்களோ வடக்கு – கிழக்கு இணைப்பு என்பதில் உண்மையான ஈடுபாட்டைக் கொண்டிருக்கவில்லை. கிழக்கு மாகாண முஸ்லிம் தலைவர்கள், புத்திஜீவிகளை பொறுத்தவரையில் கிழக்கு மகாணத்தை ஒரு முஸ்லிம் மாகாணமாக பேணிக் கொள்ளவே விரும்புகின்றனர். இதில் பெருமளவிற்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் கட்சி பேதமின்றி ஒன்றுபட்டிருக்கின்றனர்.

TNA east

இவ்வாறானதொரு சூழலில்தான், முஸ்லிம்கள் சம்மதிக்கா விட்டால், கிழக்கின் தமிழ் பகுதிகளை வடக்கோடு இணைத்தாவது வடக்கு-கிழக்கு இணைப்பை சாத்தியப்படுத்த வேண்டுமென்று ஒரு சிலர் வாதிட்டு வருகின்றனர். இதுவும் ஒரு எதிர்வாதமாக இருக்கின்றதே அன்றி கிழக்கின் நிலைமைகள் தொடர்பிலான சரியான புரிதலாக அமைந்திருக்கவில்லை. இன்றைய நிலையில் கிழக்கின் தமிழ் பகுதிகள் என்று சிலவற்றை அடையாளப்படுத்த முற்பட்டால் மட்டக்களப்பு மட்டுமே மிஞ்சும். ஏனெனில் திருகோணமலையின் பெரும்பாண்மை முஸ்லிம்கள். அம்பாறை மாவட்டம் தொடர்பில் பேசுவதற்கே ஒன்றுமில்லை. திருகோணமலை ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியென்பதால் அது திட்டமிட்டு பல்லினமயப்படுத்தப்பட்டது. திருகோணமலை துறைமுகம் அமைநதிருக்கும் நகர்புறப்பகுதி என்பது ஒரு பல்லினத் தன்மையான பகுதியாகவே மாற்றப்பட்டிருக்கிறது. இன்று தமிழர்களுக்கு ஒரு மூலோபாய முக்கியத்துவம் இருப்பதாக பேச முற்படுவோர் அனைவரது மனதில் இருப்பது, திருகோணமலை தமிழர் தாயகத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது என்பதுதான். ஒரு பேச்சுக்கு, சிலர் சொல்லுவது போன்று திருகோணமலையை விட்டவிட்டு கிழக்கின் தமிழ் பகுதிகள் வடக்கோடு இணைக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் பின்னர் திருகோணமலை தொடர்பில் தமிழர்கள் எக்காலத்திலும் விவாதிக்க முடியாது போகும். இந்தியாவுடன் ஊடாடுவதற்கான வாய்புக்கள் மிகவும் பலவீனமடையும். அவ்வாறானதொரு வடக்கு கிழக்கு இணைப்பா தமிழர்களுக்குத் தேவை. அவ்வாறானதொரு இணைப்பு வராமல் இருப்பதே கிழக்கு தமிழர்களுக்கு நல்லது. முஸ்லிம்கள் இணங்குகிறார்களா இல்லையா என்பதல்ல இங் விடயம், அதுதான் எமது நிலைப்பாடு என்றால், வரலாற்றில் புதிய வாய்ப்புக்கள் உருவாக்கின்ற போது அதனை எங்களுடைய மேசையில் தூக்கிப் போடுவதற்கு ஏற்ப அந்த நிலைப்பாட்டை நாம் பேணிப் பாதுகாப்பது ஒன்றே சரியானது. அதைவிடுத்து நித்திரையால் எழும்பி வந்து பேசுவது போன்று பேசுவதில் பொருளில்லை.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தமிழரின் உரிமைசார் அரசியில் கோரிக்கைகளில் ஒன்று. அது ஒரு சர்வதேச உடன்பாடான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ஒன்று. அதற்காக இந்தியா அழுத்தம் கொடுக்கமால் இருக்கலாம். வேறு எவரும் அது பற்றி பேசாமல் இருக்கலாம். ஆனால் ஒரு உடன்பாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 18 வருடங்கள் நடைமுறையில் இருந்த ஒரு விடயத்தை நாங்கள் கைவிட வேண்டியதில்லை. எனவே இதனைக் கருத்தில் கொண்டே, கிழக்கு மாகாணத்தின் தமிழ் அரசியல் வாதிகள் செயற்படுவது அவசியம். கிழக்கின் நிலைமைகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியதம்தான் ஆனால் அது எங்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளிலிருந்து நாங்களே விலகிச் சென்றுவிடுவதாக அமைந்துவடதுவிடக் கூடாது. வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் வடக்கிலிருந்து பேசுவோரும், கிழக்குடனான தங்களின் அரசியல் உரையாடல்களை அதிகப்படுத்த வேண்டும். அனைத்தையும் வடக்கின் வீதகளுக்குள்ளேயே முடக்கக் கூடாது. வடக்கு கிழக்கு இணைப்பிற்கான வாதம் கிழக்கில் நீறு பூத்த நெருப்பாக இருக்க வேண்டுமே அன்றி மாறாக அதனை வடக்கில் பேணிப்பாதுகாப்பதில் பயனில்லை.