கொழும்பு வந்தடைந்தார் மோடி: இன்று முக்கிய பேச்சுவார்த்தைகள்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை காலை 5.20 க்கு இலங்கை வந்துள்ள நிலையில், அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்றுகாலை 5.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினர் வந்தடைந்தனர்.

அத்துடன் விமான நிலையத்தில் இந்திய பிரதமர் மோடிக்கு முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதுடன் செங்கம்பள வரவேற்பும் வழங்கப்பட்டது. இலங்கையின் மிக நெருங்கிய அயல் நாடான இந்தியாவின் பிரதமர் ஒருவர் 28 வருடங்களுக்கு பின்னர் உத்தியோகபூர்வ அரச விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படுகின்றது.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது பல உடன்படிக்கைகளும் இரண்டு நாடுகளுக்கு இடையில் இன்றைய தினம் கைச்சாத்திடப்படவுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.





