செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலும்

யதீந்திரா
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெரும்பாலும் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இடம்பெறக் கூடும். தவறினால் பெப்ரவரியிலாவது இடம்பெற்றலாம். மாதங்களில், திகதிகளில் மாற்றங்கள் இடம்பெற்றாலும் தேர்தல் இடம்பெறப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கேள்வி – இந்தத் தேர்தலை கூட்டமைப்பு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது? கூட்டமைப்பாக எதிர்கொள்ளப் போகிறதா அல்லது கூட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாக எதிர்கொள்ளப் போகின்றனவா? அல்லது தமிழரசு கட்சி தனித்தும் ஏனைய கட்சிகள் கூட்டாகவும் எதிர்கொள்ளப் போகின்றனவா?

இவ்வாறானதொரு கேள்வியை கேட்பதற்கு ஒரு நியாயமான காரணம் உண்டு. உள்ளுராட்சி தேர்தல் வட்டார முறையில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், வட்டாரங்களை நான்கு கட்சிகளுக்கிடையில் பிரிப்பது மிகவும் சிக்கலானது. புழைய முறையில் தேர்தல் இடம்பெற்ற போதே, ஆசனங்களை பிரிப்பதில் பங்காளிக் கட்சிகளுடையில் பெரும் இழுபறிகள் நிகழ்ந்திருக்கின்றன. கடும் வாக்கு வாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இறுதியில் தமிழரசு கட்சி அதிகமான ஆசனங்களை எடுத்துக் கொண்டு ஏனைய கட்சிகளுக்கு ஒரு சில ஆசனங்களை மட்டுமே கொடுக்கும். ஆனால் இந்த நிலைமை வட்டார தேர்தலைப் பொறுத்தவரையில் மேலும் சிக்கலுக்குரியதாகலாம். கூட்டமைப்பிலுள்ள நான்கு கட்சிகளுக்கிடையிலும் வட்டாரங்களை பிரிப்பதில் ஒரு இணக்கத்தை காண்பது மிகவும் கடினம். இந்த நிலையில் இந்தப் பிரச்சினையை கூட்டமைப்பின் கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? எதோ தமிழரசு கட்சி போடும் ஒன்று, இரண்டை எடுத்துக் கொண்டு அமைதியாக இருக்கப் போகின்றனவா அல்லது உரிமையுடன் சண்டையிடப் போகின்றனவா?

TNA Cartoon (2)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டமைப்பு தொடர்பில் விவாதிப்பதற்கு எதுவுமில்லை ஏனெனில் அதற்கு எந்தவொரு கட்டமைப்புமே இல்லை. ஆகக் குறைந்தது கட்சிகளுக்கிடையில் ஒரு தேர்தல் கூட்டிற்கான சட்டபூர்வமான உடன்பாடு கூட இல்லை. அவ்வாறானதொரு உடன்பாடு இருந்திருக்குமானால் இன்று டெலோவின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டென்னீஸ்வரன் என்னும் ஒரு மாகாண சபை உறுப்பினர் வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் சென்றிருக்க மாட்டார். டெலோவின் உத்தரவுகளை மீறியிருக்கமாட்டார். ஏனெனில் கூட்டமைப்பு என்னும் நிலையில் மட்டுமல்ல தமிழரசு கட்சி தவிர்ந்த எந்தவொரு கட்சிக்கும் சட்டபூர்வமான எந்தவொரு அதிகாரமும் இல்லை. இதன் காரணமாகவே டெலோவால் டென்னீஸ்வரனுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. இந்த அனுபவத்தின் வழியாக நின்று சிந்தித்தால், உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பின்னரும் கூட, இதே விடயம்தான் அரங்கேறப் போகிறது. ஆற்றைக் கடக்கும் வரையில் அண்ணன் தம்பி, கடந்த பின்னர் நீங்கள் வேற கட்சி நாங்கள் வேற கட்சி என்னும் வகையிலேயே குடும்பிச் சண்டைகள் இடம்பெறும்.

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு செய்தியை பார்க்க முடிந்தது. அதாவது, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடாது என்று சம்பந்தன் கூறியிருக்கிறாராம். சம்பந்தனுக்கு கூட்டமைப்பு தேவை. தான் அரசியலில் இருக்கும் வரையில் அதனை சிதையவிடக் கூடாது என்பதில் அவர் கரிசனை கொண்டிருக்கலாம். ஆனால் கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் சில விடயங்களை அவதானிக்கும் போது தமிழரசு கட்சி சம்பந்தனின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றதா என்னும் சந்தேகம் எழுகிறது. விடயங்களை ஆழமாக அவதானித்தால் தமிழசு கட்சி தனித்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபவதான ஒரு தோற்றமே தெரிகிறது. சம்பந்தன் இவ்வாறு கூறினாலும் கூட, கட்சியில் பெரும்பாலானவர்கள் கூறினால் அவரும் அதற்கு உடன்படலாம் ஆனால் இந்த விடயங்கள் அனைத்தும் தேர்தல் நெருங்கும் வேளையில்தான் வெளியிடப்படும். அதுவரை தமிழரசு கட்சி தன்னுடைய உண்மையான திட்டத்தை வெளிப்படுத்தாது. இது ஏனைய கட்சிகளும் அறியாத ஒன்றல்ல. இந்தச் சவாலை ஏனைய கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? ஏனெனில் தமிழரசு கட்சியிடம் இருப்பது போன்ற தயாரிப்புக்கள் எவையும் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளிடம் இல்லை. ஒரு பேச்சுக்கு, தமிழரசு கட்சி தனித்துக் கேட்டுகும் முடிவை எடுக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்படியான நிலையில் தாங்கள் என்ன செய்வது என்பது தொடர்பில் கூட ஏனைய கட்சிகள் மத்தியில் தெளிவில்லை.

இதற்கிடையில் 20வது திருத்தச் சட்டத்தின் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அந்த முயற்சியும் கேள்விக்குள்ளாகிவிட்டது. இந்த நிலையில் இம்மாதத்துடன் கிழக்கு மாகாண சபை கலையவுள்ளது. எனினும் கலைக்கப்படும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது இடம்பெறும் என்பது குறித்தும் சரியான தகவல்கள் இல்லை. இந்தநிலையில், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கும் கூட்டமைப்பு தன்னை தயார்படுத்த வேண்டியுள்ளது. 20வது திருத்தச்சட்டத்திற்கு தான் தோன்றித்தனமாக கையுயர்த்தியது, முஸ்லிம் காங்கிரசுடனான கூட்டாட்சியின் தோல்வி போன்ற காரணங்களால், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்திகள் நிலவுகின்றன. முஸ்லிம்களுடனான, காணிப்பிரச்சினைகளுக்காக மட்டக்களப்பு மக்கள் பவுத்த பிக்குகளை நோக்கிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த இரண்டரை வருட கால கிழக்கு மாகாண ஆட்சியின் போது முஸ்லிம்களுடன் ஒரு ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்தியிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? மனோ கணேசன் கூறுவது போன்று கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் – கூட்டமைப்பு ஆட்சி தோல்வியடைந்துவிட்டது.

இந்த நிலைமையை, ஜக்கிய தேசியக் கட்சி மற்றும் கூட்டமைப்பிற்கு எதிரான கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடிய ஏதுநிலையும் காணப்படுகிறது. மாகாண சபை தேர்தல் தொடர்பில் பதலளித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள், கலைக்கப்பட்ட மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு வேளை கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்காக கூட்டமைப்பு தயாராக வேண்டியுள்ளது. இதற்கு முன்னர் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் என்பது தொடர்பில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் ஒரு தெளிவான உடன்பாடு அவசியம். அந்த உடன்பாடு சட்டபூர்வமானதாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு பின்னர் ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஏனைய கட்சிகளுக்கு தாவ முடியாது என்பது கட்டாயமான ஒன்றாக இருக்க வேண்டும். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டி, விடயங்கள் ஆராயப்பட வேண்டும். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வரவுள்ளது. கிழக்கு மாகாண சபை கலையவுள்ளது ஆனால் இது தொடர்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இதுவரை கூட்டப்படவில்லை.

இவ்வாறானதொரு சூழலில்தான் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் டி.பி.எல்.எப் (புளொட்) மாகாண சபை திருத்தச் சட்டம் மூலம், தொடர்பான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. கூட்டமைப்புக்குள் காணப்படும் வெளிப்படைத்தன்மையற்ற செயற்பாடுகளின் விளைவே இது. இவ்வாறானதொரு சூழலில் வரவுள்ள தேர்தல்களின் போதும், இதே போன்ற இழுபறிகளும் குழிபறிப்புக்களும்தான் இடம்பெறும். இந்த இழுபறியின் விளைவாக எந்தவொரு அரசியில் பின்னணியுமற்ற, ஆளுமையற்ற பலர் வேட்பாளராக களமிறக்கப்படுவர். இதற்கு காரணம் கூட்டமைப்புக்குள் வேட்பாளர்களை தெரிவுசெய்வது தொடர்பில் ஒரு தெளிவான கொள்கை நிலைப்பாடு இல்லை. இலங்கையின் பிரதான கட்சிகளான ஜக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட வேட்பாளர் தெரிவிற்கென நேர்முகத் தேர்வில் ஈடுபடுகின்றன. ஆனால் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கா போராடிவரும் ஒரு பிரதான அரசியல் சக்தியான கூட்டமைப்பில் எவரும் வேட்பாளராகலாம் என்னும் நிலைமையே காணப்படுகிறது. மாகாண சபைக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது ஆகக் குறைந்தது 13வது திருத்தச்சட்டத்தை வாசித்து விளங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றலாவது அவர்களிடம் இருக்கிறதா என்பதை பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் தகுதியற்றவர்கள் செல்லும் போது, தகுதியானவர்களாலும் எதையும் செய்ய முடியாமல் போகும். தகுதியற்ற உறுப்பினர்களால் அன்னிய சமூகங்களே நன்மையடைவர்.

voting

உள்ளுராட்சி மன்ற தேர்தல் அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் கட்சிகள் தொடர்ந்தும் அசட்டையாக இருப்பது சரியான ஒன்றா? கூட்டமைப்பின் தவறுகளுக்கு அதன் தலைமையை மட்டும் குற்றம்சாட்டிவிட்டு ஏனையவர்கள் அமைதியாக இருக்க முடியாது. இது அனைவருக்குமான பொறுப்பு. அனைவரும் சேர்ந்தே இவற்றை சரிசெய்ய முற்பட வேண்டும்.