நெம்புகோல் தத்துவத்தை புரிந்து கொள்ளுமா கூட்டமைப்பு…?
வசந்தன்-
ஒரு சதாப்த காலமாக நடைபெற்று வரும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான தீர்வாக அவ்வப்போது இரு தரப்புக்கும் இடையில் உடனபடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அதது சிங்கள பெரும்பான்மையினரால் கிழித்தெறியப்பட்மையே வரலாறு. ஒரு கட்டத்தில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக முழுமையாக தீர்வு இல்லாவிட்டாலும் தமிழ் தேசிய இனத்தின் தாயகக் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டு இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு மாகாணசபையும் உருவாக்கப்பட்டது. சிங்கள தேசியம் இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தையும் சீர்குலைப்பதில் முனைப்பு காட்டி அதில் வெற்றியும் பெற்றது. அதன்பின்னர் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சி பீடம் ஏறிய சந்திரிக்கா அம்மையாரின் தீர்வுத் திட்டமும் குப்பைக் கூடையில் வீசப்பட்டது. இப்படியாக மஹிந்த ராஜபக்ச ஆட்சி வரையிலான அனைத்து தீர்வுத் திட்டங்களும் குப்பைக் கூடைக்குச் சென்றதே தேசிய இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் இலங்கையின் வரலாறு. இதன்காரணமாகவே தனிநாட்டுக்கான கோரிக்கை கூர்மையடைந்திருந்தது. அதனை அடைவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பினால் ஆயுதப் போராட்டமும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இதனை பயங்கரவாதம் என்று இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைத்து ஒரு அரசு என்ற அடிப்படையில் சர்வதேச அரசுகளின் ஆதரைவைப் பெற்றுக் கொண்டு, தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்கான போராட்டத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டமாக சித்தரித்து சர்வதேச ஆதரவுடன் அதனை மௌனிக்கச் செய்தது.
சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த அரசியல் மற்றும் இராஜதந்திர வாக்குறுதிகளை நிறைவேற்றாமையின் காரணமாக சர்வதேச சமூகம் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை கொடுக்கத் தொடங்கியது. இந்த அழுத்தத்திற்கான நெம்புகோலாக தமிழ் தேசிய இனத்தின் பிரச்சனையை அது தனது கைகளில் எடுத்துக் கொண்டது. இலங்கை அரசாங்கத்தின் சீனாவை நோகிய நெருக்கமும், அதற்கு எதிரான மேற்கத்தைதேய, அமெரிக்க மற்றும் இந்தியாவின் இராஜதந்திர நகர்வுகளும் இலங்கையை ஒரு இராஜதந்திர பொறிக்குள் சிக்க வைத்திருக்கிறது. இந்த நெம்புகோல் தத்துவத்தில் சுமையாக இலங்கை அரசாங்கமும், திறனாக அமெரிக்க மேற்குலக மற்றும் இந்திய அரசுகளும், தாங்கியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் செயற்படுகின்றது.
அந்த சுமையின் நகர்வுக்கு உரிய அழுத்தத்தை கொடுப்பதில் சர்வதேச சமூகம் பெரிதும் அக்கறை காட்டாத நிலையில் தாங்கியாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுமையையும், திறனையையும் சமப்படுத்தும் சக்தியாக தமிழ் மக்களின் அபிலாசைகளை அடைமானம் வைத்து தன்னுடைய ஸ்திரத்தன்மையை பேணி வருகிறது. இந்த முக்கூட்டு தத்துவத்தின் அடிப்படையிலேயே தற்போதைய புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையையும் நோக்க வேண்டியுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் திறனாக தொழிற்படும் சர்வதேச சமூகம் எத்தகைய கருத்தையும் வெளியிடாத நிலையில் சுமையும், தாங்கியும் ஒன்றுக் கொன்று உடன்பட்டும், முரண்பட்டும் கருத்துக்களை தெரிவித்து தத்தமது சமநிலையை பேண முயற்சிக்கிறது. இந்த இரண்டு சக்திகளின் சமநிலை பேணல் ஆனது இரண்டு சமூகத்தின் மக்களையும் குழப்புவதிலேயே தங்கியிருக்கிறது.
சுமையாகவுள்ள அரசாங்கம் தன்னுடைய அதியுச்ச அதிகாரங்களை பயன்படுத்தி ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு. அதிகாரங்கள் பகிரப்படும். பௌத்த சமயத்திற்கே முன்னுரிமை. ஏனைய மதங்களும் பாதுகாக்கப்படும். வடக்கு -கிழக்கு இணைப்பு இல்லை என்று சொல்லுகிறது. தாங்கியும் ஒரு நேரத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பில்லாத தீர்வை ஏற்கமாட்டோம் என்றும், சமஸ்டி அதிகாரத்தையே நாங்கள் கோருகின்றோம், தமிழ் மக்கள் ஏற்காத தீர்வு எதையும் தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் தமிழ் மக்கள் மத்தியில் சொல்லிக் கொண்டு சுமையை தூக்குவதாக நினைத்து இப்பொழுது வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை. ஒற்றையாட்சியா சமஸ்டியா என்ற சொற்பிரயேதகங்களை விட உள்ளடக்கத்தை பாருங்கள். பௌத்ததிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் ஏனைய மதங்களுக்கும் ஆபத்து இருக்காது. வந்திருப்பது வெறும் இடைகால அறிக்கை தான். பொறுத்திருந்து பாருங்கள என்று சொல்லி மீண்டும் தனது பழைய இடத்திற்கே இறங்கி அரசாங்கத்தை தாங்கிக் கொண்டு இருக்கிறது.
அரசியல் தாலைவர்கள் மத்தியில் இருந்து இந்த நாட்டு மக்களுக்கு புதிய அரசியல் யாப்பு தொடர்பாக முழுமையான தெளிவை கொடுக்க முடியாத நிலை தோன்றியிருக்கிறது. பேரினவாதத்தில் திளைத்து நிற்கும் சிங்கள பௌத்தத்தை தூக்கிப் பிடித்து ஆட்சி நடத்தும் சத்திகளும் தமிழ் தரப்பினரின் உரிமைகளை அங்கீகரித்து விட்டால் தங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்து விடுமோ என்ற அச்சத்தில் இன்னமும் இருக்கிறது. தமிழ் தலைமைகளைப் பொறுத்தவரையில் தங்கள் கையாளாகாத தனத்தை மூடிமறைப்பதற்கு வழி தெரியாமல் எதையோ பெற்றுக் கொடுத்து விட்டோம் அல்லது பெற்றுத் தரப் போகிறோம் என்றும் மறுபுறத்தில் ஒரே மூச்சில் எல்லாவற்றையும் அடைந்து விட முடியாது என்றும், இப்பொழுது கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்றும் சொல்லி எதுவுமே கிடைகாமல் இருந்தாலும் ஏற்க வைப்பதற்கும் தங்களது ஒன்றுமில்லாத சாதனையை சந்தைப்படுத்துவற்கு முயற்சிக்கிறது.
இந்தப் பின்னனியிலேயே தமிழ் தரப்பில் இருந்து பல்வேறு சக்திகளினதும், துறைசார் நிபுணர்களினதும், கருத்துக்களை ஆராய்ந்து தமிழ் மக்களை விழிபடையச் செய்ய வேண்டியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளில் தமிழரசுக் கட்சி, சமஸ்டி கிடைத்து விட்டதாக அந்தக் கட்சியின் செயலாளர் அறிக்கை விட்டிருக்கின்றார். அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் சிரேஸ்ட தலைவர், ஊடகப் பேச்சாளர் அனைவருமே இடைக்கால அறிக்கைக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். ஆதரவுக்கான காரணத்தை அவர்களாலும் பகிரங்கமாக சொல்ல முடியவில்லை. மற்றொரு கட்சி இதனை நிரகரிப்பதாக மிக நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தது. எஞ்சிய இரண்டு பங்காளிக் கட்சிகள் தமது கருத்துக்கள் எதையும் வெளிப்படுத்தவில்லை. பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களையும், துறைசார் வல்லுனர்களையும், சில அரசியற் கட்சிகளையும், பரந்துபட்ட அளவில் பொது அமைப்புக்களையும், சட்ட வல்லுனர்களையும் கொண்ட தமிழ் மக்கள் பேரவை நன்கு அலசி ஆராய்ந்து தமிழ் மக்களின் அபிலாசகைள தீர்க்க கூடிய வகையில் இடைக்கால அறிக்கையில் எதுவும் இல்லை என்றும், மக்களின் தியாகங்களை கொச்சபைப்படுத்தும் வகையிலேயே இந்த அறிக்கை வெளிவந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தமிழ் கல்விச் சமூகம் பல்வேறு துறைசார் நிபுணர்களின் மூலம் ஒரு விரிவான கலந்துரையாடலை நடத்தி இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. யாழ்பால்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சஙகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இடைக்கால அறிக்கை தொடர்பான கலந்துரையாடலில், பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி கிடையாது. ஆனால் தமிழரசுக் கட்சி அவ்வாறு கூறுவதாகவும், இடைக்கால அறிக்கையில் இனப்பிரச்சனை தீர்வுக்கான பிரத்தியேகமான அம்சம் எதுவும் இல்லை எனவும் சட்டத்துறை விரிவுரையாளர் கலாநிதி குமாரவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
இடைக்கால அறிக்கை வெறும் பரித்துரை மாத்திரமே எனவும், அதில் கூட அரசாங்கம் பல விடயங்களில் உடன்படவில்லை எனவும் ஊடகத்துறை விரிவுரையாளர் கலாநிதி ரகுராம் தெரிவித்துள்ளார். அரசியல் விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம் இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அதனை அடியோடு நிராகரிக்க வேண்டும். தமிழரசுக் கட்சி சுயாட்சி என்ற கோட்பாட்டை கைவிட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட பலரும் தமிழரசுக் கட்சிக்கு எதிராக விமhடசனங்களை முன்வைத்ததுடன், இடைக்கால அறிக்கையை நிராகரித்தும் இருந்தனர். இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையை தமிழ் தேசிய இனத்தின் புத்திஜீவிகள், கல்வி சமூகம், பொது அமைப்புக்கள், துறைசார் நிபுணர்கள், சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்புக்களும் நிராகரிக்கும் நிலையில் தமிழரசுக் கட்சி மட்டும் அதனை ஏற்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
நெம்புகோலின் முன்னால் உள்ள அரசாங்கம் என்னும் சுமையை நகர்த்துவதற்கோ, தூக்குவதற்கோ சர்வதே சமூகம் என்ற திறன் தேவைப்படுகிறது. சுமை மீண்டும் தன் பழைய நிலையை அடையாமல் இருப்பதற்கு தாங்கியாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிய வகையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். சுமைக்கும், திறனுக்கும் இடையில் சரியாக செயல்பட்டு தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். இந்த அறிவியல் தத்துவத்தை புரிந்து கொள்ளாதவரையில் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வும் கிடைக்காது. இந்த நாடும் சுபீட்சமாக இருக்காது.
N5

