வெள்ளை வான் விவகாரத்தில் புதிய திருப்பம்: கடற்படை அதிகாரி ஒருவர் கைது
கொழும்பு, தெஹிவளைப் பிரதேசத்தில் வைத்து மூன்று தமிழ் மாணவர்கள், அவர்களது நண்பர்களான இரு முஸ்லிம் மாணவர்கள் உள்ளிட்ட ஐவரை கடத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடற்படையின் முக்கிய அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் விவகாரத்தில் இதன் மூலம் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த கடத்தல்களுக்கும் அப்போது கடற்படையில் இருந்த சில முக்கிய அதிகாரிகளுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இது தொடர்பில் விசேட விசாரணை ஒன்று இடம்பெற்று வரும் நிலையிலேயே லெப்ரின்ட் கொமான்டர் தர கடற்படை அதிகாரியை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
குறித்த கடற்படை அதிகாரியை புலனாய்வுப் பிரிவினர் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அதற்கமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.
2008 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தலை நகரின் பல பிரதேசங்களில் இருந்தும் கடத்தப்பட்டு திருகோணமலை, கொழும்பு கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காணாமல் போயுள்ள 11 பேர் தொடர்பில் 7 இற்கும் மேற்பட்ட கடற்படை அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் குறித்த காலப்பகுதிக்குள் தலை நகரின் மருதானை, மட்டக்குளி, கொட்டஞ்சேனை, புளூமென்டல் மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் காணாமல் போனோர் இது வரை உயிருடன் உள்ளனரா என்பது தெரியவராத நிலையில் இந்த காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக் கூறத்தக்க அனைவரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணையை ஆரம்பித்திருந்தனர்.
முன்னதாக இது தொடர்பில் கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கப்டன் தஸநாயக்கவை புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்துவிட்டு விடுதலை செய்துள்ள போதிலும் தேவை ஏற்படின் அவரை மீண்டும் விசாரணை செய்யவுள்ளதாகவும் இந்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட குழுக்களில் ஒன்று அவரின் கீழ் இருந்துள்ளமை தொடர்பிலான சந்தேகத்திலேயே இந்த விசாரணைகள் தொடர்வதாகவும் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டிருந்தது.
இது வரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 35 வாக்கு மூலங்களை இந்த விவகாரம் குறித்து பதிவு செய்துள்ள நிலையில் தெஹிவளையில் வைத்து 2008 ஆகஸ்ட் மாதம் கடத்தப்பட்ட இரு முஸ்லிம் மாணவர்கள் உள்ளிட்ட 5 மாணவர்களின் விவகாரம் தொடர்பில் கடற்படையின் அதிகாரி ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




