சஞ்சலமான சகவாழ்வின் எதிர்காலம்?
வீரகத்தி தனபாலசிங்கம் ( எஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஆலோசக ஆசிரியர் )
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சேர்ந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்து இரு வருடங்கள் இரு மாதங்களுக்கும் சற்று கூடுதலான காலம் கடந்திருக்கும் நிலையில், அவற்றுக்கிடையிலான ‘சகவாழ்வு’ தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையும் வரை நீடிக்குமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது. அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்கான தந்திரோபாயம் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பிரிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரிவிடம் முன்வைத்திருக்கும் ஒரு முக்கியமான நிபந்தனையே அதற்குக் காரணமாகும். ஜனாதிபதி தலைமையிலான பிரிவு ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் மாத்திரமே இருப்பிரிவுகளும் சேர்ந்து தேர்தலில் செயற்படக்கூடிய வாய்ப்பு தோன்ற முடியும் என்று ராஜபக் ஷ பிரிவு வலியுறுத்தியதாகவும் உடனடியாக அரசாங்கத்தில் இருந்து வெளியேற முடியாது. பிறகு ஒரு கட்டத்தில் அவ்வாறு செய்யமுடியும் என்று ஜனாதிபதி பிரிவு கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வருவதைத் தடுக்க வேண்டுமானால் தங்களுக்கிடையிலான ஐக்கியம் தொடருவது அவசியம் என்ற புரிந்துணர்வுடன் ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இக்காலவரையில் செயற்பட்டு வந்திருக்கின்றபோதிலும், அவர்கள் இருவரினதும் தலைமையிலான கட்சிகளுக்கிடையிலான உறவுகள் சுமுகமானவையாக இருக்கவில்லை என்பதே உண்மையாகும். பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் என்றாலென்ன, அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்கள் என்றாலென்ன அல்லது முக்கியமான எந்தவொரு கொள்கை முன்னெடுப்பாக இருந்தாலென்ன இரு கட்சிகளின் அரசியல்வாதிகளும் முரண்பாடான நிலைப்பாடுகளையும் அணுகுமுறைகளையுமே வெளிக்காட்டி வந்திருக்கின்றனர்.
இரு பிரதான அரசியல் கட்சிகளும் முன்னென்றுமில்லாத வகையில் ஒன்று சேர்ந்து அமைத்திருக்கும் அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினை உட்பட நாடு எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கான வழிவகைகளை நேர்மறையான ஒரு சூழ்நிலையில் ஆராய்வதற்கு அருமையான வாய்ப்பைத் தருமென்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியிலே அது அரசாங்கமொன்றில் பங்காளிகளாகவே இருந்து கொண்டு பழைய மாதிரி கட்சி அரசியல் மாச்சரியங்களை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுப்பது என்று இரு கட்சிகளினதும் அரசியல்வாதிகள் செய்திருக்கக்கூடிய ஒரு வினோதமான பரிசோதனையாக போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஐக்கிய தேசிய கட்சியினதும் சுதந்திரக் கட்சியினதும் அமைச்சர்கள் தனித்தனியாக செய்தியாளர் மகாநாடுகளை ஏற்பாடு செய்து ஒரு தரப்பை மறுதரப்பு ஆட்சிமுறை தொடர்பிலும், அரசியல் விவகாரங்கள் தொடர்பிலும் விமர்சனம் செய்யாமல் ஒரு வாரம் கூட அண்மைக்காலத்தில் கடந்து சென்றதில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களையும் அரசியல்வாதிகளையும் ‘பொறியில் வீழ்த்துவதற்கு’ தங்களுக்கு கிடைத்திருக்கின்ற வசதியான கருவியாக மத்திய வங்கி பிணைமுறி கொள்வனவு விவகாரத்தைச் சூழ்ந்துள்ள சர்ச்சைகளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் நோக்குகிறார்கள். அந்த விவகாரத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள் பெரும் சிக்கலான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையே. இது இரு கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
பிரதமர் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, அவர் எதிர்கட்சித் தலைவராக இருந்த பல வருடங்களில் எதிர்நோக்கியதைப் போன்று அவரின் தலைமைத்துவத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சவால் எதுவும் இப்போதும் இல்லை. ஆனால், சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி சிறிசேனவின் தலைமைத்துவம் பலம் பொருந்தியதாக இல்லை.

2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்ற ஒரு வார காலத்துக்குள் சிறிசேனவினால் சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை தனதாக்கிக் கொள்ள முடிந்ததெனினும், இதுவரையில் அவரால் கட்சியை தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரமுடியாமல் இருக்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு பிரிவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதானமாக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் பங்கேற்றிருக்கின்ற அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷவுக்கு விசுவாசமான இன்னொரு பிரிவு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிரணி என்ற பெயரில் தனியாக இயங்குகிறார்கள். இந்த கூட்டு எதிரணியினர் அநேகமாக அரசாங்கத்தின் சகல செயற்திட்டங்களையும் கொள்கை முன்னெடுப்புக்களையும் கடுமையாக எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், எந்தவிதமான மாற்றுவேலைத்திட்டத்தையோ அல்லது உருப்படியான அரசியல் நிகழ்ச்சி நிரலையோ அவர்கள் முன்வைப்பதில்லை.
அதேவேளை,அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள், ராஜபக் ஷ மீதான தங்கள் நாட்டத்தை வெளிக்காட்டுவதற்கு தயங்குவதாகவும் இல்லை. எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான பிரிவினருடன் சேர்ந்து போட்டியிட்டால் மாத்திரமே தங்களால் வெற்றி பெறக்கூடியதாக இருக்கும் என்று இவர்களில் பலரும் நம்புகிறார்கள். 2015 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரங்கள் ராஜபக் ஷ தலைமையிலேயே முன்னெடுக்கப்பட்டன. சுதந்திரக் கட்சியினதும் அதன் தலைமையிலான சுதந்திர முன்னணியினதும் உத்தியோக பூர்வமான தலைவராக ஜனாதிபதி சிறிசேனவே இருந்தபோதிலும் , அவரால் பாராளுமன்றத் தேர்தலில் எதையுமே செய்யக்கூடியதாக இருக்கவில்லை. அன்று அவர் எதையும் செய்ய முடியாத பார்வையாளராகவே இருக்கவேண்டியேற்பட்டது. ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்ததாலும் கூட ராஜபக் ஷவை பிரதமராக ஒருபோதும் நியமிக்கப்போவதில்லையென்று பயம் காட்டுவதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை பயன்படுத்த மாத்திரம் அவரால் முடிந்தது. இலங்கையில் இது காலவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தவர்களில் எவருமே சிறிசேனவைப் போன்று தங்கள் கட்சியினாலேயே ஒரு தேர்தலின் போது ஓரங்கட்டப்பட்டதில்லை.
இதனிடையே ராஜபக் ஷ விசுவாசிகள் ஏற்கனவே முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டார்கள். அதன் நோக்கம் சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவம் ராஜபக் ஷ விசுவாசிகளுக்கு எதிர்காலத் தேர்தல்களில் வேட்பாளர் நியமனங்களை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கக் கூடிய பட்சத்தில் அவர்களின் அரசியலுக்கு பாதிப்பு ஏற்படாதிருப்பதை உறுதி செய்வதேயாகும். அதாவது நியமனம் மறுக்கப்படுமானால் அவர்கள் புதிய கட்சியின் சார்பிலான வேட்பாளர்களாக தேர்தலில் குதிப்பார்கள். சில உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக பொதுஜன பெரமுனவினர் கடந்த வாரம் ஏற்கனவே கட்டுப்பணத்தை செலுத்திவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ராஜபக் ஷ மீண்டும் சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவதற்கு தன்னால் இயன்றவரை முயற்சிப்பார். அவரை மீண்டும் தலைவராக்குமாறு ஜனாதிபதி சிறிசேன பிரிவினரிடம் ஏற்கனவே அவரின் விசுவாசிகள் கோரிக்கை முன்வைத்திருக்கிறார்கள். அது சாத்தியமில்லாது போனால் புதிய கட்சியின் மூலமாக தனது எதிர்கால அரசியலை அவர் முன்னெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. சிங்கள மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைக் கொண்ட அரசியல் தலைவராக அவர் தன்னையே நம்புகிறார். கூட்டு எதிரணியினரைப் பொறுத்தவரையில் அவர்கள் ஆக்ரோஷமான முறையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சுதந்திரக் கட்சியின் சிறிசேன பிரிவுடன் சேர்ந்து கொள்வதற்கு அவர்கள் கடுமையான பல நிபந்தனைகளை முன்வைக்கிறார்கள். அந்த அளவுக்கு தங்களை பலமுள்ள பிரிவினராக அவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து அமைத்திருக்கும் தேசிய ஐக்கிய அரசாங்கத்திலிருந்து வெளியேறுமாறு சிறிசேன பிரிவினரிடம் அவர்கள் நிபந்தனை முன்வைக்கிறார்கள். அரசியல் ரீதியில் நோக்குகையில் ஜனாதிபதி தரப்பு பலவீனமானதாகவே இருக்கிறது. சகல முக்கியமான விவகாரங்களிலும் அவர்கள் கூட்டு எதிரணியின் நிலைப்பாடுகளை அடியொற்றியே அணுகுமுறைகளை வகுக்கிறார்கள். அதன் விளைவாக இன்று அரசாங்கம் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகளுக்கு தனது கட்சியை முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் ஜனாதிபதிக்கு இருக்கும் இயலாமை முக்கியமான ஒரு காரணமாக விளங்குகின்றது.
இத்தகையதொரு பின்புலத்திலே, 2015 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திர கட்சிக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியெழுகிறது. அந்த உடன்படிக்கை இருவருடங்களுக்கானது. அதை நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானமொன்றை எடுக்கப்போவதாக ஜனாதிபதி சிறிசேன ஏற்கனவே கூறியிருக்கிறார். பிரதமர் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, பல விவகாரங்களில் முரண்பாடுகள் நிலவுகின்ற போதிலும் கூட, இரு கட்சிகளுக்கும் இடையிலான ‘சகவாழ்வு’ தொடரவேண்டுமென்ற விருப்பத்தை அவர் தொடர்ச்சியாக வெளிக்காட்டி வருகிறார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சுதந்திரக்கட்சியினரின் அணுகு முறைகளையும் செயற்பாடுகளையும் அடிக்கடி கண்டன விமர்சனம் செய்கின்ற அதேவேளை, பிரதமர் ஒரு போதுமே பகிரங்கமாக அத்தகைய விமர்சனங்களை முன் வைப்பதில்லை. ஆட்சி முறை தொடர்பிலான விவகாரங்களில் ஜனாதிபதி சிறிசேனவுடன் நடைமுறைச் சாத்தியமான விதத்தில் புரிந்துணர்வொன்றைப் பேணுவதில் அக்கறை கொண்ட ஒருவராக பிரதமர் எப்போதுமே தன்னைக் காண்பித்து வருகிறார். ஆனாலும், பிளவுபட்டிருக்கக்கூடிய சுதந்திரக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலத் தேர்தல் வெற்றி வாய்ப்புகளுக்கு அனுகூலமானதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார் என்பது வெளிப்படையானது. சுதந்திரக்கட்சியில் தற்போதுள்ள பிளவைப் பொறுத்தவரை, முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான பிரிவு வெ ளித் தோற்றத்தில் இன்று காணப்படுவதைப் போன்று மக்கள் மத்தியில் உண்மையில் பெரும் செல்வாக்கைக் கொண்டிருக்கிறதா? ஜனாதிபதி சிறிசேனவின் பிரிவு கணக்கில் எடுக்கக்கூடிய வாக்கு வங்கியொன்றைக் கொண்டிருக்கிறதா என்பதை உள்ளூராட்சித் தேர்தல்கள் நிச்சயமாக வெளிக்காட்டும்.
சுதந்திரக்கட்சி பிளவுபட்டிருக்கும் நிலையில் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியினால் சுலபமாக வெற்றி பெறக் கூடியதாக இருக்குமென்று பிரதமர் நம்புகிறார் என்றால், அந்த நம்பிக்கை எந்தளவுக்கு விவேகமானது என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால் கடந்த மூன்று வருடகாலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியையும் உள்ளடக்கிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே மக்கள் தங்கள் முடிவுகளை எதிர்காலத் தேர்தல்களில் எடுப்பார்கள். அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கணிசமான வெறுப்புணர்வைத் தோற்றுவித்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. அதனால், பதவியில் இருக்கின்ற அரசாங்கத்தின் மீதான மக்களின் உணர்வுப் பிரதிபலிப்புகள் வாக்குகளாக மாறும் போது ஐக்கிய தேசியக் கட்சியும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்க வாய்ப்பில்லையே!
கடந்த வாரம் குருநாகல் மாவட்டத்தில் நிக்கவாரட்டியவில் பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்காக தன்னால் மேற்கொள்ளப்படுகின்ற உறுதியான முடிவுகளைக் கண்டனம் செய்பவர்கள் என்று அவர் கருதுகின்றவர்களை கடுமையாகக் குற்றஞ்சாட்டினார். அவரது குற்றச்சாட்டு ஐக்கிய தேசியக்கட்சி அரசியல்வாதிகள் சிலரை நோக்கியது என்பது வெளிப்படையானது. 2015 தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதற்கு அக்கட்சியின் அரசாங்கம் இழைத்த பல தவறுகளே காரணம். அதுபோன்றே ஐக்கியதேசியக் கட்சியும் அரசாங்கத்தில் இருக்கும்போது தவறுகளைச் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் தனதுரையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் வாதிகளிடமிருந்து இதுவரையில் எத்தகைய எதிர்வினையும் வரவில்லை
ஜனாதிபதியைக் கண்டனஞ்செய்து கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விக்கிரமசிங்க அறிவுறுத்தியதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன. மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுவது என்பது சுலபமானதல்ல. அவ்வப்போது பிரச்சினைகள் எழவே செய்யும் என்றும் பிரதமர் அவர்களிடம் கூறியிருக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ அரசியல் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு செய்தியாளர் மகாநாடுகளை ஏற்பாடு செய்வதற்கு முன்னதாக கட்சியின் தலைமைத்துவத்திடம் முன்அனுமதியைப் பெறவேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியிருக்கிறார். அரசாங்கத்தின் இரு பிரதான பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வதை தவிர்ப்பதில் பிரதமர் அக்கறை காட்டுகிறார் என்று இதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கட்சிகளுக்கிடையிலான சஞ்சலமான சகவாழ்வு உள்ளுக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்ற பிரச்சினைகளிலிருந்து தப்பித்து எவ்வளவு காலத்துக்கு நின்று பிடிக்க முடியும்.




