ஆறு மாதத்தில் சட்டசபை தேர்தல் வந்தாலும், அதை சந்திக்க தயார்- நடிகர் ரஜினிகாந்த்
ஆறு மாதத்தில் சட்டசபை தேர்தல் வந்தாலும், அதை சந்திக்க தயார்,” என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.சென்னையில், நேற்று நடந்த விழாவில் பங்கேற்ற நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்றைய விழாவில் கமல் கலந்து கொண்டதால், கமலுடன் இணைந்து செயல்படுவது குறித்த கேள்விக்கு, ‘காலம் தான் பதில் சொல்லும்’ எனக் கூறி, நழுவினார்.நடிகர் ரஜினிகாந்த், தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாக, 2017 டிசம்பர் 31ல் அறிவித்தார். அதன்பின், ரசிகர்களையும், பொது மக்களையும் இணைப்பதற்கு வசதியாக, ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்ற இணையதளத்தையும், ‘மொபைல் அப்’ வசதியையும் ஆரம்பித்தார். அதில், ஏராளமானோர் உறுப்பினராகி வருகின்றனர். அவர்களின் முழு விபரங்களும் சேகரிக்கப் படுகின்றன. பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்களை, பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.கட்சி பெயர், சின்னம் ஆகியவற்றை உருவாக்கும் பணியும், ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.
ரஜினி, முழு வீச்சாக அரசியல் கட்சி துவங்க, நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், திரை உலகில் அவருக்கு போட்டியாளரான கமல், அரசியலிலும் போட்டியாளராக கள மிறங்க உள்ளார்.அவர், பிப்., 21ல், புதியகட்சி துவக்கி, தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக, நேற்று முன்தினம் அறிவித்தார்.
பிரபல நடிகர்கள் இருவரும், அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்திலும், திரையுலக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி, அரசியலுக்கு வரப் போவதாகஅறிவிக்கும் முன், கமல், அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, தான் அரசியலுக்கு வரப் போவதை உணர்த்தினார். அவர், அரசியல் பிரவேசத்தை அறிவிப்பதற்கு முன், ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். அதே வேகத்தில், கமலுக்கு முன், புதிய கட்சியை ரஜினி துவக்குவாரா என்ற எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், நேற்று சென்னையில், ‘அனிமேஷன்’தொழில்நுட்பத்தில் உருவாகும், கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு பட ஆரம்ப விழா நடந்தது. இவ்விழாவில், புதிய கட்சி தொடங்க உள்ள, நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்றனர்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக, நடிகர் ரஜினி, தன் வீட்டில் இருந்து புறப்பட்டபோது, நிருபர்களை சந்தித்த போது, ”எம்.ஜி.ஆரின் கொள்கைகளை, அ.தி.மு.க.,வினர் ஓரளவு பின்பற்றுகின்றனர். அரசியலில், கமலுடன் இணைந்து செயல்படுவது குறித்து, காலம் தான் பதில் சொல்லும். தற்போதைய சூழலில், ஆறு மாதத்தில் தேர்தல் வந்தாலும், சந்திக்க தயாராக உள்ளேன்,” என்றார். அவருடைய அறிவிப்பு, நேற்று முதல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும், பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.(15)




