காணாமல்போனோரை தேடிக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுவாமிநாதன்
வடக்கில் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதாக முறையிடும் தாய்மாரின் முறைப்பாட்டுக்கு செவிகொடுத்து அப்பிள்ளைகளை தேடிக்கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என நேற்று சபையில் வலியுறுத்திய, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு நீதித்துறையில் பொறிமுறையொன்றை உருவாக்கவேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக் கோவை (விஷேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட வரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கும் சட்டமூல விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்தார்.அமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு இச்சட்டமூலம் 2 வருடங்களுக்கு நீடிப்பதை ஆதரிக்கிறோம்.இதனால் பொலிஸாரின் முறைப்பாடுகளையும் ஆராய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
வடக்கில் பெண்கள் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதாக நீதிமன்றுகளில் முறையிடுகின்றனர்,வழக்கு தொடர்கின்றனர். எனவே, இது தொடர்பில் பொலிஸார் ஆராய வேண்டும்.எமது நாட்டு நீதிமன்றங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் பல வருடங்களாக தேங்கிக் கிடக்கின்றன.
சில வழக்குகள் 25-–30 வருடங்களுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. சட்டத்தரணிகள் சில வழக்குகளில் கால அவகாசம் கோருவதாலும் நாட்கள் செல்கின்றன. ஒருசில வழக்குகளை விசாரிப்பதற்கு உண்மையிலேய காலம் தேவைப்படுகின்றன.
ஆனால், பெரும்பாலான வழக்குகள் தேங்கி கிடக்கின்றன.இந்தியா சிங்கப்பூரிலும் இதே நிலைமை தான் காணப்படுகிறது. எனவே இதனை தீர்ப்பதற்கு நீதித்துறையில் பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும். இன்று நாட்டில் கடத்தல்கள் கொலைகள் அதிகரித்துள்ளன.போதைபொருள் பாவனை பாடசாலைகளுக்குள்ளும் புகுந்துவிட்டது. அப்பாவனையும் அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.இதற்கு இச்சட்டம் அவசியமாகும் என்றார்.




