செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலையை புரிந்து கொள்வார்களா….?

நரேன்-

தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்கு பலத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் உள ரீதியாகவும், மனிதாபிமானமாகவும் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுடன் மைத்தி – ரணில் கூட்டரசாங்கம் உருவாகியது. இந்த கூட்டராங்கம் தமிழ் மக்களுக்கு ஒரளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது. போர் முடிந்த நிலையிலும் கடந்த மஹிந்த அரசாங்கம் வெற்றி வாதத்தில் மிதந்ததுடன் தமிழ் தேசிய இனத்தை அடக்கி ஒடுக்குவதிலேயே கவனம் செலுத்தினார். இதன் விளைவாகவே அவர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகியிருந்தது. ஆனால் தமிழ் மக்கள் எதிர்பார்ப்புடன் உருவாக்கிய தற்போதைய நல்லாட்சி எனக் கூறப்படும் இந்த அரசாங்கம் கூட மக்களது மனநிலைகைளை புரிந்து கொள்ளாத நிலையே தொடர்கிறது.

நல்லாட்சி எனப்படும் இந்த அரசாங்கம் மீதும் அதிருப்தி அடைந்த தமிழ் மக்கள் தமது உரிமைக்காகவும், நீதிக்காகவும் தாமாகவே வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டனர். அந்த மக்களை வழிநடத்தி அவர்களது கோரிக்கைகளுக்கு வலுச் சேர்த்து அதனை அடைவதற்கு காத்திரமாக பங்காற்ற வேண்டிய கூட்டமைப்பு தலைமை கூட இந்த விடயத்தில் காத்திரமாக செயற்படவில்லை. இதனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிடைத்திருக்கின்ற ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி தன்னிச்சையான மக்கள் போராட்டங்கள் உருவாகியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன…?, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு என வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மருதங்கேணி என இன்று ஓரு வருடத்தை கடந்த நிலையிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வீதியோரத்தில் தற்காலிக கொட்டகை அமைத்து போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் இரவு, பகல், மழை, வெயில் என பாராது கடந்த ஓரு வருட காலமாக அந்த கொட்டகைகளிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாகன இரைச்சல்கள், வீட்டில் உள்ள ஏனைய உறவுகளையும் பிரிந்து போராட்ட களத்தில் இருக்கின்றமை, நீதி கிடைக்குமா என்ற ஏக்கம், அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகள், காலநிலைத் தாக்கம், சூழல் பாதிப்புக்கள் என்பவற்றால் நாளாந்தம் அந்த மக்கள் உடல், உள ரீதியாக பாதிப்படைந்து, மிகவும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 12 மாதங்களில் இத்தகைய போராட்ட களத்தில் இருந்த 5 பேர் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே மரணமடைந்த சம்பவம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மத்தியில் துன்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொழும்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ரொஷான் லியோன் (மகன்) மற்றும் அமலன் லியோன் (கணவர்) ஆகியோரைத் தொடர்ந்து தேடிவந்த ஜெசிந்தா பீரீஸ் என்பவர் சில மாதங்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஜெசிந்தா பீரிஸ் என்பவர் தனது கணவனும், மகனும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், நீதி கோரி பல வருடங்களாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். கொழும்பில் கடற்படையின் இரகசிய முகாமில் கண்டெடுக்கப்பட்ட 12 அடையாள அட்டைகள் தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. வழக்கு விசாரணைகளிலும் ஜெசிந்தா பீரிஸ் பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன தனது மகனைத் தேடி வந்த முன்னாள் போராளி வீமனின் தாயார் ஈஸ்வரன் ருத்ராதேவி மாரடைப்பு காரணமாக 6 மாதங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். இதேபோல் தனது கணவர் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் போராட்டத்தை ஆரம்பித்த துரைசிங்கம் ஈஸ்வரி, காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையைத் தேடிவந்த மகேந்திரராஜா, தனது பிள்ளையைத் தேடி போராட்டத்தை ஆரம்பித்திருந்த கீர்த்தனா உள்ளிட்ட ஐவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமது உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா அல்லது இல்லையா? என்பதை அறியாமலேயே அவர்களின் உயிர்கள் பிரிந்துள்ளமை பெருந்துயரமான சம்பவமாகும். காணாமல் ஆக்ப்பட்ட இவர்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவித்திருந்தால்கூட அவர்களின் ஆத்மா சாந்தியடைந்திருக்கக்கூடும் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அழுத்தம் காரணமாக கொண்டுவரப்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முக்கியமான விடயங்களை கையாள்வதற்கான எத்தகைய சட்ட அதிகாரமும் வழங்கப்படவில்லை. மேலும் தற்போது பாராளுமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலமும் கூட இனிமேல் நடைபெறுவதை தடுக்கும் வகையிலேயே அமைந்துள்ளதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில் இந்த அலுவலகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய நிவாரணத்தை வழங்கப் போகிறது என்ற கேள்வி ஜனநாயக சக்திகளிடமும், மனிதவுரிமை செயற்பாட்டாளர்களிடமும், மேலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

இப் போராட்ட களத்தில் உள்ள தாய்மாரில் அதிகமானவர்கள் வயது முதிர்ந்தவர்கள். அவர்களது உடல் தொடர் போராட்டத்தால் இன்னும் மோசமடைந்து வருகின்றது. காணாமல் போனோர் அலுவலகமும் போட்ட களத்தில் உள்ள தாய்மாருக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. தாய்மாரினதும் பாதிக்கப்பட்ட மக்களின் இத்தகைய போராட்டங்களை முடித்து வைக்கும் வகையில் அரசாங்கம் இதய சுத்தியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதாக தெரியவில்லை. இத்தகைய போராட்ட களத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவாக புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களும் அந்த அந்த நாட்டு அரசாங்கம் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அழுத்தம் கொடுக்கும் வகையில் செயற்பட முன்வரவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்திற்காக மட்டும் போராட்டங்களை முன்னெடுக்காது இத்தகைய போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தி அழுத்தம் கொடுப்பதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியும்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நீதி கோரி போராடும் நிலையில் அந்த நீதி கிடைக்காமலேயே இறந்து கொண்டிருக்கின்றார்கள். இன்னும் பலர் தினமும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனை அரசாங்கம் கண்டுகொண்டதாக தெரியவில்லை. வாக்குறுதிகளும், கால இழுத்தடிப்புக்களும் மட்டுமே வழங்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட அந்த மக்களது வாக்குகளைப் பெற்ற தலைமைகளும் காத்திரமாக செயற்படவில்லை. இதனால் போராட்ட களத்தில் உள்ள அந்த மக்களின் நிலை மோசமடைந்து செல்கின்றது. இந்த மக்களது போராட்டத்திற்கு நீதி கிடைக்க மக்கள் மயப்படுத்தப்பட்ட வெகுஜனப் போராட்டங்களை கட்டமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சிறுபான்மை சமூகம் தொடர்பிலும், உலக சமாதானம், பாதுகாப்பு, நீதி தொடர்பிலும் கவனம் செலுத்தும் ஐ.நாவும் இந்த மக்கள் தொடர்பில் கரிசனை செலுத்த முன்வரவேண்டும். அதன் மூலமே இறந்து கொண்டிருக்கும் அந்த தாய்மாரின் ஆத்மாக்களுக்கு குறைந்தபட்சம் ஆறுதலையாவது வழங்க முடியும்.

N5

Related News