செய்திகள்

கட்டங்களில் கருதவேண்டிய காற்று முகாமைத்துவம்

மருத்துவர் : சி. யமுனாநந்தா

இயற்கையோடு வாழ்ந்த மனிதன் நாகரீக முன்னேற்றத்தாலும், சனத்தொகை மிகுதியாலும் நெருக்கமாகக் கட்டடங்களை அமைத்து அதற்குள் தனது வாழ்க்கையினைத் திணித்துக் கொண்டுள்ளான். தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் தேவைகளும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் பௌதீகச் சூழலானது மனிதனின் ஆரோக்கியத்தை பாதிக்காது பாதுகாத்தல் அவசியமாகின்றது.

முன்னைய காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் இயற்கையோடு இணைந்ததாகவே அமைக்கப்பட்டன. உதாரணமாக நாற்சார் வீடுகள், திண்ணை வீடுகள் சிறந்த காற்றோட்டம் உள்ளனவாகவே அமைந்தன. ஆனால் இன்றைய காலத்தில் கட்டடங்கள் காற்றோட்ட வசதி குறைந்ததாக அமைக்கப்பட்டு, குளிரூட்டிகள் பொருத்தப்படுகின்றன.

கட்டடங்களுக்கு குளிரூட்டிகள் பொருத்தும்போது கட்டடத்தின் குறித்த பகுதி குளிராகவும், வெளிப்பகுதி வெப்பமாகவும் உள்ளது. பொது இடங்களில் கட்டடங்களுக்கு குளிரூட்டல் வசதி செய்யும்போது குறிப்பாக உயர் அதிகாரிகள், அலுவலகங்கள் என்பன குளிரூட்டல் வசதி பெறும்பொழுது அங்கு செல்வோர் குளிரூட்டிகளில் இருந்து வெளியேறும் வெப்பக் காற்றினுள்ளேயே தமது சுவாசத்தை மேற்கொள்ள வேண்டும். வெப்பமும் காற்றை மாசடையச் செய்கின்றது.

பல கட்டடங்களில் திட்டமிடாதமுறையில் பொறியியலாளர்களால் குளிரூட்டிகளைப் பொருத்துவதால் பொதுமக்களுக்கான காற்றுவெளி வெப்பமடைவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

பொதுவிடங்களில் உள்ள காற்றுவெளியின் அசௌகரியங்கள், கட்டடங்களின் காற்று முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை எமக்கு எடுத்து இயம்புகின்றன. சிறந்த காற்று முகாமைத்துவம் சூழலைப் பாதிக்காது, பணவிரயம் ஏற்படாது, நோய் தொற்று ஏற்படாது.

காற்றோட்டமான கட்டடங்கள், மரங்கள் நிறைந்த பின்னணி இயற்கையாகவே குளிர்ச்சியினைத்தரும். ஒரு பாரிய கட்டடம் அமையின் அதனைச்சூழவுள்ள குறித்த பிரதேசத்தில் ஏனைய கட்டடங்கள் அமைத்தல் ஆகாது. சேரிக் குடியிருப்புக்கள்போல் ஒரு கட்டடத்தின் நிழலில் இன்னொரு கட்டடத்தை நிறுவி, அதன் நிழலில் இன்னும் சிறிய கட்டடங்களைக் கட்டுவது தவறு. இது பெட்டிக்கடைகள் கட்டுவதுபோல் உள்ளது. இவற்றை நோக்கும் எமது எதிர்காலச் சந்ததியினர் எமது சூழல் பிரக்ஞை இன்மைபற்றி வேதனைப்படுவர்.

காற்றால் பரவும் நோய்கள் நெருக்கமான காற்றுவெளியின் முகாமைத்துவம் இல்லாத கட்டடங்களால் அதிகரிக்கும். குறிப்பாக வைத்தியசாலைகள் பலமாடிக் கட்டடங்களைக் கட்டி, அவை அனைத்துக்கும் ஒரேயொரு பாதையினைப் பயன்படுத்துதல், நோய் தொற்றுவதற்கும், நோய் விரைவாகப் பரவுவதற்கும் ஏதுவாகும்.

அடுத்து குளிரூட்டிகளில் இருந்து வெளியேறும் வெப்பக்காற்று சுவாசப்பாதையில் அலர்ச்சியினை ஏற்படுத்தி, சுவாசத் தொற்றினை ஏற்படுத்தும். வைத்தியசாலைகளில் நோயாளிகளும், பார்வையாளர்களும் பயன்படுத்துவதற்குப் பல பாதைகள் அமைத்தால் நோய்த் தொற்றுக்களை இயற்கையாகவே தவிர்க்கலாம். அன்றேல் வேகமான கிருமித் தொற்றலுக்கான இடமாக அவை அமையலாம்.

மிதமான காலநிலையில் இதமான இயற்கைக் காற்றோடுகூடிய கட்டடங்களே சாலச்சிறந்தன. உன்னைப்போல் உன் அயலவனையும் நேசி என்பது காற்று முகாமைத்துவத்தில் கருதப்படவேண்டிய முக்கிய கரிசனையாகும்.