செய்திகள்

குண்டு வெடிப்புக்கள் ஏற்படுத்திய செவிவடு கேட்டற் பாதிப்பும் சமநிலைப் பாதிப்பும்

டாக்டர். சி. யமுனானந்தா

2008-2009 இல் வன்னிப் பெருநிலப்பரப்பில் மக்கள் குடியிருப்புக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான எறிகணைத்தாக்குதல்கள், விமானக் குண்டுத் தாக்குதல்கள், கடற்படை ஏவுகணைத் தாக்குதல்கள் சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களிடையே பாரிய செவிவடுவினை ஏற்படுத்தி உள்ளது.

செவிவடுவானது ஒருவரின் கேட்டல் திறனையும் அவரது சமநிலை நிற்றலையும் வெகுவாகப் பாதிக்கின்றது.

குண்டுத்தாக்குதல்களுக்கு அண்மையில் நிற்போரில் 50% ஆனோருக்கு செவிப்பறை மென்சவ்வு பாதிக்கும் தன்மை ஏற்படும். மேலும் உட்செவியில் 2000HZ – தொடக்கம் 8000HZ வரையிலான அதிர்வுகளை உணரும் தன்மை அழிக்கப்படும். குண்டு வெடிப்புத் தாக்கங்களுக்கு முகம் கொடுப்போரில் 35-54% ஆனோருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளது. குண்டுவெடிப்புக்களினால் ஏற்பட்ட செவிவடு பற்றிய விழிப்பணர்வு எமது சமூகத்திற்கு அவசியம். கடந்த காலத்தில் தமக்கு அண்மையில் குண்டுவெடிப்பு தாக்கங்களை அனுபவித்தவர்கள், தமது செவிப்புலனைப் பரிசோதிப்பதாலும் சமநிலைத்தன்மையில் பாதிப்பு ஏற்படாத நிலையை அதாவது தலைச்சுற்று, மயக்கம் போன்ற அறிகுறிகளை ஆராய்வதாலும் தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் காதின் கேட்டற்திறனை சிறப்பு நிபுணத்துவ மருத்துவர் மூலம் பரிசோதித்து தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அறிந்து கொள்ளலாம். பொதுவாக குண்டுவெடிப்பு சம்பவங்களில் அருகில் இருப்போரில் 40-60% ஆனோருக்கு கேட்டற்புலன் குறைவடையும். 10-30மூ ஆனோருக்கு செவிப்பறை மென்சவ்வு சிதைவடையும். 15-25% ஆனோருக்கு தாங்கமுடியாத காதுவலி ஏற்படும். மயக்ககுணம் 10-20% ஆனோருக்கு ஏற்படும். தலைச்சுற்று 30-60% ஆனோருக்கு ஏற்படும்.

எனவே எமது சமூகத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழலில் பெருமளவான மக்கள் செவிப்புலன் பாதிப்புக்கு உட்பட்ட தன்மையை நாம் உணர வேண்டும். குறிப்பாக செவிப்புலன் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவர்களிற்கு தமது மனைவி, பிள்ளைகளின் குரல்கள் பெரிய சத்தமாகவே கேட்கும். இது குடும்ப உறவுகளில் பாதிப்பையும், மதுபாவனை, துஷ்பிரயோகத்திற்கும் ஏதுவாக அமைகின்றது. மேலும் ஞானேந்திரியமான செவிப்புலனின் பாதிப்பு ஆத்மாவின் ஆன்ம ஈடேற்றத்திற்கும் தடையாக அமையும். இதனால் குரூர மனிதர்கள் பலர் உருவாக்கப்படுவர்.

எனவே கடந்த காலங்களில் குண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட மருத்துவப்பரிசோதனைகள் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சமூக உதவியினையும் மருத்துவ உதவிகளையும் நல்க நலன் பேணும் அமைப்புக்கள் முயல வேண்டும்.