கூட்டமைப்பின் தலைமையைப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்: ‘விக்கி’க்கு ‘கஜன்’ அழைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைமையை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பொறுப்பேற்கவேண்டும் அல்லது கட்சியை விட்டு விலகி எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்றபோது அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண முதலமைச்சர் ஆரம்பத்தில் அரசியலுக்கு வந்தபோது ஒரு கருத்தையும் தற்போது வேறு ஒரு கருத்தையும் கூறி வருகிறார். குறிப்பாக வடமாகாண சபையில் இன அழிப்பு பிரேரணையும் மற்றுமொரு இடத்தில் இரு தேசம் ஒரு நாடு என்ற எமது நிலைப்பாட்டில் தற்போதைய கருத்தும் உள்ளது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணி கடந்த 5 வருடங்களாக பொறுப்புக்கூறல் மற்றும் இனஅழிப்புக்கு உரிய விசாரணை யுத்த காலத்தில் மட்டுமன்றி 1948 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரைக்கும் நடந்து கொண்டிருக்கும் விடயங்கள் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று கோரிவருகின்றது. இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இரு தேசம் ஒருநாடு என்ற கோட்பாட்டில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி செயல்பட்டுவந்தது. இதே கருத்தை முதலமைச்சர் தற்போது கூறியுள்ளார்.
அண்மைக்காலமாக முதலமைச்சர் கூறிய கருத்துக்களை வரவேற்கின்றோம். இதனை பகிரங்கமாகவே வரவேற்கின்றோம் ஏனெனில் இதனை நாம் 5 வருடங்களாக கூறிவந்திருக்கின்றோம். நங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியமைக்கான காரணமே தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைமைகள் மேற்குறிப்பிட்ட விடயங்களில் செயற்பட தயாராக இல்லா மையேயாகும் ஆகவே கூட்டமைப்பில் இருந்தது விலகி தனியாக செயற்பட்டிருக்கின்றோம்.
முதலமைச்சர் 2013 ஆண்டு காலத்தில் அரசியலிற்குள் நுழைகிறார். அந்த காலம் முதல் அவருடைய கருத்து வேறாகவே இருந்துள்ளது. மிக அண்மைக்காலமாக வித்தியாசமான குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் கூறுகின்ற கருத்துக்களை விட வித்தியாசமான கருத்துக்களை கூறிவருகின்றார்.
இது மனமாற்றமாக இருக்கலாம். அரசியலில் அனுபவமில்லாத நபர் சட்டரீதியாக அனுபவம் வாய்ந்தவர் அரசியல் அனுபவம் பெற்று பல விடயங்களில் அனுபவம் பெற்றபிற்பாடு அவருடைய கருத்துகளில் மாற்றம் ஏற்பட்டதாக இருக்கலாம்.
அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய செயற்பாடுகள் கடந்த காலங்களில் விசேடமாக ஜனாதிபதி தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு அதன்பின் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தில் கலந்து கொண்டது போன்றவை தமிழ் தேசத்தினுடைய நலன்களை முற்றாக உதாசீனம் செய்யும் வகையில் இருந்தமையால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மேலும் இன்னும் சிறிது காலத்தில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் இக்கருத்து கூறப்பட்டுள்ளது. நாங்கள் முதலமைச்சர் மாகாணசபையில் இன அழிப்பு தீர்மானத்தை நிறைவேற்றிய போது முதலாவதாக அதனை வரவேற்றோம். இதனை பகிரங்கமாக கூறியுமுள்ளோம். மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் இருக்கின்ற கட்சியின் தலைமை இந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு நேர் எதிராக செயற்பட்டு வருகின்றது.
அந்த தீர்மானத்தில் கடைசி பந்தியில் கூறப்பட்டு இருப்பது மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தையோ, மைத்திரிபால அரசாங்கத்தையோ அல்லது சிங்கள தேசத்தால் நியமிக்கப்படுகின்ற அரசாங்கத்தையோ நம்ப முடியாது. இதுவே முதலமைச்சரின் பிரேரணையின் சாராம்சமாகும். இதற்காகவே முழுமையாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நியாயத்தை எடுத்து காட்டியுள்ளது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 6 நாட்களுக்கு முன்பதாக கட்சி தலைவரும் தலைவருக்கு நெருங்கி செயற்படும் தேசியப்பட்டியல் எம்.பி.யும் சுதந்திர தினத்தில் கலந்துகொண்டபின்னர் அதனை ஒரு எம்.பி. 43 வருடகாலமாக கடைப்பிடித்த ஒரு செயல்பாட்டை மீறி நியாயப் படுத்துகிறார். எங்களுக்கு இந்த அரசாங்கத்தில் முழுமையான நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறியுள்ளார். அவ்வாறு என்றால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் வடமாகாண சபையில் நிறைவேற்றிய இன அழிப்பு தீர்மானத்திற்கு நேர் எதிராக செயற்படுகிறார்கள் என்றால் இது தேர்தல் நாடகம் இல்லை என்று நிரூபிப்பதற்கு முதலமைச்சர் இரண்டில் ஒன்று செய்யவேண்டும்.
ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை நீக்கி முதலமைச்சர் கட்சி தலை மையை பொறுப்பேற்க வேண்டும் அல்லது அவருடைய சிந்தனையில் இருக்கின்ற நபர்கள் கட்சித் தலைமையில் இருக்கவேண்டும். அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி இந்த கொள்கையை முன்னிலைப்படுத்தி தனித்துவமாக செயற்பட வேண்டும்.
தனித்துவமாக செய்யப்படும் பட்சத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இணைந்து செயற்பட தயாராகவே இருக்கின்றது. இதனை செய்யாது வெறுமனே கருத்துக்களை தெரிவிப்பது எம்மைப் பொறுத்தவரையில் உண்மையான தேசிய உணர்வுகளுடன் இருக்கக் கூடிய பெரும்பான்மையான மக்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் சேராது அவர்களை தடுத்து கூட்டமைப்புக்குள்ளும் இந்த கருத்து இருக்கின்றது எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறி வாக்குகளை பெற்று நேர் எதிராக செயற்படும் தலைமைக்கு வழங்குவதாகவே இது பார்க்கப்படும்.
அப்படித்தான் இருப்பது என்றால் இத்தகைய செயற்பாடு அனைத்தும் அயோக்கியத்தனமானதாக இருக்கும். இதை தவிர்த்து முதலமைச்சர் நேர்மையாக செயற்படுவதாக இருந்தால் கட்சி தலைமையை பொறுப் பெடுக்கவேண்டும் அல்லது அதே நிலைப்பாட்டில் இருக்கும் தலைமையை இணைத்து கட்சி தலைமையை எடுக்க வேண்டும் அல்லது கட்சியில் இருந்து வெளியேறி எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.




