கிழக்கு மாகாணத்திலும் மீள்குடியேற்றம் பூர்த்தியடையவில்லை: நேரில் பார்வையிட்ட சுரேஷ்
கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் முடிவடைந்து விட்டது என்று முன்னைய அரசாங்கம் சர்வதேசத்திற்குச் சொன்னது பச்சைப் பொய். போரினால் இடம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு இதுவரை எதுவுமே வழங்கப்படவில்லை என்பது இங்கு நேரில் வந்துபார்த்தபோதுதான் தெரியவந்தது. எனவே தமிழ் மக்கள் வாக்களித்து வந்த ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் விரைவாக இப்பிரச்சினைக்குத்தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட எம்.பி. யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்செய்து வளத்தாப்பிட்டியில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட எம்பி சுரேஷ்பிரேமச்சந்திரன் வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்திஆனந்தன் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர். அதன்போது 4ஆம் கொலனி வளத்தாப்பிட்டி தம்பிலுவில் போன்ற கிராமங்களுக்கும் விஜயம் செய்தனர். அவர்களை முன்னாள் எம்.பி. குணசேகரம் சங்கர் வரவேற்று அப்பகுதிகளைக்காண்பித்தார்.
வளத்தாப்பிட்டி பளவெளிக்கிராம சிவன்கோவில் முன்றலில் மக்கள் தலைவர் த.துரைசிங்கம் தலைமையில் கூட்டமொன்று கொட்டும் மழைக்கு மத்தியில் நடைபெற்றது. முன்னதாக சிவன் ஆலயத்தில் பிரதமகுரு சிவஸ்ரீ பரமலிங்கம் குருக்கள் விசேட பூஜையை நடத்திவைத்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
“வடக்கில் மட்டும்தான் மீள்குடியேற்றம் நடக்கவில்லை. மாறாக கிழக்கில் மீள்குடியேற்றம் முடிவடைந்துவிட்டது என்ற தவறானசெய்தி சர்வதேசமெங்கும் திட்மிட்டு முன்னைய அரசாங்கத்தால் பரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு நேரடியாக விஜயம் செய்து பார்த்தபோதுதான் தெரியவந்தது கிழக்கில் பல தமிழ்க்கிராமங்களில் இன்னும்மீள்குடியேற்றம் நடக்காமலுள்ளது. பாதி குடியேறிய பல கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் மீண்டும் அவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
நாம் எல்லைக்கிராம மக்களின் நலன்களை கவனிக்கவேண்டிய கடமைப்பாடுள்ளவர்களாகவுள்ளோம். எனவே அவை தொடர்பான தரவுகளைச் சேகரித்து முழுமையான அறிக்கைகளை தந்தால் நாம் உள்ளூரிலோ வெளிநாடுகளிலோ அரசாங்கத்துடனோ நிறுவனங்களுடனோ பேசும்போது அதற்கான உதவிகளைப் பெற்றுத்தரமுடியும். பிரதேச செயலாளர் அல்லது கிராம சேவையாளரூடாக சரியான தகவல்களைப்பெறலாமென்று நாம் நம்பவில்லை.
இங்கு பலதரப்பட்ட பிரச்சினைகளை நேரடியாகக்கண்ணுற்றோம். நானும் சிவசக்தி ஆனந்தன் எம்.பி.யும் இவற்றைக்கண்டு அதிர்ச்சியடைந்தோம். இங்கு நிலம் சூறையாடப்பட்டிருக்கிறது. தொல்பொருள் புதைபொருள் என்று கூறி மக்களது காணிகளுக்கு எல்லைக்கற்கள் போடப்பட்டுள்ளன. இங்கும் அதைக்காண்கின்றோம்.
தமிழ்மக்களாகிய நாம் என்றுமில்லாதவாறு இந்த ஜனாதிபதியையும் புதிய அரசாங்கத்தையும் ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள் எனவே எமது பிரச்சினைகளை உரிமையோடு எடுத்துச்சொல்ல எமக்கு அருகதைஉண்டு. அவர்களுக்கு அவற்றை தீர்த்துவைக்கவேண்டிய கடப்பாடும் உண்டு. எமது பிரச்சினைகளை புதிய அரசாங்கத்திடம் தெரிவிப்போம். அவற்றைத் தீர்த்துவைப்பார்களென்று நம்புவோம்.
துரதிர்ஷ்டவசமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் தெரிவான தமிழ் எம்.பி. அரசுடன் இணைந்து தன்னை வளர்த்துக்கொண்டார். எந்த மக்கள் எதற்காக வாக்களித்தனரோ அதனைச் செய்யாமல் தன்னை வளர்த்துக்கொண்டார். அப்படிப்பட்டவர்களை எதிர்காலத்தில் தெரிவுசெய்யாமல் மக்களுடன் நிற்கக்கூடிய தலைவர்களை இனங்கண்டு பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள். அதனூடாக தங்களுடைய பிரச்சினைகளைதீர்க்கமுடியும்.
வடக்கிலிருந்து நாம் இருவரும் நேரடியாக வந்து உங்களுடைய பிரச்சினைகளை தேவை களை நேரில் கண்டறியவேண்டும் என்பதற்காக நேற்று திருகோணமலைக்கும் அம் பாறைக்கும் நாளை மட்டக்களப்பிற்கும் விஜயம் செய்கின்றோம். வடக்கு மட்டுமல்ல கிழக்கு வாழ் மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினை களையும் நேரடியாக கண்ணுற்று சர்வதேசத் திற்கு வெளிக்கொணர்வதே எமது நோக் கமாகும். உலகிற்கு வெளிக்கொணர்வோம். எனவே உங்களது பிரச்சினைகளை தரவுகள் ரீதியாக எமக்குத்தரவேண்டும். என்றார்.




